கலை, இசை, இலக்கியம், விளையாட்டு ஆகியவற்றின் மூலம், ஐ.நா.வின் கொள்கைகளை பரப்பி வருவோருக்கு ஐ.நா.வின் அமைதித் தூதர் என்ற பட்டத்தை, ஐ.நா. அமைப்பு வழங்கி வருகிறது. அந்த வகையில், பாகிஸ்தானில் பள்ளிக்கு சென்ற மலாலாவை கடந்த 2012-ம் ஆண்டு தலிபான் தீவிரவாதிகள் சுட்டனர். இதில் உயிர் பிழைத்த மலாலா, பெண் கல்விக்கான போராட்டத்தில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார். அவரை ஐ.நா.வின் அமைதிக்கான இளம் தூதராக நியமிப்பதாக பொதுச் செயலாளர் அந்தோனியோ குத்தேரஸ் அண்மையில் அறிவித்தார். இதைத்தொடர்ந்து நேற்று முன் தினம் அமைதி தூதர் பதவியை மலாலா ஏற்றுக் கொண்டார்.

அப்போது பேசிய அவர், “பெண் குழந்தைகள் முன்னேற குடும்பத்தில் உள்ள தந்தை, சகோதரர்களின் பங்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. ஸ்வாட் பள்ளத்தாக்கில் என்னைப் போலவே எண்ணற்ற பெண்களும், சிறுமிகளும் இருக்கின்றனர். அவர்களும் சமூகத்தில் துணிச்சலாக பேச ஆர்வமுடன் உள்ளனர். ஆனால் அவர்களது தந்தைகள் அதற்கு அனுமதிப்பதில்லை. சகோதரர்களும் ஊக்கம் அளிப்பதில்லை. எனது குடும்பத்தினர் என்னை தடுக்கவில்லை. பேசச் சொல்லி ஊக்கம் அளித்தனர். அது தான் அனைத்து பெண்களுக்கும் தற்போதைய தேவை. பெண்களுக்கு சுதந்திரம் அளிக்கும் சகோதரர்களும், தந்தைகளும் தான் தேவை.

மலாலாவுக்கு நான் என்ன செய்தேன் என்பதை என்னிடம் யாரும் கேட்காதீர்கள் என என் தந்தை கூறுவார். ஆனால் அவளுக்கு நான் என்ன செய்யவில்லை என்பதை கேளுங்கள் என்பார். நான் அவளது இறகுகளை வெட்டவில்லை சுதந்திரமாக பறக்க விட்டேன் என்பார். எனது தந்தையை போல மற்ற ஆண்களும் இருக்க வேண்டும். பெண்களின் இறகுகளை வெட்டாமல் அவர்கள் முன்னேறி செல்ல அனுமதிக்க வேண்டும். தலிபான் தீவிரவாதிகள் என்னை கொல்ல முயன்றனர். அதன் மூலம் பெண் கல்வி உரிமையை நசுக்க முயன்றனர். ஆனால் அவர்கள் அதில் வெற்றி பெறவில்லை. இது எனக்கு 2-வது வாழ்க்கை. பெண் கல்விதான் இந்த வாழ்க்கைக்கான நோக்கம். அதற்காக நான் தொடர்ந்து உழைப்பேன்” என்றார்

இதைத் தொடர்ந்து பேசிய ஐ.நா. பொதுச்செயலாளர் அந்தோனியோ குத்தேரஸ், ‘‘எனக்கு இந்த நாள் மிகவும் உணர்ச்சிகரமானது. உலகில் முக்கிய நிகழ்வுகள் நடப்பதற்கு காரணமான சின்னமாக மலாலா இருக்கிறார். அந்த நிகழ்வு கல்வி. அனைவருக்கும் கல்வி. குறிப்பாக பெண் கல்வி’’ என்றார்.

மேலும் ஐ.நா. சபையில் நடந்த இந்நிகழ்ச்சியில் ஹாலிவுட் நடிகர் (டைட்டானிக் புகழ்) லியோனார்டோ டி கேப்ரியோ பருவ மாற்றத்துக்கான தூதராகவும், நடிகர் சார்லி தியோரன் எச்ஐவி மற்றும் பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்புக்கான தூதராகவும், நடிகர் மைக்கேல் டக்ளஸ் ஆயுதப் பரவலுக்கு எதிரான தூதராகவும் பொறுப்பேற்றுக் கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.



மேலும் சில செய்திகள்

இப்போது விற்பனையில்

மாதமிருமுறை 15-ஜூன்-2017

மேலும்

பிற இதழ்கள்



© 2016 Jannal
All Rights Reserved.


Back to Top