பல்வேறு ஆங்கிலப்படங்களில் ஜேம்ஸ் பாண்டாக நடித்துப் புகழ்பெற்ற பிரிட்டன் நடிகர் ரோஜர் மூர் காலமானார், அவருக்கு வயது 89. இத்தகவலை அவரது குடும்பத்தினர் அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளனர். ரோஜர் மூர் புற்று நோயால் பாதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் சுவிட்சர்லாந்தில் அவர் மரணமடைந்தார் என்று தெரிய வருகிறது.

அயன் ஃபிளெம்மிங் (Ian fleming) என்ற பிரபல ஆங்கில எழுத்தாளர் உருவாக்கிய கதாபாத்திரமே ஜேம்ஸ் பாண்ட். அவர் 1952-ஆம் வருடம் எழுதிய ‘காசினோ ராயல்’ என்ற நாவலில் தான் ஜேம்ஸ் பாண்ட் முதன்முதலில் உலாவருகிறார். பிரிட்டிஷ் உளவுத்துறையிலும், பத்திரிகை துறையிலும் ஃபிளெம்மிங் பணிபுரிந்ததால், உளவுத்துறை பின்னணியில் அமைந்த பாண்ட் கதைகளை அவரால் தத்ரூபமாக எழுதமுடிந்தது. மேலும் தான் நிஜவாழ்க்கையில் சந்தித்த பல உளவாளிகளின் குணாதிசியங்களை அடிப்படையாக கொண்டே பாண்ட் கதாப்பாத்திரத்தை உருவாக்கியாதாக அவர் குறிப்பிட்டிருந்தார்

அக்கதைகள் வெளிவந்த சில ஆண்டுகளிலேயே மிகவும் பிரபலமாக, 1962-ஆம் ஆண்டு, முதல் பாண்ட் திரைப்படம் வெளியானது. ஃபிளெம்மிங்கின் “Dr.No” என்ற நாவலை தழுவி குறைந்த செலவில் எடுக்கப்பட்ட அந்த படம் பெருமளவு ரசிகர்களை ஈர்க்கவே, ‘பாண்ட் சீரிஸ்’ பிறந்தது. அன்று முதல் இன்று வரை 55 வருடங்களாக பாண்ட் இன்னும் ரசிகர்களை ஈர்த்துக் கொண்டேயிருக்கிறார்.

ஃபிளெம்மிங்கின் மறைவிற்கு பின் பலர் பாண்ட் நாவல்கள் எழுதிவிட்டனர். அந்நாவல்களைத் தழுவி பல திரைப்படங்களும் எடுத்தாகிவிட்டது. ஆனால் பாண்ட் கதாப்பாத்திரத்தின் தந்தை ஃபிளெம்மிங் என்பதால், அவருக்கு மரியாதை செய்யும் பொருட்டு இன்று வரை பாண்ட் திரைப்படங்களின் டைட்டிலில் ஃபிளெம்மிங்கின் பெயரே முதலில் இடம்பெறும்.உலகின் முதல் பாண்ட் திரைப்படத்தில் பாண்ட் கதாப்பாத்திரத்தை ஏற்றவர் சீன் கன்னேரி (Sean Connery). அவரோடு சேர்த்து இதுவரை ஆறு வெவ்வேறு நடிகர்கள்- ஜார்ஜ் லேசன்பை (Geroge Lasenby), ரோஜர் மூர் (Roger moore), திமோத்தி டால்டன் (Timothy Dalton), பியர்ஸ் பிரான்சன் (Pierce Bronson), டேனியல் கிரேக்- பாண்ட் கதாப்பாத்திரத்தில் நடித்து விட்டனர். ஆனால் பல கோடி ரசிகர்களை கொள்ளைக்கொண்ட பாண்ட் நடிகர்கள் இருவர், ஒருவர் சீன் கேனரி. இன்னொருவர் ரோஜர் மூர். அதிலும் இதுவரை வெளிவந்த பாண்ட் கேரக்டர்களில் அதிக படங்களில் நடித்தவர் ரோஜர் மூர்தான்,

சுமார் 12 ஆண்டுகள் இவர் ஜேம்ஸ் பாண்ட் பாத்திரத்தில் கலக்கினார். லண்டனில் பிறந்த தன் தந்தையைப் போல போலீஸாக வேண்டும் என்றுதான் ஆசைப்பட்டார். ஆனால் ஓவியராகி பின்னர் திரைப்பட அனிமேஷன் துறையில் நுழைந்தார். அதிலும் நிலைக்க முடியாமல் பிறகு புகைப்படக் கலைஞரான நண்பர் ஒருவர் உதவியால் மாடலிங் செய்தார். ஆனாலும் பெரிதாக சாதிக்க முடியவில்லை. ஜட்டி, பனியன், பற்பசை விளம்பரத்துக்குதான் கூப்பிட்டார்கள்.
அப்படி மாடலிங் செய்த போதுதான் ஹாலிவுட்டில் நடிக்க ஆசை துளிர்த்தது.

இதையடுத்து ராயல் அகாடமி ஆஃப் டிரமாடிக் ஆர்ட் பயிற்சிக் கல்லூரியில் சேர்ந்தார். ஆரம்பத்தில் தெரு நாடகங்கள், டிவி தொடர்களில்தான் வாய்ப்பு வந்தது.ஒரு வழியாக 1945-ல் ஹாலிவுட்டில் துணை நடிகர் வாய்ப்பு கிடைத்தது. 5 ஆண்டுகள் உழைத்தும் பெரிய அளவில் வாய்ப்பு கிடைக்காததால் வெறுத்துப்போய் வருவாய் தேடி மீண்டும் டிவி சீரியலுக்கு சென்றார். அந்த சின்னத்திரையின் ‘டிராயிங் ரூம் டிடெக்டிவ்’, ‘தி செயின்ட்’ ஆகிய டிவி தொடர்கள் இவரை உளவாளியாக பிரபலமாக்கின. ஒருவழியாக 46 வயதில் கதாநாயகன் ஆனார். 1973-ல் வெளிவந்த ‘லிவ் அண்ட் லெட் டை’ திரைப்படத்தில் ஜேம்ஸ்பாண்ட்-டாக அவதாரம் எடுத்தார்.

இவரது ஸ்பை ஹூ லவ்ட் மீ, மூன் ரேக்கர் போன்ற படங்கள் உலகப்புகழ் பெற்றவை என்பதோடு, இந்திய ரசிகர்களையும் கவர்ந்திழுத்த படங்களாகும். 1991-ம் ஆண்டு யுனிசெஃப் நல்லெண்ணத் தூதராக நியமிக்கப்பட்டார். அவர் இறப்பை உறுதி செய்துள்ள சேதியை ஹாலிவுட் பிரபலங்கள் ரிவிட் செய்து அஞசலி செலுத்தி வருகிறார்கள்.மேலும் சில செய்திகள்

இப்போது விற்பனையில்

மாதமிருமுறை 15-ஆகஸ்ட்-2017

மேலும்

பிற இதழ்கள்© 2016 Jannal
All Rights Reserved.


Back to Top