வைகை ஆற்றை மாசுபடுத்துவோருக்கு கடும் தண்டனைகள் வழங்க உத்தரவிடக்கோரிய வழக்கு தொடர்பாக, மதுரை உள்ளிட்ட 5 மாவட்ட ஆட்சியர்கள் பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரைகிளை உத்தரவிட்டுள்ளது.

வைகை நதி, வருச நாடு மலையில் தொடங்கி தேனி மாவட்டம் கம்பம் பள்ளத்தாக்கு வழியாக திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்கள் வழியாக கடலில் கலக்கும் வரை 258 கி.மீ. நீளமும், 7 ஆயிரத்து 31 சதுர கி.மீ. வடிநிலப்பரப்பும் கொண்டது. மேற்கு தொடர்ச்சி மலையில் பல்வேறு திசைகளில் இருந்து வரும் சிற்றோடைகள், மூல வைகை ஆற்றில் கலந்தாலும், பெரியாறு அணையில் இருந்து வரும் உபரி நீரே வைகை ஆற்றின் முக்கிய நீர்வரத்துக்கு ஆதாரமாக இருக்கிறது.

குறிப்பாக இந்த வைகை பல ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்களுக்கு பாசன ஆதாரமாகவும், தென் மாவட்டங்களில் வசிக்கும் 50 லட்சம் மக்களின் குடிநீர் ஆதாரமாகவும் இருக்கிறது. ஆனால், இன்று குப்பைகள், கழிவுநீர், சீமைக் கருவேல மரங்களால் ஆற்றின் தன்மையே மாறிவிட்டது. இதன் காரணமாக ஆற்றோரப் பகுதியில் நிலத்தடி நீர்மட்டம் அதலபாதாளத்துக்குச் சென்று விட்டது.

இந்நிலையில் இது குறித்து, மதுரையைச் சேர்ந்த ரமேஷ் என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த மனுவில், வைகை ஆறு, 257 கிலோ மீட்டர் பயணித்து ராமநாதபுரம் மாவட்டத்தை வந்தடையும் நிலையில், 452-க்கும் அதிகமான பகுதிகளில் கழிவுநீர் கலந்து வைகை ஆறு மாசுபடுவதாக குறிப்பிடப்பட்டிருந்தது. மதுரை மாநகராட்சியில் மட்டும் 36 இடங்களில் கழிவுநீரும், 100 டன் அளவிலான மனிதக்கழிவுகளும் ஆற்றில் கலக்கப்படுவதாக குறிப்பிடப்பட்டிருந்தது.மேலும், வைகை ஆற்றுப்பகுதியை ஆக்கிரமித்து பல்வேறு கட்டடங்களும் கட்டப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டிருந்தது. இதனால்,வைகை ஆற்றை மாசுபடுத்துபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் எனவும், 5 மாவட்டங்களிலும் வைகை ஆற்றை தூய்மைப்படுத்த உத்தரவிட வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் செல்வம், ஆதிநாதன் அமர்வு, புகார் குறித்து பதில் மனு தாக்கல் செய்ய தமிழக பொதுப்பணிகள் மற்றும் நீராதாரத் துறையின் செயலர், நீராதார மேலாண்மைத் துறையின் தலைமைப் பொறியாளர் தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்ட ஆட்சியர்களுக்கு உத்தரவிட்டு, வழக்கை ஜுலை 14-ம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.மேலும் சில செய்திகள்

இப்போது விற்பனையில்

மாதமிருமுறை 15-ஜூன்-2017

மேலும்

பிற இதழ்கள்© 2016 Jannal
All Rights Reserved.


Back to Top