கடந்த 14 அண்டு கால தொடர் ஆலோசனையின் பலனாக தயாரான சரக்கு, சேவை வரி இன்று முதல் அறிமுகம் ஆகி விட்டது. பாராளுமன்ற மைய மண்டபத்தில் ஒரே நாடு; ஒரே வரி எனப்படும் ஜிஎஸ்டி அறிமுக விழா கோலாகலமாக நடந்தது. நம் நாட்டின் மிகப்பெரிய பொருளாதார சீர்திருத்தம் என்பதால், இந்நிகழ்ச்சியை பிரமாண்டமாக நடத்த பாஜ அரசு முடிவு செய்தது. அதன்படி, வரலாற்று சிறப்புமிக்க நாடாளுமன்றத்தின் மைய மண்டபத்தில் நள்ளிரவு சிறப்பு கூட்டத்தை நடத்த முடிவு செய்தது. இதில் பங்கேற்க அனைத்து எம்பிக்கள், மாநில முதல்வர்கள், நிதி அமைச்சர்கள், அரசியல் கட்சி தலைவர்கள், தொழிலதிபர்கள், பிரபலங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. விழாவையொட்டி, வண்ண விளக்குகளால் மைய மண்டபம் ஜொலித்தது. ஜிஎஸ்டியை நிறைவேற்றும் சிறப்பு கூட்டம் நாடாளுமன்றத்தில் நேற்று இரவு 11 மணிக்கு தொடங்கியது. இதில், காங்கிரஸ் ஆட்சியில் ஜிஎஸ்டி மசோதாவை தாக்கல் செய்த முன்னாள் நிதி அமைச்சர் என்ற முறையில் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார்.

விழாவில் பிரதமர் நரேந்திர மோடி, முன்னாள் பிரதமர் தேவகவுடா, மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி, மக்களவை சபாநாயகர் சுமித்ரா மகாஜன், துணை ஜனாதிபதி ஹமீத் அன்சாரி மற்றும் மத்திய அமைச்சர்கள், எம்பிக்கள் பங்கேற்றனர். இதுதவிர, தொழிலதிபர் ரத்தன் டாட்டா, ரிசர்வ் வங்கி ஆளுநர் உர்ஜித் படேல், முன்னாள் கவர்னர்கள் பிமால் ஜாலன், ஒய்.வி.ரெட்டி உள்ளிட்ட 1000க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இவ்விழாவில் பங்கேற்க முன்னாள் பிரதமரான மன்மோகன் சிங்குக்கு அரசு தரப்பில் சிறப்பு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. ஆனால், காங்கிரஸ் கட்சி விழாவை புறக்கணித்த காரணத்தால், மன்மோகன் சிங் பங்கேற்வில்லை. அதே போல இடதுசாரிகள், திரிணாமுல் காங்கிரஸ், திமுக, ராஷ்டிரிய ஜனதா தளம் உள்ளிட்ட பெரும்பாலான எதிர்க்கட்சிகள் விழாவை புறக்கணித்தன.

ஐக்கிய ஜனதா தள தலைவரும், பீகார் முதல்வருமான நிதிஷ் குமார் ஜிஎஸ்டிக்கு ஆதரவு தெரிவித்த போதிலும், விழாவில் பங்கேற்கவில்லை. பாஜ ஆளும் மாநில முதல்வர்கள் அனைவரும் நிகழ்ச்சியில் பங்கேற்றனர். சரியாக நள்ளிரவு 12 மணி அளவில் ஜனாதிபதி பிரணாப், பிரதமர் மோடி முன்னிலையில், ஜிஎஸ்டி அமலாவதை குறிக்கும் வகையில் மணியடிக்கப்பட்டது. விழாவில் பங்கேற்றவர்கள் கைதட்டி, ஜிஎஸ்டியை வரவேற்றனர்.மேலும் சில செய்திகள்

இப்போது விற்பனையில்

மாதமிருமுறை 15-ஜூலை-2017

மேலும்

பிற இதழ்கள்© 2016 Jannal
All Rights Reserved.


Back to Top