கலைஞரின் சட்டப்பேரவை வைர விழா சென்னையில் நடந்தது. இதில் -புதுச்சேரி முதல்அமைச்சர் நாராயணசாமி பங்கேற்றார். பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது, புதுச்சேரி கவர்னர் சட்ட விதிகளின் எல்லைக்கு உட்பட்டு செயல்பட வேண்டும். ஒருவரின் அதிகாரத்தில் மற்றொருவர் தலையிடக்கூடாது என கருத்து தெரிவித்திருந்தார். இதற்கு பதிலடி தரும்விதத்தில் சமூக வலைதளங்களில் கவர்னர் கிரண்பேடி கருத்து தெரிவித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது: மாண்புமிகு முதல்அமைச்சர் என்ன விரும்புகிறார்? நான் ரப்பர் ஸ்டாம்ப் போல செயல்பட வேண்டுமா? சிறந்த நிர்வாகியாக இருக்க வேண்டுமா? இதுதான் தற்போது தெரிந்துகொள்ள வேண்டிய கேள்வி. முதல்அமைச்சர் தற்போது ஒரு கருத்து தெரிவித்துள்ளார். அந்த கருத்தின்படி நீங்கள் சொல்வது அனைத்தையும் செய்ய வேண்டுமா? தவறு நடப்பதையும், பொதுமக்கள் பாதிக்கப்படுவதையும் நான் வேடிக்கை பார்த்துக்கொண்டு அமர்ந்திருக்க வேண்டும் என நினைக்கிறீர்களா? நீங்கள் அனுப்பும் கோப்புகள் அனைத்தையும் எந்த கேள்வியும் கேட்காமல், ஆய்வு செய்யாமல் கையெழுத்திட்டு அனுப்ப வேண்டுமா? யாருடைய தேவைக்காகவோ அதிகாரிகளை நான் நியமிக்க வேண்டுமா? பட்ஜெட்டில் நிதி ஒதுக்காமல் திடீரென கொண்டுவரும் திட்டங்களுக்காக நிதி வழங்க ஒப்புதல் தர வேண்டுமா? கடன் வாங்கி செலவு செய்ய வேண்டும் என்பதுதான் உங்கள் எண்ணமா? காலி பணியிடம் இல்லாதநிலையில், நிர்வாக திறமையற்ற அதிகாரிகளை நீங்கள் விரும்பும் இடத்தில் நியமிக்க வேண்டுமா? சிறந்த நிர்வாக திறமையான அதிகாரிகள் மீது உங்கள் விருப்பப்படி நான் நடவடிக்கை எடுக்க வேண்டுமா? கண்மூடி, வாய்மூடி, காதுகளை மூடி நான் உங்களுக்காக செயல்பட வேண்டுமா? கவர்னர் மாளிகையில் அளிக்கும் சலுகைகளை பயன்படுத்திக்கொண்டு உல்லாச வாழ்க்கையை மட்டும் நான் அனுபவிக்க வேண்டுமா?

அரசுடனும், மக்களுடனும் கலக்காமல் தனித்து நான் இருக்க வேண்டுமா? நான் மக்களை சந்திக்கககூடாது. அதிகாரிகளை கேள்விகேட்கக்கூடாது. அரசு விஷயங்களில் தலையிடக்கூடாது என்பதைத்தான் விரும்புகிறீர்களா? என்னுடைய உத்தரவுப்படி செயல்படுங்கள் என கடிதம் அனுப்புவது இதற்குத்தானா? மாநில அரசிடம் உள்ள நிதியை முறையாக செலவிடாமல், மத்திய அரசிடம் நிதி வாங்கித்தர வேண்டுமா? மாநிலத்தின் வருவாயை நிர்ணயிக்கும் சுற்றுலா துறையே வீழ்ச்சியில் உள்ளது. இதுதான் உங்களின் போற்றத்தக்க சிந்தனையா? உங்களை சுய பரிசோதனை செய்துகொள்ளாமல் நடந்துகொள்வது சரிதானா? நல்ல சிந்தனை இருந்தால் ஒரு சிறந்த நிர்வாகியை நீங்கள் பயன்படுத்தி மாநிலத்தை முன்னேற்ற செய்ய வேண்டாமா? யூனியன் பிரதேச சட்டப்படி முதல்அமைச்சர், துணைநிலை ஆளுநர் இருவருக்குமே அதிகாரம் உண்டு. அந்த சட்டத்தை எப்படி எடுத்துக்கொள்கிறீர்கள் என்பதை பொறுத்தே உள்ளது. இன்றைய <உண்மை நிலையை நாம் எதிர்கொள்ள வேண்டாமா? பாதிக்கப்பட்ட மக்கள் நீதிக்காக கண்ணீர் வடிக்கின்றனர். பெற்றோர்கள், மாணவர்கள் பட்டமேற்படிப்பு இடங்களில் சேர முடியாமல் தவித்து வருகின்றனர். இவர்களின் குரலை யார் கேட்பது? சென்னையில் உள்ள ஐகோர்ட் நீதிமன்றமா இதை கேட்க முடியும்? கவர்னர் மாளிகைதான் புதுச்சேரி மக்களின் இறுதி நம்பிக்கை. கவர்னர் மாளிகை மக்கள் மாளிகையாக திறக்கப்பட்டதால் மக்களுக்கு நீதி, நம்பிக்கையான நல்ல நிர்வாகம் கிடைக்கும் என நம்புகின்றனர். அந்த நம்பிக்கையை யார் காப்பாற்றுவது? சுயநலமின்றி மக்களுக்கு யார் சேவையாற்றுவது? பதவியை விட மக்களின் நம்பிக்கைதான் முக்கியம். இதை உணர வேண்டும் என தெரிவித்தார்.

பதிலடி தந்த நாராயணசாமி

கவர்னரின் இந்த நடவடிக்கை புதுச்சேரி சட்டசபையில் இன்று எதிரொலித்தது. பூஜ்யநேரத்தில் திமுக உறுப்பினர் சிவா, காங்கிரஸ் உறுப்பினர் அனந்தராமன், அதிமுக உறுப்பினர் அன்பழகன் ஆகியோர் பேசினர். அவர்கள் பேசும்போது, கவர்னர் தொடர்ச்சியாக அரசையும், அமைச்சர்களையும், உறுப்பினர்களையும் விமர்சித்து வருகின்றனர். ஆனால் கவர்னரைப்பற்றி சட்டசபையில் பேசக்கூடாது, விமர்சிக்கக்கூடாது என முதல்அமைச்சர் தடுக்கிறார். இதற்கு ஒரு முடிவு கட்ட வேண்டும். தீர்வு காண வேண்டும் என வலியுறுத்தி பேசினர்.
இதையடுத்து முதல்அமைச்சர் நாராயணசாமி பேசியதாவது: கடந்த ஓராண்டாக கவர்னரை விமர்சனம் செய்வதை தவிர்த்தேன். போராட்டம் நடத்தப்போவதாக கூறிய அரசியல் கட்சி தலைவர்கள், உறுப்பினர்களை தடுத்து வந்தேன். இந்திய அரசியலமைப்பின்படி கவர்னர் செயல்பட வேண்டும். யூனியன் பிரதேச சட்டத்தில் கவர்னருக்கு என்னென்ன அதிகாரம் உள்ளது? என தெளிவாக கூறப்பட்டுள்ளது. கவர்னர் செயல்பாடுகள் தொடர்பாக பிரதமர், உள்துறைஅமைச்சர், ஜனாதிபதிக்கு பல கடிதம் எழுதியுள்ளேன். அரசியல்வாதிகளை, உறுப்பினர்களை, அதிகாரிகளை விமர்சிக்க கவர்னருக்கு என்ன அதிகாரம் உள்ளது? எந்த மாநிலத்திற்கும் கவர்னருக்கு என தனியாக சட்டம் இல்லை. ஆனால் யூனியன் பிரதேசமான புதுச்சேரிக்கு 239, 239 ஏ, 240 ஆகிய பிரிவுகளில் புதுச்சேரி கவர்னருக்கான அதிகாரம், வரம்பு வகுக்கப்பட்டுள்ளது. சட்டமன்றம் உள்ள யூனியன் பிரதேசம் என்பதால் ஜனாதிபதிக்கு உரிய அதிகாரம் புதுச்சேரி சட்டமன்றத்திற்கு உள்ளது. டெல்லியில் உள்ள கவர்னருக்குரிய அதிகாரம் வேறு, புதுச்சேரிக்கு உரிய அதிகாரம் வேறு. புதுச்சேரி சட்டசபைக்கு நிலம், நீதி, சட்ட ஒழுங்கு ஆகியவற்றின் மீது அதிகாரம் உண்டு. டெல்லிக்கு கிடையாது. 1963 சட்டத்தில் புதுச்சேரி முதல்அமைச்சர், அமைச்சர்களுக்கான அதிகாரம் வகுக்கப்பட்டுள்ளது. கவர்னருக்கு தனிப்பட்ட அதிகாரம் இல்லை. முதல்அமைச்சரின் ஆலோசனையை கேட்டுத்தான் அவர் செயல்பட வேண்டும். கருத்துவேறுபாடு இருந்தால் மத்திய உள்துறைக்கு கோப்புகளை அனுப்பலாம். ஆனால் இந்த கவர்னர் அனைத்து கோப்புகளையும் டெல்லிக்கு அனுப்பி அரசு நிர்வாகத்தை ஸ்தம்பிக்க செய்கிறார். கவர்னர் ரகசிய காப்பு பிரமாணத்தை மீறி செயல்பட்டுள்ளார். சமூகவலைதளங்களில் அரசை விமர்சித்துள்ளதால் நான் பதில் கூற வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளேன்.
கவர்னர் கட்டுமீறி செயல்படுகிறார். கோப்புகளை திருப்பி அனுப்பினால் கவர்னர் மாளிகையில் கோப்புகள் இருக்கும்? உதாரணமாக விவசாயிகளின் கூட்டுறவு கடனை ரத்து செய்து அமைச்சரவையில் முடிவெடுத்து கோப்புகளை அனுப்பினோம். கவர்னர் பல முறை விளக்கம் கேட்டார். அதன்பின் சட்டத்துறைக்கு அனுப்பினார். சட்டத்துறையும் ஒப்புதல் கொடுத்தது. இதன்பிறகு வங்கி கடனை ஏன் ரத்து செய்யக்கூடாது? என்றார். அதற்கு அதிகாரம் இல்லை? என்றோம். உடனே மத்திய அரசுக்கு அந்த கோப்பை அனுப்பியுள்ளார். இது விவசாயிகளையும், மக்களையும் ஏமாற்றும் செயல். கர்நாடகா, கேரளா, தமிழ்நாட்டில் விவசாய கடன்தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. உத்திரபிரதேசத்தில் 41 ஆயிரம் கோடி கடனை தள்ளுபடி செய்துள்ளனர். ஆனால் நமது விவசாயிகளுக்கு இதுவரை கடனை தள்ளுபடி செய்ய முடியவில்லை. இதை தடுக்க நீங்கள் யார்?
இதேபோல தியாகிகளுக்கு ரூ.ஆயிரம் உயர்த்தி ரூ.7 ஆயிரம் உதவித்தொகை வழங்க முடிவெடுத்தோம். சட்டத்துறையும் ஒப்புதல் அளித்தது. ஆனால் 6 மாதமாக 7 முறை இந்தகோப்பு கவர்னர் மாளிகைக்கு சென்று திரும்பியது. சிறப்புக்கூறு நிதி மூலம் ஆதிதிராவிட மாணவர்கள் உயர்கல்வி படிக்க முழுமையான கல்வி நிதி அளிக்க கோப்புகள் அனுப்பினோம்.இந்த கோப்புக்கும் ஒப்புதல் தராமல் டெல்லிக்கு அனுப்பிவிட்டனர். ஆதிதிராவிடர்களுக்காக ஒதுக்கப்படும் 15 சதவீத நிதியில் இதை வழங்குவதில் என்ன தவறு? இந்த கவர்னரா மாணவர்கள் மீது அக்கறையோடு செயல்படுகிறார். கவர்னர் விளம்பர அரசியல் செய்கிறார். மத்திய அரசிடம் நிதி பெற்றுத்தர கோரினால் நான் என்ன பிரிண்டிங் மிஷினா வச்சிருக்கேன், பணம் என்ன மரத்திலா காய்க்கிறது? என தரம் தாழ்ந்து பேசுகிறார். அதிகாரிகளை மக்கள் மத்தியில் மிகவும் தரக்குறைவாக திட்டுகிறார், அசிங்கப்படுத்துகிறார். சென்டாக் அதிகாரியுடன் அமைச்சர் மல்லாடி பேசிக்கொண்டிருக்கும்போது, அவரை வரச்சொல், வரச்சொல் என மக்கள் மத்தியில் அழைக்கிறார். அமைச்சர் என்பவர் இவர் வீட்டு வேலைக்காரனா? அழைத்தபோது ஓடிவருவதற்கு.
அரசியல்வாதிகள், அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், அதிகாரிகள் லஞ்சம் வாங்கிக்கொண்டு செயல்படுவதாக கூறுகிறார். மருத்துவக்கல்லூரிஇடங்களை தனியாருக்கு தாரை வார்த்துவிட்டதாக கூறுகிறார். இதற்கெல்லாம் ஆதாரம் உள்ளதா? நான் இதுதொடர்பாக மத்திய உள்துறை அமைச்சருக்கு விளக்கமாக கடிதம் அனுப்பியுள்ளேன். கவர்னர் தன் எல்லைக்குள்செயல்பட வேண்டும். கவர்னருக்கென ஒரு ஸ்தானம் உள்ளது. டீம் ராஜ்பவன் என்று சொல்கிறார். யார் இந்த அதிகாரத்தை கொடுத்தது? நான் ஓராண்டாக வாய் திறக்காமல்தான் இருந்தேன்.
பசுமை தீர்ப்பாயத்தில் குப்பைவாரும் விஷயத்தில் புதுச்சேரி அரசுக்கு தண்டனை பெற்றுத்தாருங்கள் என்று கூறுகிறார். நீதிபதிக்கு கடிதம் அனுப்புகிறார். இது கண்டனத்திற்குரியதில்லையா? தகுதியில்லாத நிலையில் நடந்துகொள்கிறார். இடைத்தேர்தலின்போது அதிகாரிகளை அழைத்து கூட்டம் நடத்தினார், பரிசுகள் வழங்கினார். இதை செய்ய வேண்டாம் என நாங்கள் கூறியதற்கு மறுப்பு தெரிவித்தார். தேர்தல் கமிஷன் இதற்கு கவர்னருக்கு கண்டனம் தெரிவித்துள்ளது. இந்தியாவில் எங்கும் இப்படி நடந்ததில்லை. நான் இப்போது அறிவிக்கிறேன். எந்த அதிகாரியும் அமைச்சரின் அனுமதி இல்லாமல் கவர்னரின் அழைப்பை ஏற்று அவருடன் செல்லக்கூடாது. சட்டமன்ற உறுப்பினர்கள் கவர்னர் தொகுதிக்கு வரும்போது மக்களை திரட்டி மறியல் செய்ய வேண்டும். தொகுதிக்குள் நுழைய விடக்கூடாது. நாம் மக்கள் பணி செய்யவில்லையா? நானும், அமைச்சர்களும், சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் 18 மணி நேரம் மக்கள் பணி செய்கிறோம். நாங்கள் லஞ்சம் வாங்கியதாக நிரூபிக்க முடியுமா? இப்படிப்பட்ட கவர்னர் புதுச்சேரிக்கு தேவையா?
ஜூலை மாதம் விமான போக்குவரத்து தொடங்க ஏற்பாடு செய்திருந்தும், இதற்கான கோப்பில் இதுவரை ஒப்புதல் தரவில்லை. தவறான தகவலை கொடுத்து 22 மாணவர்களை சேர்த்தவிட்டதாக கூறுகிறார். சட்டத்துறை நிகர்நிலை பல்கலைக்கழகங்களின் கட்டணத்தை நாம் நிர்ணயிக்க முடியாது என்று கூறியுள்ளது. இந்த மாணவர்களை அவரால்சேர்க்க முடியுமா? புதுச்சேரி அரசு திட்டமிட்டு 94 சதவீத நிதியை செலவிட்டுள்ளது. விதிகளை மீறி நாங்கள் செயல்படுவது கிடையாது. கவர்னர் தனது அதிகார எல்லைக்குள் செயல்பட வேண்டும். எல்லையை மீறினால் அதற்கான விளைவுகளை சந்திக்க நேரிடும். இவ்வாறு அவர் பேசினார்.

கவர்னர் கிரண்பேடியை திரும்பப்பெற வலியுறுத்தி இந்த கூட்டத்தொடரிலேயே அரசு தீர்மானம் நிறைவேற்றப்படும் என்ற சூழ்நிலை எழுந்துள்ளது.இது அரசியல் வட்டாரத்தில் மிகப்பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.மேலும் சில செய்திகள்

இப்போது விற்பனையில்

மாதமிருமுறை 15-ஆகஸ்ட்-2017

மேலும்

பிற இதழ்கள்© 2016 Jannal
All Rights Reserved.


Back to Top