சென்னை ராஜ்பவனில் சனிக்கிழமை மாலை கவர்னர் வித்யாசாகர் ராவை தமிழக சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் சந்தித்தார். உடன் துரைமுருகன், கே.ஆர்.ராமசாமி, அபுபக்கர் ஆகியோர் இருந்தனர். அப்போது எம்.எல்.ஏக்களிடம் பேரம் பேசப்பட்டதாக வெளியான வீடியோ விவகாரம் குறித்து விசாரிக்க வேண்டும் என்றும், சட்டப்பேரவையில் விவாதிக்க அனுமதி கேட்டும், சபாநாயகர் மறுத்துவிட்டார் என்பதையும் ஸ்டாலின் கவர்னரிடம் தெரிவித்தார். புகாருக்கு ஆதாரமாக ஒரு சி.டி.யை ஆளுநரிடம் ஸ்டாலின் அளித்துள்ளார். மேலும், குதிரை பேர விவகாரம் குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். சட்டப்பேரவையில் மீண்டும் நம்பிக்கை வாக்கெடுப்பு தீர்மானம் நடத்த வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி திமுக சார்பில் ஸ்டாலின் கவர்னரிடம் மனு அளித்தார்.

முன்னதாக திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் இது தொடர்பாக இன்று திமுக தொண்டர்களுக்கு ஸ்டாலின் எழுதிய கடிதத்தில், ''கூவத்தூர் முகாமில் சிறை வைக்கப்பட்டிருந்த ஆளுங்கட்சியின் சட்டப்பேரவை உறுப்பினர்களே, அங்கே தாங்கள் எந்தளவுக்கு விலை பேசப்பட்டோம் என்பதை 'ஸ்டிங் ஆபரேஷன்' மூலம் எடுக்கப்பட்ட வீடியோ மூலம் வெளிப்படுத்தி இருக்கிறார்கள். மக்கள் தங்களுக்கு அளித்த வாக்குகளை, ஏலம் விடுவது போல, கூவத்தூர் முகாமில் ரூ.2 கோடி, ரூ.4 கோடி, ரூ.6 கோடி என குதிரை பேரம் நடத்தியிருப்பதைக் கண்கூடாகக் கண்ட பிறகும், எந்த நடவடிக்கையும் இல்லை. இது குறித்து பேரவையில் விவாதத்திற்கு அனுமதிக்க வேண்டும் எனத் தொடர்ந்து வலியுறுத்திய போதும் பேரவைத் தலைவர் அனுமதிக்கவில்லை.

நீதிமன்றத்தில் உள்ள விவகாரத்தை சட்டமன்றத்தில் விவாதிக்க முடியாது என்றார். இதுபோன்ற நிகழ்வுகளில் சட்டமன்றத்தில் ஏற்கனவே விவாதங்கள் நிகழ்ந்திருப்பதையும், அதற்கான சட்டப் பிரிவையும் சுட்டிக்காட்டியும் அவர் ஏற்கவில்லை. வீடியோ ஆதாரம் இருந்தால் கொடுங்கள் என்றார். அந்த ஆதாரத்தையும் சமர்ப்பித்தோம். வீடியோ ஆதாரம் அளித்த பிறகும் சட்டமன்றத்தில் இதுபற்றி விவாதிக்க அனுமதிக்கவில்லை. ஆளுங்கட்சியினரின் குதிரை பேரம் குறித்து பேசியதற்காக வலிமைமிகு எதிர்கட்சியான திமுகவின் சட்டமன்ற உறுப்பினர்கள் வெளியேற்றப்பட்டோம். மறியல் போராட்டம் நடத்தினோம். கைது செய்யப்பட்டோம்.

ஜெயலலிதா ஆட்சிக்கு வந்த 2011-ல் தொடங்கி கடந்த 6 ஆண்டுகளாக 110 விதியின் கீழ் அறிவிக்கப்பட்ட நூற்றுக்கணக்கான திட்டங்களின் கதி ஆகியவை உள்ளிட்ட அனைத்தையும் திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் பேரவையில் எழுப்பியபோது, காகிதப் புலிகளாக ஆளுங்கட்சியின் அமைச்சர்கள் பதிலளிக்கிறார்களே தவிர, தங்கள் ஆட்சியில் மக்களுக்கு கிடைத்த நன்மை குறித்து வெள்ளை அறிக்கையை வெளியிட முன்வரவில்லை. திமுகவின் 89 எம்.எல்.ஏக்களும் நீர்நிலைகளைத் தூர்வாருவதில் தொடங்கி பல்வேறு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் தமிழக மக்களிடம் நாளுக்கு நாள் நமக்கு ஆதரவு பெருகி வருகிறது.

ஆளுங்கட்சியின் ஜனநாயக விரோதச் செயல்கள் குறித்து நீதிமன்றத்தில் முறையிட்டுள்ளோம். மக்கள் சக்தி, திமுகவுக்கு ஆதரவாக உள்ள நிலையில், இந்த 'குதிரை பேர' ஆட்சியை மக்கள் துணையுடன் அகற்ற அணி திரள்வோம். மக்கள் விரும்பும் திமுக அரசை ஜனநாயக நெறிமுறைகளின் படி விரைந்து அமைக்க சூளுரைப்போம்'' என்று ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.மேலும் சில செய்திகள்

இப்போது விற்பனையில்

மாதமிருமுறை 15-ஆகஸ்ட்-2017

மேலும்

பிற இதழ்கள்© 2016 Jannal
All Rights Reserved.


Back to Top