பல்வேறு விதமான பரபரப்பான அரசியல் சூழ்நிலையில், தமிழக சட்டசபை இன்று கூடுகிறது. முதல் நாளான இன்று வனம், சுற்றுச்சூழல் துறை மானியக் கோரிக்கைகள் மீதான விவாதமும், பதிலுரையும் இடம் பெறுகிறது. விவாதங்களுக்கு அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், கருப்பணன் பதிலளிக்கின்றனர். அதே சமயம் இந்த கூட்டத்தொடர் ஆளும் கட்சிக்கும், எதிர்க்கட்சிகளுக்கும் கடுமையான போட்டி கூட்டத்தொடராக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக ஆளும் கட்சியான அ.தி.மு.க., எடப்பாடி கே.பழனிசாமி, ஓ.பன்னீர் செல்வம், டி.டி.வி. தினகரன் என உடைந்து இருக்கும் நிலையில் நடத்தப்படும் கூட்டத் தொடர் இதுவாகும். ஆளும் கட்சியைச் சேர்ந்த எந்த எம்.எல்.ஏ. யாருக்கு ஆதரவு தெரிவிக்கிறார் என்பது புதிராக இருக்கிறது. எனவே இந்த கூட்டத்தொடரின் ஒவ்வொரு நாளும் பரபரப்பாக இருக்கும் என்று கூறப்படுகிறது.

தமிழக சட்டசபையின் இந்த ஆண்டுக்கான முதல் கூட்டத் தொடர், கடந்த ஜனவரி மாதம் 23ம் தேதி தொடங்கியது. கவர்னர் வித்யாசாகர் ராவ் நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்தார். ஆண்டு தோறும் கவர்னர் உரையுடன் துவங்கி பிறகு பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு, மானியக் கோரிக்கைகள் மீது விவாதம் சட்ட சபையில் இடம் பெறுவது வாடிக்கை. கவர்னர் உரையின் போது முதல்வராக இருந்த பன்னீர்செல்வம் பிறகு பதவியை ராஜினாமா செய்தார். அதனை தொடர்ந்து ஏற்பட்ட அரசியல் மாற்றத்தால் எடப்பாடி பழனிசாமி கடந்த பிப்ரவரி மாதம் முதல்வராக பொறுப்பேற்றார்.

அதன் பிறகு, மார்ச் 16-ம் தேதி மீண்டும் கூடிய தமிழக சட்டசபையில், 2017 2018-ம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையை அமைச்சர் டி.ஜெயக்குமார் தாக்கல் செய்தார். தொடர்ந்து, பட்ஜெட் மீதான விவாதம் அதே மாதம் 20ம் தேதி முதல் 24ம் தேதி வரை நடைபெற்றது. ஆர்.கே. நகர் சட்டசபை இடைத்தேர்தல் வந்ததால் அன்றே சட்டசபை மறுதேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

மானிய கோரிக்கை மீதான விவாதத்திற்கு ஆர்.கே. நகர் இடைத்தேர்தலுக்குப் பின்னர் சட்டசபை மீண்டும் கூட்டப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. இந்த நிலையில் இன்று காலை 10 மணிக்கு சபை கூடுகிறது. சபையில், கேள்வி நேரம் நடைபெறும். கேள்வி நேரத்துக்குப் பிறகு நேரமில்லாத நேரத்தில் பல முக்கிய பிரச்சினைகள் குறித்து எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பும் என்று தெரிகிறது. இதன் பின், வனம் மற்றும் சுற்றுச்சூழல் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் சட்டசபையில் விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்படுகிறது. எதிர்க்கட்சி உறுப்பினர்கள் இதில் தங்களது கருத்துகளைத் தெரிவிப்பார்கள்.

இதைத்தொடர்ந்து, வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சி.சீனிவாசன், சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே.சி.கருப்பணன் ஆகியோர் பதில்களை அளித்து துறை வாரியான புதிய அறிவிப்புகளை வெளியிட உள்ளனர். இதைத்தொடர்ந்து நாளை பள்ளிக் கல்வி, இளைஞர் நலன், விளையாட்டு மேம்பாடு, உயர்கல்வி ஆகிய துறைகளின் மானியக் கோரிக்கை மீது விவாதம் நடைபெறுகிறது. இதில் பள்ளிக் கல்வித் துறை சார்பில் 41 புதிய அறிவிப்புகளை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இன்று தொடங்கி ஜூன் 19 வரை சட்டசபை கூட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இந்த சட்டசபை கூட்டத்தில் என்னென்ன விஷயங்கள் குறித்து விவாதிக்க வேண்டும் என்பது குறித்து முடிவு எடுப்பதற்காக தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் ஆலோசனை கூட்டம் சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில் நேற்று மாலை நடந்தது. கூட்டம் சுமார் ½ மணி நேரம் நடந்தது. இந்த கூட்டத்துக்கு தி.மு.க. செயல் தலைவரும், தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமை தாங்கி சட்டமன்ற கூட்டத்தில் என்னென்ன பிரச்சினைகள் குறித்து கேள்வி எழுப்ப வேண்டும் என்று எம்.எல்.ஏ.க்களுக்கு ஆலோசனை வழங்கினார்.

சசிகலா அணியை ஆதரிக்க அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க் களுக்கு ரூ.6 கோடி கொடுக்கப்பட்டதாக தனியார் டி.வி.யில் வெளியான ரகசிய வீடியோவால் பரபரப்பு ஏற்பட்டுள்ள சூழ்நிலையில் சட்டமன்ற கூட்டம் தொடங்கியதும் கேள்வி- பதில் நேரத்துக்கு பிறகு தி.மு.க. தரப்பில் இந்த விவகாரம் சம்பந்தமாக கேள்வி எழுப்ப இந்த கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.அதே போன்று நீட் தேர்வு, விவசாயிகள் பிரச்சினை, வறட்சி, குடிநீர் பிரச்சினை, மாட்டிறைச்சி விவகாரம் போன்ற பல்வேறு பிரச்சினைகள் குறித்தும் கேள்வி எழுப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், இன்று நடக்க உள்ள வனத்துறை மானிய கோரிக்கை மீதான விவாதத்திலும் கலந்து கொண்டு விவாதிப்பது என்றும் தீர்மானிக்கப்பட்டதால் பரபரப்புக்கு பஞ்சமிருக்காது என்றே தெரிகிறது.மேலும் சில செய்திகள்

இப்போது விற்பனையில்

மாதமிருமுறை 15-ஆகஸ்ட்-2017

மேலும்

பிற இதழ்கள்© 2016 Jannal
All Rights Reserved.


Back to Top