மினி உலகக் கோப்பை எனப்படும் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.,) நடத்திய எட்டாவது சாம்பியன்ஸ் டிராபி தொடர் இங்கிலாந்தில் இம்மாதம் 1ம் தேதி தொடங்கியது. இதில் உலகின் ‘டாப் -8’ அணிகள் பங்கேற்றன. நடப்பு சாம்பியன் இந்தியா இடம் பெற்ற ‘பி’ பிரிவில் பாகிஸ்தான், தென் ஆப்ரிக்கா, இலங்கை அணிகளும், ‘ஏ’ பிரிவில் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, வங்கதேசம் ஆகிய அணிகள் இடம்பெற்றன. முதலில் இருபிரிவிலும் போட்டிகள் லீக் முறையில் நடைபெற்றன. இதில், ‘ஏ’ பிரிவில் இங்கிலாந்து, வங்கதேசம், ‘பி’ பிரிவில் இந்தியா, பாகிஸ்தான் அணிகள் முறையே முதல் இரண்டு இடத்தைப் பிடித்து அரையிறுதிக்கு முன்னேறின. ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, தென் ஆப்ரிக்கா, இலங்கை அணிகள் முதல் சுற்றுடன் மூட்டையைக் கட்டின. பரபரப்பான அரைஇறுதியில், இங்கிலாந்தை பாகிஸ்தானும், வங்கதேசத்தை இந்தியாவும் வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறின.இந்த நிலையில், இந்த மெகா தொடரின் இறுதிப் போட்டி லண்டன் ஓவல் மைதானத்தில் நேற்று நடந்தது.

டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் விராத் கோஹ்லி பந்துவீச்சை தேர்வு செய்தார். இதனையடுத்து களமிறங்கிய பாகிஸ்தான் 50 ஓவர் முடிவில்  4 விக்கெட் இழப்புக்கு 338 ரன்கள் குவித்தது. இந்தியாவுக்கு எதிராக பாகிஸ்தானின் 2-வது அதிகபட்ச ஸ்கோர் இதுவாகும். முகமது ஹபீஸ் 57 ரன்களுடனும் (37 பந்து, 4 பவுண்டரி, 3 சிக்சர்), இமாத் வாசிம் 25 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். இந்திய அணி தரப்பில் சிறப்பாக பந்துவீசிய புவனேஸ்வர் குமார், பாண்டியா, கேதர் ஜாதவ் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.

கடின இலக்கை துரத்திய இந்திய அணிக்கு துவக்கத்திலிருந்தே பாகிஸ்தான் பந்துவீச்சாளர்களின் துல்லியமான பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் விக்கெட்டுகள் மளமளவென சரியத்தொடங்கியது. இந்திய அணியின் முன்னணி வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தனர். ஒரு கட்டத்தில் 72 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய அணியை தனது அதிரடியால் சரிவிலிருந்து மீட்டெடுத்தார் பாண்டியா.

76 ரன்கள் குவித்த நிலையில் துரதிஷ்டவசமாக பாண்டியா ரன் அவுட் ஆனதால் இந்திய அணியின் தோல்வி உறுதியானது. பின்னர் வந்த வீரர்கள் சொற்ப ரன்னில் ஆட்டமிழந்ததால் இந்திய அணி 158 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இந்தியாவை 180 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி பாக்கிஸ்தான் அணி சாம்பியன் பட்டத்தை தட்டிச்சென்றது. இந்திய அணியில் அதிகபட்சமாக பாண்டியா 76, யுவராஜ் 22, தவான் 21 ரன்கள் எடுத்தனர் மற்ற வீரர்கள் ஒற்றை இலக்க ரன்னில் ஆட்டமிழந்தனர். பாகிஸ்தான் தரப்பில் சிறப்பாக பந்துவீசிய ஆமீர் 3 விக்கெட்டுகளும், ஹசன் அலி,சதாப் கான் தலா 2 விக்கெட்டுகளும் வீழ்த்தி பாகிஸ்தானின் வெற்றிக்கு வித்திட்டனர்.

இப்போட்டியின் முடிவில் 180 ரன் வித்தியாசத்தில் இமாலய வெற்றி பெற்ற பாகிஸ்தான் அணி முதல் முறையாக கோப்பையை கைப்பற்றி அசத்தியது. சதம் அடித்த பகார் ஜமான் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார். தொடர் நாயகன் விருதை ஷசன் அலி வென்றாரச். கோல்டன் பேட் பரிசை இந்தியாவின் ஷிகர் தவானும், கோல்டன் பால் விருதை பாகிஸ்தானின் ஹசன் அலியும் வென்றனர். வெற்றி பெற்ற பாகிஸ்தான் அணிக்கு கோப்பையுடன் ரூ.14 கோடி பரிசாக கிடைத்தது. 2வது இடத்தைப் பிடித்த இந்திய அணிக்கு ரூ.7 கோடி வழங்கப்பட்டது.மேலும் சில செய்திகள்

இப்போது விற்பனையில்

மாதமிருமுறை 15-ஆகஸ்ட்-2017

மேலும்

பிற இதழ்கள்© 2016 Jannal
All Rights Reserved.


Back to Top