தமிழக அரசு சார்பில் முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் நூற்றாண்டு விழா கொண்டாடப்படுகிறது. இதற்கான தொடக்க விழா மதுரை ரிங் ரோடு பாண்டி கோயில் அம்மா திடலில் நேற்று நடந்தது. அரசு தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் வரவேற்றார். அமைச்சர்கள் செல்லூர் கே.ராஜூ, ஆர்.பி.உதயகுமார், மதுரை புறநகர் மாவட்டச் செயலாளர் ராஜன்செல்லப்பா எம்எல்ஏ முன்னிலை வகித்து பேசினர். அங்குள்ள புகைப்பட கண்காட்சியை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி திறந்து வைத்த அவர் எம்.ஜி.ஆர். கட்-அவுட் அருகில் நின்று செல்பி எடுத்துக்கொண்டார்.

தொடர்ந்து நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி பின்னர் பேசிய போது,“உலகப்புகழ் பெற்ற மீனாட்சி அம்மன் எழுந்தருளி இருக்கும் இம் மதுரை மண், மல்லிகைக்கும் பெயர் பெற்றது. வீரத்திற்கும், விவேகத்திற்கும் மற்றும் விசுவாசத்திற்கும் பெயர் பெற்றது என்றால் அது மிகையல்ல. கழகம் ஆரம்பித்த நான் முதல் இன்று வரை, புரட்சித்தலைவர் டாக்டர் எம்,ஜி,ஆர், புரட்சித் தலைவி அம்மா மற்றும் அம்மா அவர்களின் வழியில் செயல்படும் அம்மாவின் அரசிற்கு, அ.தி.மு.கழகத்திற்கு, விசுவாசமாக இருக்கும் மக்கள் மதுரை மாவட்ட மக்கள் என்பதை இத்தருணத்தில் மகிழ்ச்சியுடன் குறிப்பிட விரும்புகிறேன். ஆகவே எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவை மதுரையில் தொடங்குவது என்பது மிகவும் பொருத்த மானது. எம்ஜிஆர் மதுரையை நேசித்த காரணத்தாலே மதுரை வீரன், மதுரையை மீட்ட சுந்தர பாண்டியன் போன்ற திரைப்படங் களில் நடித்தார். அமெரிக்காவில் சிகிச்சை பெற்ற எம்ஜிஆர் ஒருங்கிணைந்த மதுரை மாவட்டம் ஆண்டிபட்டியில் போட்டியிட்டு வெற்றிபெற்று மீண்டும் முதல்வர் ஆனார்.

மதுரைதான் அவரை மறு அவதாரம் எடுக்க செய்தது. 1986-ம் ஆண்டு மதுரையில் கட்சி மாநாடு நடத்தினார். அந்த மாநாட்டில்தான் வெள்ளி செங்கோலை ஜெயலலிதா அளித்தார். அவருக்கு பிறகு கட்சிக்கு ஜெயலலிதாதான் என்பதை அடையாளம் காட்டிய நாளாக அந்த மாநாடு அமைந்தது. இவ்வாறு கட்சியின் வரலாற்றிலும், எம்ஜிஆரின் வாழ்விலும், ஜெயலலிதாவின் இதயத்திலும் மதுரை நீங்கா இடம்பெற்றது. அண்ணா தொடங்கிய திமுகவை வெகுஜன இயக்கமாக மாற்றிக் காட்டியவர் எம்ஜிஆர். அவரின் அன்பான அணுகுமுறையால் திமுக தமிழகத்தில் ஆட்சியைப் பிடித்தது. சத்துணவு திட்டம் உள்ளிட்ட மக்கள் விரும்பும் எண்ணற்ற திட்டங்களையும் கூறலாம்.

1967-ல் துப்பாக்கியால் சுடப்பட்டதை அறிந்ததும், நாடே பதறியது. அப்போது எம்.ஜி.ஆர். அவ்வளவுதான் என்றனர் அவரது அரசியல் எதிரிகள். ஆனால், எம்ஜிஆர் இமயம் போல் எழுந்து நின்றார். எம்ஜிஆர் செய்த தியாகங்கள்தான், அவரை பொதுவாழ்வில் உயரச் செய்தது. எம்ஜிஆரின் புகழ் இன்னும் நூறு ஆண்டுகள் நிலைக்கும். அதிமுகவை வெல்வதற்கு இன்னொரு இயக்கம் தமிழகத்தில் இல்லை. அண்ணாவின் பேச்சு, எம்ஜிஆரின் வசீகரம், ஜெயலலிதாவின் உழைப்பை கட்சியின் மூவர்ணக் கொடியாகக் கருத வேண்டும். கட்சியினர் ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து சகிப்புத் தன்மையுடன் கட்சிப் பணியாற்ற வேண்டும். பேச்சைக் குறைத்து செயலில் இறங்க வேண்டும்.

இப்பேர்பட்ட மதுரை, மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்திற்கு நூற்றாண்டு விழா நாயகர், மக்கள் தலைவர், முன்னாள் முதல்வர், புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆரின் பெயரை சூட்ட வேண்டும் என்று கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ, வருவாய்த்துறை அமைச்சர் உதயகுமார், மதுரை மாவட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் பொது மக்கள் அனைவரும் விடுத்த கோரிக்கையினை அரசு உடனடியாக ஏற்று, புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர்- மக்கள் தலைவராக தமிழகத்தின் முதலமைச்சராக 40 வருடங்களுக்கு முன், அதாவது, 30.06.1977ல் பதவியேற்ற இதே நன்னாளில் மதுரை, மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்திற்கு புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். பேருந்து நிலையம் என்று பெயர் சூட்டப்படுகிறது என்பதை இம்மேடையில் மகிழ்ச்சியுடன் அறிவிப்பதில் பெருமை கொள்கிறேன்” என்று அவர் தெரிவித்தார்.மேலும் சில செய்திகள்

இப்போது விற்பனையில்

மாதமிருமுறை 15-ஜூலை-2017

மேலும்

பிற இதழ்கள்© 2016 Jannal
All Rights Reserved.


Back to Top