இஸ்லாமியர்கள் ஆண்டுதோறும் ரம்ஜான் மாதத்தில், நோன்பு நோற்று, மாத இறுதியில், ஈகைத் திருநாளாகக் கொண்டாடுவது வழக்கம். இதன்படி, நடப்பாண்டில், சில இடங்களில் நேற்று ரம்ஜான் கொண்டாடப்பட்ட நிலையில், தமிழகம் உள்ளிட்ட பகுதிகளில் இன்று கொண்டாடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ரமலான் பண்டிகை நாட்டின் அனைத்து பகுதிகளிலும் களை கட்டியுள்ளது. தலைநகர் புதுடெல்லி, மும்பை, போபால் உள்ளிட்ட இடங்களில் பள்ளிவாசல்களில் சிறப்பு தொழுகைகள் நடைபெற்றது. சிறப்பு தொழுகைகளில் ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் கலந்து கொண்டனர். இந்த தொழுகைக்குப் பின்னர் இஸ்லாமிய மக்கள் ஒருவரை ஒருவர் தழுவி வாழ்த்துகளை தெரிவித்தனர். புத்தாடைகள் அணிந்தும் இனிப்புகள் வழங்கியும் மகிழ்ச்சியையும் அவர்கள் வெளிப்படுத்தினர். ரமலான் பண்டிகையை முன்னிட்டு இஸ்லாமிய மக்களுக்கு பிரதமர் மோடி, ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி மற்றும் அரசியல் கட்சித் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

முன்னதாக, பிரதமர் மோடி வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், இந்தியாவில் உள்ள வேறுபாடுகளே அதன் தனித்துவம் மற்றும் பலம் என்றும் ரம்ஜான் கொண்டாடும் அனைவருக்கும் தனது இதயம் கனிந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்வதாக தெரிவித்துள்ளார்.

ஆளுநர் வித்யாசாகர் ராவ்:

நெறி தவறாத வாழ்க்கை, சகிப்புத்தன்மை, பொறுமை, ஈகை போன்றவற்றை புனித குரான் நமக்கு அறிவுறுத்துகிறது. முகமது நபி வலியுறுத்திய அமைதி, ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்தை பின்பற்றி நடப்போம்.

முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி:

ரம்ஜான் திருநாளில் உலகில் அமைதி நிலவட்டும், அன்பு தழைக்கட்டும், மகிழ்ச்சி பெருகட்டும், சகோதரத்துவம் ஓங்கட்டும் என்று வாழ்த்தி, என் அன்புக்குரிய இஸ்லாமியப் பெருமக்கள் அனைவருக்கும் மீண்டும் ஒரு முறை எனது உளமார்ந்த ரம்ஜான் திருநாள் நல்வாழ்த்துகள்.

திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின்:

2007ல் இஸ்லாமியர்களுக்கு பிற்படுத்தப்பட்டோருக்கான 30 விழுக்காட்டில் 3.5 விழுக்காடு உள்ஒதுக்கீடு வழங்கி இஸ்லாமியர்கள் அரசுக் கல்வி நிறுவனங்களில் உரிய இடங்களைப் பெறவும், தமிழக அரசுப் பணிகளில் தங்களுக்குரிய பங்கினைப் பெற்று வளம்பெறவும் வழிவகுத்தது என்று எண்ணற்ற அரிய சாதனைகளை பட்டியலிடலாம். இஸ்லாமிய மக்களின் உயர்வுக்காக என்றும் பாடுபடுகின்ற உரிமையுடனும் உணர்வுகளுடனும், தமிழகத்தில் வாழும் இஸ்லாமிய பெருமக்கள் அனைவருக்கும் தலைவர் கருணாநிதி சார்பில், எனது நெஞ்சார்ந்த ரமலான் திருநாள் நல்வாழ்த்துகளை உரித்தாக்கி, திமுக என்றைக்கும் சிறுபான்மையின மக்களின் முன்னேற்றத்திற்காக துணைநிற்கும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்:

ரம்ஜான் நாளில் இஸ்லாமிய சகோதர, சகோதரிகள் அனைவரும் நலமுடன் வாழ்ந்திடவும், அவர்கள் வாழ்வில் அமைதியும், ஆனந்தமும் பொங்கி பெருகிடவும் எல்லா வல்ல இறைவனை வேண்டி எனது ஈகைத் திருநாள் நல்வாழ்த்துக்கள்.

டி.டி.வி.தினகரன் (அதிமுக அம்மா அணி துணை பொதுச்செயலாளர்):

இந்த இனிய நாளில் உலகெங்கும் அன்பும், அமைதியும், சமத்துவமும், சமாதானமும் நிலைத்து வாழவும், நீடித்து பெருகவும் எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக் கொண்டு எனது புனித ரமலான் திருநாள் நல்வாழ்த்துக்களை உரிதாக்கிக் கொள்கிறேன்.

திருநாவுக்கரசர்( காங்கிரஸ் தலைவர்):

ஏக இறைவனை வணங்கி, இல்லாதோருக்கு வழங்கி, எல்லா மக்களுடனும் இணங்கி வாழும் இஸ்லாமியப் பெருமக்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வாழ்ந்து காட்டிய சமாதானம், சமத்துவம், சகோதரத்துவம், சகவாழ்வு முறைகளை பின்பற்றி என்றும்போல் இன்புற்று வாழ பிரார்த்திக்கிறேன்.

விஜயகாந்த்(தேமுதிக தலைவர்):

ரம்ஜான் திருநாளைக் கொண்டாடும் இந்த இனிய நாளில், அன்பு ஓங்கிட, அறம் தழைத்திட, சமாதானம் நிலவிட, சகோதரத்துவம் வளர்ந்திட வேண்டுமென இஸ்லாமிய பெருமக்கள் அனைவருக்கும் எனது இதயம் கனிந்த ரம்ஜான் நல்வாழ்த்துக்கள்.

ராமதாஸ்(பாமக நிறுவனர்):

ரமலான் திருநாளைக் கொண்டாடும் உலகெங்கும் உள்ள இஸ்லாமிய சகோதர, சகோதரிகள் அனைவருக்கும் இதயங்கனிந்த வாழ்த்துகள்.

வைகோ(மதிமுக பொது செயலாளர்):

ஏழை, எளிய மக்களுக்கு ஜக்காத் என்னும் நன்கொடைகளை வாரி வழங்கி, ஈதுப் பெருநாளில் ஈத்துவக்கும் மகிழ்ச்சியில் திளைக்கின்ற இஸ்லாமியப் பெருமக்களுக்கு, மதிமு சார்பில் என் வாழ்த்துகள்.

ஜி.கே.வாசன்(தமாகா தலைவர்):

புனித ரமலான் மாதத்தில் அனைவரும் ஒற்றுமையுடன், ஒன்றுப்பட்டு வாழ்வோம். எல்லோரும், எல்லா வளங்களையும், நலங்களையும் பெற இறைவன் அருள்புாிய வேண்டும்.

திருமாவளவன்(விடுதலைச் சிறுத்தை கட்சி தலைவர் ):

சமூகநல்லிணக்கத்திற்கும் வழிவகுக்கும் இஸ்லாம் நெறியைப் பின்பற்றும் இஸ்லாமிய சொந்தங்கள் யாவருக்கும் எமது இனிய ரமலான் வாழ்த்துகள்.

காதர் மொகிதீன்(இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர்):

ரமலான் மாதம் முழுவதும் நோன்பிலிருந்து இன்பம் பெற்றோம். யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்.

 மேலும் சில செய்திகள்

இப்போது விற்பனையில்

மாதமிருமுறை 15-ஜூலை-2017

மேலும்

பிற இதழ்கள்© 2016 Jannal
All Rights Reserved.


Back to Top