'இந்தியன் பிரிமீயர் ‘லீக்’ என்று அழைக்கப்படும் ஐ.பி.எல். டி-20 கிரிக்கெட் போட்டி 2008-ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. இதில் பங்கேற்கும் வீரர்கள் ஏலம் முறையில் எடுக்கப்பட்டதும் பல நாட்டு வீரர்கள் ஒரு அணியில் இணைந்து ஆடியதும் இந்தப் போட்டியில் புது விஷயம் என்பதால் ரசிகர்கள் மத்தியில் ஐ பி எல்-லுக்கு அமோக வரவேற்பு இருந்தது. அதிலும் கோடிக்கணக்கில் பணம் புரண்டதால் இந்தப்போட்டி வர்த்தக ரீதியாக நடத்தப்பட்டது. அதே நேரத்தில் ரசிகர்களுக்கு நல்ல பொழுது போக்காகவும் அமைந்தது.

ஆரம்பத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ், டெக்கான் சார்ஜர்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், கிங்ஸ் லெவன் பஞ்சாப், டெல்லி டேர்டெவில்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஆகிய 8 அணிகள் கலந்து கொண்டன. 2008-ம் ஆண்டு நடந்த முதல் ஐ.பி.எல். போட்டியில் வார்னே தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணி சாம்பியன் பட்டம் பெற்றது. பின்னர் பாராளுமன்ற தேர்தல் காரணமாக 2009-ம் ஆண்டு போட்டி இந்தியாவில் இருந்து தென்னாப்பிரிக்காவுக்கு மாற்றப்பட்டது. இதில் கில்கிறிஸ்ட் தலைமையிலான டெக்கான் சார்ஜர்ஸ் அணியும், 2010-ம் ஆண்டு டோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்சும் சாம்பியன் பட்டம் பெற்றன. 4-வது போட்டியில் கூடுதலாக புனே வாரியர்ஸ், கொச்சி டஸ்கர்ஸ் ஆகிய 2 புதுமுக அணிகள் பங்கேற்றன. 10 அணிகள் பங்கேற்ற இந்த போட்டியிலும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியே சாம்பியன் பட்டம் பெற்று தொடர்ந்து 2-வது முறையாக ஐ.பி.எல். கோப்பையை வென்றது.

5-வது ஐ.பி.எல். போட்டியில் 9 அணிகள் விளையாடின. விதிமுறை மீறி செயல்பட்டதால் கொச்சி டஸ்கர்ஸ் அணி நீக்கப்பட்டது. இதில் காம்பீர் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி கோப்பையை வென்றது. 2013-ல் நடந்த 6-வது போட்டியில் டெக்கான் சார்ஜர்ஸ் அணி நீக்கப்பட்டதால் சன்ரைசர்ஸ் அணி விளையாடியது. இதில் மும்பை இந்தியன்ஸ் கோப்பையை வென்றது. அந்த போட்டியோடு புனே வாரியர்ஸ் அணி கலைக்கப்பட்டது. 7-வது ஐ.பி.எல். ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் இந்தியாவில் போட்டி நடந்தது. 8 அணிகள் பங்கேற்ற இந்தப்போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 2-வது முறையாக கோப்பையை வென்றது. 2015-ம் ஆண்டு நடந்த ஐ.பி.எல். போட்டியில் மும்பை இந்தியன்ஸ் சாம்பியன் பட்டம் பெற்றது. 2-வது முறையாக கோப்பையை வென்றது.

இதனிடையே கடந்த ஆண்டு ஸ்பாட்பிக்சிங் சூதாட்டத்தில் ஈடுபட்டதற்காக சென்னை சூப்பர் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் ஆகிய அணிகளுக்கு 2 ஆண்டு தடை விதிக்கப்பட்டது. அவற்றுக்கு பதிலாக ரைசிங் புனே சூப்பர் ஜெய்ன்ட்ஸ், குஜராத் லயன்ஸ் ஆகிய 2 அணிகள் 2 ஆண்டுக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டன. கடந்த ஆண்டு (2016) நடந்த போட்டியில் வார்னர் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஐதராபாத் கோப்பையை வென்றது.

இந்நிலையில் 10-வது ஐ.பி.எல் கிரிக்கெட் திருவிழா இன்று - ஏப்.5 ஆம் தேதி தொடங்கி மே 21ம் தேதி வரை 41 நாட்கள் நடைபெறுகிறது. 8 அணிகள் பங்கேற்கும் இந்தப்போட்டிகளில் ஒவ்வொரு அணியும் 14 ஆட்டங்களில் விளையாடுகிறது. ‘லீக்’ முடிவில் முதல் 4 இடங்களைப் பிடிக்கும் அணிகள் ‘பிளேஆப்’ சுற்றுக்கு முன்னேறும்.இன்றைய முதல் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் சன் ரைசர்ஸ் ஐதராபாத்-ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் விளையாடுகின்றன.

இந்த தொடரில் விளையாடும் டெல்லி டேர்டேவிஸ் அணிக்கு ஜாகிர்கான், குஜராத் லயன் அணிக்கு சுரேஷ் ரெய்னா, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு கவுதம் காம்பீர், கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கு மேக்ஸ்வெல், மும்பை இந்தியன்ஸ் அணிக்கு ரோகித் சர்மா, பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணிக்கு விராட்கோலி, ரைசிங் புனே அணிக்கு ஸ்மித், சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கு டேவிட் வார்னர் ஆகியோர் கேப்டன்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

இம் முறை நடந்த ஏலத்தில் இங்கிலாந்து அணியின் ஆல்-ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் அதிக தொகைக்கு எடுக்கப்பட்டுள்ளார். தமிழகத்தைச் சேர்ந்த புதுமுக வீரர்களான ஜெகதீசன் நடராஜன், முருகன் அஸ்வின் ஆகியோரும் அதிக விலைக்கு வாங்கப்பட்டுள் ளதால் இந்த தொடரில் அவர்கள் ஜொலிக்க என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

வழக்கம்போல் கிறிஸ் கெய்ல், டி வில்லியர்ஸ், வார்னர், சுமித், மார்கன், மேக்ஸ்வெல் போன்ற வெளிநாட்டு அதிரடி வீரர்களுடன் விராட் கோலி, ரகானே, ரெய்னா, யுவராஜ் சிங், காம்பீர், யூசுப் பதான், மனிஷ் பாண்டே, ஹர்த்திக் பாண்டியா போன்ற இந்திய வீரர்களும் உள்ளனர் என்றாலும் எந்த ஐ.பி.எல் போட்டியிலும் இல்லாத வகையில் இந்த ஐ.பி.எல். போட்டியில் வீரர்களின் காயம் அதிகரித்து உள்ளது. அஸ்வின், முரளி விஜய், ராகுல், டுமினி, குயின்டன் டிகாக், மிச்சேல் மார்ஷ், ஸ்டார்க் போன்ற வீரர்கள் காயம் காரணமாக முற்றிலும் விலகியுள்ளனர். விராட் கோலி, ஜடேஜா, உமேஷ் யாதவ் மற்றும் சில வெளிநாட்டு வீரர்கள் காயத்தால் சில போட்டிகளில் ஆடமாட்டார்கள். உலகின் சிறந்த அதிரடி பேட்ஸ்மேனான டிவில்லியர்சும் காயத்தில் உள்ளார். அவர் எப்போது அணியோடு இணைவார் என்று தெரியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.மேலும் சில செய்திகள்

இப்போது விற்பனையில்

மாதமிருமுறை 15-ஆகஸ்ட்-2017

மேலும்

பிற இதழ்கள்© 2016 Jannal
All Rights Reserved.


Back to Top