பெர்சவரென்ஸ் ரோவர்: செவ்வாயில் இரு பாறை மாதிரிகள் சேகரிப்பு – விஞ்ஞானிகள் கூறுவதென்ன?

கடந்த செப்டம்பர் 6ஆம் தேதி நாசாவின் பெர்சவரன்ஸ் ரோவர் தன் முதல் பாறை மாதிரிகளைச் சேகரித்தது. அடுத்த சில நாட்களில் மீண்டும் இரண்டாவது முறையாக பாறை மாதிரிகளைச் சேகரித்தது.

இலக்கு வைக்கப்பட்டிருக்கும் பாறை மாதிரிகள் எரிமலை குழம்புகளால் தோன்றியதாக இருக்கலாம் என்றும், எனவே அதை துல்லியமாக கணக்கிட முடியும் என விஞ்ஞானிகள் நம்புகின்றனர். பாறை மாதிரிகளில் உப்பு இருக்கலாம் என்றும், உப்பு இருந்தால் அங்கு நீர் மாற்றங்கள் ஏற்பட்டிருக்கலாம் என்றும், உயிரினங்களும் வாழ்ந்திருக்கலாம் என்றும் கருதப்படுகிறது.

செவ்வாய் கிரகத்தில் ஜெசெரோ க்ரேடர் என்கிற குறிப்பிட்ட பகுதிக்கு பெர்சவரன்ஸ் ரோவர் அனுப்பப்பட்டது. காரணம் அங்கு 100 கோடி ஆண்டுகளுக்கு முன் உயிரினங்கள் வாழ்வதற்கான சூழல் இருந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது. அந்த 45 கிலோமீட்டர் அகண்ட குழி போன்ற அமைப்பில் ஏரி இருந்திருக்கலாம் என செயற்கைக் கோள் படங்கள் கூறுகின்றன. ஜெசரோ க்ரேடருக்கு மேற்குப் பக்கம் ஆறுகளும் டெல்டா படிமங்களும் இருந்திருக்கலாம் என்றும் கருதப்படுகிறது.

ரோவர் சேகரித்திருக்கும் பாறை மாதிரிகளை வைத்து நீர் நிலை சூழல்கள் எப்போது இருந்தன என குறிப்பிட்டு ஒரு காலத்தை வரையறுக்க முடியும். ராஷெட் என்கிற திட்டிலிருந்து எடுக்கப்பட்ட பாறை மாதிரிகள், ஜெசெரோ க்ரேட்டிலேயே மிகவும் பழைய பாறைப் படிமங்களாக இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அந்த பாறைகளில் கால்சியம் சல்ஃபேட் அல்லது கால்சியம் பாஸ்பேட் போன்றவை இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பொதுவாக பூமியில் உப்பு போன்ற தாதுப் பொருட்கள் உயிரினங்கள் வாழ்ந்த தடயங்களை பாதுகாப்பவை. அது செவ்வாய் கிரகத்துக்கும் பொருந்தும் என எதிர்பார்ப்பதாக பெர்சவரன்ஸ் திட்டத்தின் துணை விஞ்ஞானி முனைவர் கேடி ஸ்டேக் மார்கன் கூறியுள்ளார்.

- Advertisment -

Latest