ஐ.பி.எல்., சீசன்-10 தொடரில் ரோகித் சர்மா தலைமையிலான மும்பை அணி சாம்பியன் பட்டம் வென்றது. ஐதராபாத்தில் நேற்று நடந்த பரபரப்பான பைனலில் இந்த அணி 1 ரன் வித்தியாசத்தில் புனேயை வீழ்த்தி மூன்றாவது முறையாக கோப்பையை வென்று அசத்தியது. இந்த அணிக்கு கோப்பையுடன் ரூ. 21 கோடி பரிசாக கிடைத்தது.

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பி.சி.சி.ஐ.,) சார்பில் இந்தியன் பிரிமியர் லீக் (ஐ.பி.எல்.,) ‘டுவென்டி-20’ சீசன்-10 தொடர் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் நடைபெற்று வருகிறது. இப்போட்டியின் மெகா பைனல் ஐதராபாத் ராஜிவ் காந்தி சர்வதேச ஸ்டேடியத்தில் நேற்று நடைபெற்றது. இதில் ‘டாஸ்’ வென்ற மும்பை முதலில் ‘பேட்டிங்கை’ தேர்வு செய்தது. இரு அணியிலும் மாற்றம் ஏதும் செய்யப்படவில்லை.

சிம்மன்ஸ், பார்திவ் இருவரும் இன்னிங்சை தொடங்கினர். உனத்காட் வீசிய 3வது ஓவரின் முதல் பந்தில் பார்திவ் (4 ரன்), 4வது பந்தில் சிம்மன்ஸ் (3 ரன்) அடுத்தடுத்து வெளியேற, மும்பை தடுமாறியது. ஓரளவு தாக்குப்பிடித்த ராயுடு 12 ரன், ரோகித் 24 ரன் எடுத்து பெவிலியன் திரும்பினர். அடுத்து வந்த போலார்டு 7, ஹர்திக் பாண்டியா 10, கரண் ஷர்மா 1 ரன்னில் அணிவகுத்தனர். மும்பை அணி 20 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 129 ரன் எடுத்தது. குருனல் 47 ரன் விளாசி (38 பந்து, 3 பவுண்டரி, 2 சிக்சர்) கடைசி பந்தில் அவுட்டானார். ஜான்சன் 13 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். புனே பந்துவீச்சில் உனத்காட், ஸம்பா, கிறிஸ்டியன் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.

இதையடுத்து எளிதான இலக்கான 130 ரன்களை துரத்திய புனே அணியினர் படு நிதானமாக ஆடினர். அதுவே ஒரு கட்டத்தில் நெருக்கடியாக மாறியது. ராகுல் திரிபாதி 3 ரன்னிலும், ரஹானே 44 ரன்னிலும் (38 பந்து, 5 பவுண்டரி), டோனி 10 ரன்னிலும் (13 பந்து, ஒரு பவுண்டரி) வெளியேறினர். மிடில் ஓவர்களில் மும்பை பந்து வீச்சாளர்கள் பிடியை இறுக்கியதால் பரபரப்பு தொற்றிக்கொண்டது. ஒரு முனையில் கேப்டன் ஸ்டீவன் சுமித் மட்டும் மனம் தளராமல் போராடினார். கடைசி 2 ஓவர்களில் புனேயின் வெற்றிக்கு 23 ரன்கள் தேவைப்பட்டன. 19-வது ஓவரை வீசிய பும்ராவின் பந்து வீச்சில் சுமித் ஒரு சிக்சர் அடிக்க அந்த ஓவரில் 12 ரன்கள் வந்தது.

முத்தாய்ப்பாக கடைசி ஓவரில் புனேக்கு 11 ரன்கள் தேவையாக இருந்தது. களத்தில் உச்சக்கட்ட டென்ஷன் நிலவியது. ஸ்டீவன் சுமித்தும், மனோஜ் திவாரியும் களத்தில் நின்றனர். 20-வது ஓவரை வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஜான்சன் வீசினார். முதல் பந்தை எதிர்கொண்ட திவாரி பந்தை பவுண்டரிக்கு ஓட விட்டார். 2-வது பந்தில் திவாரி (7 ரன்) பொல்லார்ட்டிடம் கேட்ச் ஆனார்.

3-வது பந்தை சந்தித்த கேப்டன் ஸ்டீவன் சுமித் (51 ரன், 50 பந்து, 2 பவுண்டரி, 2 சிக்சர்) தூக்கியடித்த போது அவரும் கேட்ச் ஆகிப்போனார். 4-வது பந்தில் ஒரு ரன் வந்தது. 5-வது பந்தை எதிர்கொண்ட டேனியல் கிறிஸ்டியன் 2 ரன் எடுத்தார். கடைசி பந்தில் புனேயின் வெற்றிக்கு 4 ரன் தேவைப்பட்டன. திக்...திக்... நிறைந்த இறுதி பந்தில் டேனியல் கிறிஸ்டியன் 2 ரன் எடுத்து விட்டு 3-வது ரன்னுக்காக ஓடிய போது ரன்-அவுட் செய்யப்பட்டப் போது அரங்கமே கொஞ்சம் ஆடிப் போனதென்னவோ நிஜம்.

ஆக. புனே அணியால் 20 ஓவர்களில் 6 விக்கெட்டுக்கு 128 ரன்களே எடுக்க முடிந்தது. இதன் மூலம் ஒரு ரன் வித்தியாசத்தில் மும்பை அணி வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தைதட்டிச் சென்றது. அதிலும் இவ்வளவு குறைந்த ஸ்கோருடன் ஒரு அணி கோப்பையை வெல்வது இதுவே முதல் முறையாகும். மேலும் மும்பை அணி ஏற்கனவே 2013, 2015-ம் ஆண்டுகளிலும் பட்டம் வென்று இருந்தது. இதன் மூலம் மூன்று முறை ஐ.பி.எல். கோப்பையை வென்ற முதல் அணி என்ற மகத்தான சாதனையை அந்த அணி நிகழ்த்தியது குறிப்பிடத்தக்கது.மேலும் சில செய்திகள்

இப்போது விற்பனையில்

மாதமிருமுறை 15-ஆகஸ்ட்-2017

மேலும்

பிற இதழ்கள்© 2016 Jannal
All Rights Reserved.


Back to Top