‘மினி உலக கோப்பை’ என்று அழைக்கப்படும் ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபி 1998-ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. 1998-ம் ஆண்டு வங்கதேசத்தில் நடந்த முதல் போட்டியில் தென் ஆப்பிரிக்கா அணி வெஸ்ட்இண்டீசை வீழ்த்தி கோப்பையை வென்றது. இதுவரை 7 சாம்பியன்ஸ் டிராபி போட்டிகள் நடைபெற்றுள்ளன.முதல் 2 போட்டியும் ஐ.சி.சி. நாக்அவுட் டிராபி என்று அழைக்கப்பட்டது. இதில் இந்தியா, ஆஸ்திரேலியா அணிகள் அதிகபட்சமாக தலா இரண்டு முறை கோப்பையை வென்றுள்ளனர். இந்திய அணி 2002-ல் இலங்கையுடன் இணைந்து கூட்டாக வென்றது.

தென்ஆப்பிரிக்கா, நியூசிலாந்து, வெஸ்ட் இண்டீஸ், இலங்கை தலா 1 முறை வென்றன. தொடக்கத்தில் 2 ஆண்டுக்கு ஒரு முறையும், பின்னர் 3 ஆண்டுக்கு ஒரு முறையும், அதை தொடர்ந்து 4 ஆண்டுக்கு ஒரு முறையும் இந்த போட்டி நடைபெற்று வருகிறது. கடைசியாக 2013-ம் ஆண்டு இங்கிலாந்தில் நடந்த சாம்பியன்ஸ் டிராபியை டோனி தலைமையிலான இந்திய அணி கைப்பற்றியது.

8-வது சாம்பியன்ஸ் டிராபி போட்டி இங்கிலாந்தில் இன்று தொடங்குகிறது. ஜூன் 18-ம் தேதி வரை இந்தப் போட்டி நடக்கிறது. இதில் தரவரிசையில் முதல் 8 இடத்தில் உள்ள நாடுகள் பங்கேற்கின்றன. 2015-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் கணக்கின் படி தரவரிசையில் உள்ள ‘டாப் 8’ நாடுகள் தகுதி பெற்றன. வெஸ்ட்இண்டீஸ் 9-வது வரிசையில் இருந்ததால் வாய்ப்பை இழந்தது. வங்கதேசம் அணி அந்த அணியை பின்னுக்கு தள்ளி வாய்ப்பை பெற்றது. 2006-க்கு பிறகு வங்கதேசம் சாம்பியன்ஸ் டிராபி போட்டிக்கு திரும்பி உள்ளது.

சாம்பியன்ஸ் டிராபி போட்டியில் விளையாடும் 8 அணிகளும் இரண்டு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளது. இரண்டு பிரிவிலும் இடம் பெற்றுள்ள அணிகள் விவரம்:-

‘ஏ’ பிரிவு: ஆஸ்திரேலியா, இங்கிலாந்து (போட்டியை நடத்தும் நாடு), நியூசிலாந்து, வங்கதேசம்.

‘பி’பிரிவு: இந்தியா (நடப்பு சாம்பியன்ஸ்), தென் ஆப்பிரிக்கா, இலங்கை, பாகிஸ்தான்.

18-ம் தேதி இறுதிப்போட்டி

ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா 1 முறை மோத வேண்டும். ‘லீக்’ முடிவில் புள்ளிகள் அடிப்படையில் இரண்டு பிரிவிலும் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் அரை இறுதிக்கு தகுதி பெறும். 12-ம் தேதியுடன் ‘லீக்’ ஆட்டம் முடிகிறது. 13-ம் தேதி ஓய்வு நாளாகும். 14-ம் தேதி முதல் அரை இறுதியும், 15-ம் தேதி 2-வது அரை இறுதியும் நடைபெறும். 16 மற்றும் 17-ம் தேதி ஓய்வு நாளாகும். இறுதிப்போட்டி 18-ம் தேதி நடக்கிறது. இன்று நடைபெறும் தொடக்க ஆட்டத்தில் ‘ஏ’ பிரிவில் உள்ள இங்கிலாந்து- வங்கதேசம் அணிகள் மோதுகின்றன. இந்தப்போட்டியில் விளையாடும் அணிகள் இங்கிலாந்து, பாகிஸ்தான், வங்கதேசம் ஆகிய 3 அணிகள் தான் கோப்பையை வெல்லவில்லை. இங்கிலாந்து 2 முறை இறுதிப் போட்டியில் தோற்று இருக்கிறது. இதனால் அந்த அணி முதல் முறையாக கோப்பையை வெல்லும் ஆர்வத்தில் உள்ளது. அதே சமயம் வீராட்கோலி தலைமையிலான இந்திய அணி இரண்டு பயிற்சி ஆட்டத்திலும் நியூசிலாந்து, வங்கதேசத்தையும் வென்று இருந்தது. இதனால் மிகுந்த நம்பிக்கையுடன் உள்ளது 3-வது முறையாக சாம்பியன்ஸ் டிராபியை வெல்லும் முனைப்பில் உள்ளது.

இந்நிலையில் சாம்பியன்ஸ் டிராபி தொடர் இன்று (வியாழக்கிழமை) தொடங்குவதை கொண்டாடும் வகையில் கூகுள் டூடுல் விளையாட்டு ஒன்றை பார்வையாளர்களுக்கு அறிமுகம் செய்துள்ளது. கூகுளின் முகப்புப் பக்கத்தில் கையில் பேட்டுடன் கிரிக்கெட் பூச்சி ( தெள்ளு பூச்சி ) காணப்படுகிறது. அதனை கிளிக் செய்தால் கிரிக்கெட் மைதானத்துக்கு செல்கிறது. அதில் கிரிக்கெட் பூச்சி கையில் பேட்டுடன் நிற்கிறது. பவுலர் மற்றும் பில்டிங்கில் நத்தைகள் உள்ளன. கூகுள் தேடலுக்கு முன்புள்ள வட்டவடிவ பேட் போன்ற குறியை நீங்கள் கிளிக் செய்தால், கிரிக்கெட் பூச்சி தனது பேட்டை சுழற்றி பந்தை எதிர் கொள்கிறது. நீங்கள் ரன் அடித்தால் மைதானத்தை சுற்றி பலூன்கள் பறக்கின்றன. நீங்கள் ரன் எடுக்காமல் ஆட்டமிழந்துவிட்டீர்கள் என்றால் கிரிக்கெட் பூச்சி சோகமான வாத்தாக மாறி விடுகிறது. மீண்டும் பேட் குறியை கிளிக் செய்து நீங்கள் ஆட்டத்தை தொடரலாம்.

எந்த மெதுவான இணைய சேவையிலும் இந்த விளையாட்டை தொடரலாம் என்பதற்காக கிரிக்கெட் பூச்சி மற்றும் நத்தை பயன்படுத்தப்பட்டிருப்பதாக கூகுள் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.சாம்பியன்ஸ் டிராப்பி தொடருக்கான கூகுளின் இந்த டூடுலுக்கு சமூக ஊடகங்களின் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.மேலும் சில செய்திகள்

இப்போது விற்பனையில்

மாதமிருமுறை 15-ஆகஸ்ட்-2017

மேலும்

பிற இதழ்கள்© 2016 Jannal
All Rights Reserved.


Back to Top