முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.செழியன் உடல்நலக் குறைவால் காலமானார். அவருக்கு வயது 95. வேலூரில் தனியார் கல்லூரி ஒன்றில் தங்கியிருந்த அவருக்கு முதுமை காரணமாக திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டு உயிர் பிரிந்தது. நாகப்பட்டினம் மாவட்டம் திருக்கண்ணபுரத்தில் 1923 ஆம் ஆண்டு பிறந்த இவர், நெடுஞ்செழியனின் இளைய சகோதரர்.

மாணவர் பருவத்திலேயே திராவிடர் இயக்கத்தில் சேர்ந்த இரா.செழியன், திமுக ஆரம்பிக்கப்பட்டபோது அண்ணாவுடன் இணைந்து செயலாற்றினார். அதன்பிறகு அந்தக் கட்சியிலிருந்து வெளியேறி, ஜனதா கட்சியில் சேர்ந்து ஜெயப்பிரகாஷ் நாராயணனுடன் இணைந்து செயல்பட்டார். இந்திரா காந்தி நெருக்கடி நிலை அறிவித்த காலத்தில் அதை எதிர்த்து கடுமையாக போராடினார். ஜனதா கட்சி, ஜனதா தளமாக மாறியபோது முக்கியப் பொறுப்புகளில் பதவி வகித்தார். ராமகிருஷ்ண ஹெக்டே, ஜனதா தளத்திலிருந்து நீக்கப்பட்ட பின்னர் துவங்கிய லோக் தளம் கட்சியின் துணைத் தலைவராகப் பொறுப்பு வகித்தார். ஊழலுக்கு எதிரான முயற்சிகளிலும் இரா.செழியன் ஈடுபட்டார். அரசுப் பதவிகளில் நாட்டமில்லாது, இறுதி வரை கட்சிப் பணிகளிலேயே தீவிரமாக இருந்தார். மக்களவையிலும், மாநிலங்களவையிலும் 20 ஆண்டுகளுக்கும் மேலாக எம்.பி. பதவியில் இருந்து அப்பழுக்கற்ற அரசியல்வாதி என்ற பெயரைப் பெற்றவர் இரா.செழியன்.

இரா.செழியன் நாடாளுமன்றத்தில் பேசிய அவருடைய உரைகள் தொகுக்கப்பட்டு, 'Parliament for The People' என்ற நூலாக வெளிவந்துள்ளது. நெருக்கடி கால அத்துமீறல்களை ஷா கமிசன் விசாரித்து 525 பக்கங்களில் அறிக்கை அளித்தது. இதை அப்போதைய இந்திய அரசு கிடப்பில் போட, செழியன் அதனை மீட்டெடுத்து, 'Shah Commission Report - Lost and Regained' என்ற நூலாக வெளியிட்டார். அரசியலில் 50 ஆண்டுகளுக்கும் மேலாகச் சேவையாற்றிய இரா.செழியன், 2001 ஆம் ஆண்டு ஓய்வுபெற்று வி.ஐ.டி. பல்கலைக்கழகத்தில் கெளரவப் பேராசிரியராகப் பணியாற்றினார்.

இப்பேர் பட்டவர் மறைவு குறித்து வைகோ (மதிமுக) வெளியிட்ட அஞ்சலி செய்தியில், “பேரறிஞர் அண்ணா அவர்களின் முழு நம்பிக்கையைப் பெற்று, அவரது மனச்சாட்சியாக உலவிய அண்ணன் இரா. செழியன் அவர்கள் மறைந்தார் என்ற செய்தி கேட்டுத் தாங்க முடியாத அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன். நடமாடும் பல்கலைக்கழகமான டாக்டர் நாவலர் அவர்களின் உடன்பிறந்த சகோதரரான அண்ணன் இரா. செழியன் அவர்கள், உன்னதமான இலட்சியவாதியாகத் திராவிட இயக்கத்தில் வளர்ந்தவர்; 62 முதல் 77 வரை நாடாளுமன்ற மக்கள் அவையிலும், 78 முதல் 84 வரை மாநிலங்கள் அவையிலும் மொத்தம் இருபது ஆண்டுகள் பொறுப்பு வகித்த காலத்தில், தமிழக உரிமைகளைக் காப்பதிலும், பேரறிஞர் அண்ணா அவர்களின் இலட்சியங்களை எடுத்து உரைப்பதிலும், நாடாளுமன்றத்தில் அனைவர் கவனத்தையும் கவர்ந்தார். அவர் விடுத்த கேள்விகளுக்குப் பதில் அளிக்க முடியாமல், மத்திய அமைச்சர்கள் திணறினார்கள் என்று ஏடுகள் பலமுறை பாராட்டி உள்ளன.
‘நாடாளுமன்ற விதிகள், மரபுகள் குறித்து அவருக்கு ஈடான மேதைகள் இல்லை’ என்று நாடாளுமன்றத்தின் புகழ்மிக்க தலைவர்களால் பாராட்டப் பெற்றார்; இந்தியாவின் அனைத்து அரசியல் கட்சிகளின் தலைவர்களின் அன்பையும் பெற்றவர்; லோகநாயகர் ஜெயப்பிரகாஷ் நாராயணன் அவர்களின் உள்ளம் கவர்ந்தவர் ஆவார்.

தனிமனித ஒழுக்கம், மிக அமைதியான அணுகுமுறை, எழுத்திலும் பேச்சிலும், கூரிய சிந்தனைகளை வடிப்பதில் வல்லமை, எவரிடத்திலும் பகைமை பாராட்டாமல் பரிவு காட்டும் பண்பு, அவரைக் குன்றின் மேல் இட்ட விளக்காக உயர்த்தின. பேரறிஞர் அண்ணா அவர்களின் அயல்நாட்டுப் பயணங்களில் பங்கேற்றதுடன், அமெரிக்க மருத்துவமனையில் அண்ணா சிகிச்சை பெற்றபோது உடன் இருந்து கவனித்துக் கொண்டவர் அண்ணன் செழியன் ஆவார்கள்.

என்னுடைய அழைப்பை ஏற்று, மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் நடத்திய மாநாடுகள் உள்ளிட்ட பல நிகழ்வுகளில் பங்கேற்று, பேரறிஞர் அண்ணாவின் இலட்சியங்களை முழங்கினார். மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் அதிகாரபூர்வ வார ஏடாகிய சங்கொலியின் முதல் இதழ் தொடங்கி எத்தனையோ அரசியல் ஆய்வுக் கட்டுரைகளை எழுதினார். அந்த அறிவுச் சுரங்கத்தை வேலூர் வி.ஐ.டி. பல்கலைக்கழகத்தில் வேந்தர் விஸ்வநாதன் மிகச்சிறப்பாகப் பயன்படுத்தினார்கள்.

அண்ணா நகரில் என் வீட்டுக்கு அடுத்த தெருவில் வசித்த அண்ணன் செழியன் அவர்களை அடிக்கடி சந்தித்து மணிக்கணக்கில் உரையாடிப் பயன் பெற்றேன். தனிப்பட்ட முறையில் என் மீது எல்லையற்ற வாஞ்சையும், பாசமும் கொண்டு இருந்தார்கள். அவரது மறைவு எனக்கு மட்டும் அல்லாது திராவிட இயக்கத்திற்கே பேரிழப்பு.அண்ணன் செழியன் அவர்களை இழந்து கண்ணீரில் தவிக்கும் உற்றார் உறவினர்கள், அவர் மீது பற்றுக் கொண்ட பெருந்தகையாளர்கள் அனைவருக்கும் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் கண்ணீர் அஞ்சலியைத் தெரிவித்துக் கொள்கின்றேன்” என்று தெரிவித்துள்ளார்

ராமதாஸ் (பாட்டாளி மக்கள் கட்சி) அவெளியிட்ட இரங்கல் செய்தியில், “திராவிட இயக்கத்தின் மூத்த தலைவர்களில் ஒருவரும், தலைசிறந்த நாடாளுமன்றவாதியுமான இரா. செழியன் வேலூரில் இன்று காலமானார் என்ற செய்தியறிந்து பெரும் அதிர்ச்சியும், வேதனையும், துயரமும் அடைந்தேன். திராவிய இயக்கத்தின் அறிவுச்சுரங்கங்களில் இரா. செழியன் அவர்கள் குறிப்பிடத்தக்கவர் ஆவார். 4 முறை மக்களவை உறுப்பினராகவும், ஒரு முறை மாநிலங்களவை உறுப்பினராகவும் பணியாற்றிய செழியன் ஒவ்வொரு அவையிலும் தமது முத்திரையை பதித்தார். அண்ணாவின் அன்பைப் பெற்ற செழியன், திராவிட இயக்கத்தின் சீரழிவை உணர்ந்து கொண்டு 1977-ஆம் ஆண்டு திமுகவிலிருந்து விலகி ஜனதாக்கட்சியில் தம்மை இணைத்துக் கொண்டார். நான் போற்றும் தலைவரான ஜெயப்பிரகாஷ் நாராயணனின் அன்புக்கு பாத்திரமான செழியன், 1988-ஆம் ஆண்டு வி.பி.சிங் அவர்கள் ஜனதா தளம் கட்சியை ஒருங்கிணைக்க உதவியாக இருந்தார்.

அரசியலில் தூய்மையை கடைபிடித்த செழியன், பொதுவாழ்வில் ஊழலை ஒழிக்க வேண்டும் என்பதை லட்சியமாகக் கொண்டு, அதற்காக போராடினார். செழியன் கிட்டத்தட்ட 20 ஆண்டுகளாக நாடாளுமன்றத்தில் ஆற்றிய உரைகளின் தொகுப்பான Parliament for The People (மக்களுக்காக நாடாளுமன்றம்) என்ற நூல் நிகழ்கால நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் படித்து, பின்பற்ற வேண்டிய வழிகாட்டி ஆகும். அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

திருமாவளவன் (விடுதலைச் சிறுத்தைகள் கட்சி) வெளியிட்ட அஞ்சலி செய்தியில், “அரசியல் கண்ணியத்தின் அடையாளமாகத் திகழ்ந்தவரும் தலைசிறந்த பாராளுமன்றவாதியாக மதிக்கப்பட்டவருமான திரு இரா.செழியன் அவர்களின் மறைவுச் செய்திகேட்டு அதிர்ச்சியுற்றோம். அவருக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் அஞ்சலியைத் தெரிவித்துக்கொள்கிறோம்.தமிழ்நாட்டில் மட்டுமின்றி இந்தியாவெங்கும் அறியப்பட்ட தலைவர்களில் ஒருவராகத் திகழ்ந்தவர் திரு இரா.செழியன். திராவிட இயக்கத்தில் தனது அரசியல் வாழ்வைத் துவக்கியவர் பின்னர் தேசிய அரசியலில் ஈடுபட்டார். தொடர்ந்து அரசியல் அறிவை மேம்படுத்திக் கொள்ளுதல், அயராமல் மக்கள் பணியில் ஈடுபடுதல், தனது நலனைவிட நாட்டின் நலனை மேலானதாகக் கருதுதல், எதிர்த் தரப்பைச் சார்ந்தவர்களையும் தோழமையோடு அணுகுதல் – என ஒரு அரசியல் தலைவர் எப்படி இருக்கவேண்டுமோ அதற்கு இலக்கணமாகத் திகழ்ந்தவர் திரு.இரா.செழியன் அவர்கள்.

காட்சிக்கு எளியவராக இருந்தாலும் தான் கொண்ட அரசியலை வலுவாகப் பற்றி நின்றவர்.அவசரநிலைக் கால அடக்குமுறைகளுக்கு அஞ்சாமல் ” நான் வீழ்ந்தாலும் வீழ்வேனே தவிர மண்டியிடமாட்டேன் “ எனத் துணிச்சலோடு எதிர்த்து நின்றவர். திரு ஜெயப்பிரகாஷ் நாராயணனோடு அரசியல் பணியாற்றியவர். மாநில உரிமைகள், மத்திய – மாநில உறவுகள் முதலான பிரச்சனைகளில் வல்லுனராகத் திகழ்ந்த திரு இரா.செழியன் அவர்கள் ‘ நமது நாட்டில் பாராளுமன்றமே உயர்ந்தது என சிலர் பேசிவருகின்றனர். ஆனால், பாராளுமன்றத்தைவிட நமது அரசியலமைப்புச் சட்டமே உயர்ந்தது “ எனத் தெளிவாக சுட்டிகாட்டியவர். கடந்த ஏப்ரல் மாதத்தில்தான் அவரது 95 ஆவது பிறந்தநாள் கொண்டாடப்பட்டது. அதனிடையே அவர் மறைந்துவிட்டார் என்ர இந்தத் துயரச் செய்தி வந்துள்ளது. அவரது அரசியல் கண்ணியத்தையும், அடக்குமுறைக்கு அஞ்சாத துணிவையும் பின்பற்றுவதே அவருக்கு நாம் செலுத்தும் மெய்யான அஞ்சலியாக இருக்கும். திரு இரா.செழியன் அவர்களுக்கு விடுதலைச் சிறுத்தைகளின் செம்மாந்த வீர வணக்கம்” என்று தெரிவித்துள்ளார்.மேலும் சில செய்திகள்

இப்போது விற்பனையில்

மாதமிருமுறை 15-ஆகஸ்ட்-2017

மேலும்

பிற இதழ்கள்© 2016 Jannal
All Rights Reserved.


Back to Top