தென் மாவட்டங்களில் புராதன சிறப்புமிக்க நெல்லையப்பர் கோயில் சுமார் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட பழமை வாய்ந்த கோயிலாகும். நெல்லையப்பர் கோயில் பல்வேறு காலகட்டத்தில் விரிவாக்கம் செய்யப்பட்டது. இங்கு சுவாமி, அம்பாளுக்கு என தனித்தனி சன்னதிகள் உள்ளன.இக்கோயில் சுமார் 12 ஏக்கர் பரப்பளவில் பரந்து விரிந்து காணப்படுகிறது. இக்கோயில் 850 அடிநீளத்திலும், 756 அடி அகலத்திலும் அமைக்கப்பட்டுள்ளது. தெற்கு, வடக்கு பிரகாரங்கள் 387 அடி நீளமும், 42 அடி அகலமும் நடைபாதை 17 அடியிலும் அமைக்கப்பட்டுள்ளது. இதன் கீழ்பிரகாரம் மற்றும் மேல் பிரகாரங்கள் 295 அடி நீளமும் 40 அடி அகலமும், நடைபாதை 17 அடியிலும் அமைக்கப்பட்டுள்ளது. கோயில் கோபுரங்கள் 1626ல் கட்டப்பட்டதாக வரலாற்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

வரலாற்று பெருமைமிக்க இக் கோயிலில் ஆண்டுதோறும்  ஆனிப் பெருந்திருவிழாவையொட்டி தேரோட்டம் நடைபெறும். இதற்காக கடந்த 30 ஆண்டுகளுக்கு முன் 13 அடுக்குகள் கொண்டு தேர் அலங்காரம் அமைக்கப்பட்டு தேரோட்டம் நடந்து வந்தது. ஆனால் தேரோட்டத்தின் போது காற்று வீசுவதால் தேர் சாய்ந்த நிலையில் வருவதுபோல் தோன்றும். ஆகையால் தேரின் உயரம் 9 அடுக்காக குறைக்கப்பட்டது. தற்போது 5 அடுக்குகளாக ஆக்கப்பட்டு தேரோட்டம் நடக்கிறது.

மேலும் தமிழகத்தில் 3வது பெரிய தேர் பிரசித்தி பெற்ற நெல்லையப்பர் கோயிலில் சுவாமி, அம்பாள், விநாயகர், சுப்பிரமணியர், சண்டிகேஸ்வரர் என 5 தேர்கள் உள்ளன. சுவாமித்தேர் தமிழகத்தின் 3வது பெரிய தேராகும். இத் தேரின் எடை 450 டன், அகலம் 28 அடி, நீளம் 28 அடி, உயரம் அலங்கார தட்டுகளை சேர்த்து சுமார் 70 அடியாக அமைந்துள்ளது. இத்தகைய சிறப்புகளை உடைய 513வது ஆனிதேரோட்டம் இன்று நடக்கிறது.

பக்தர்களால் மட்டுமே இழுக்கப்படும் தேர் சுவாமி தேரோட்டம் 1504லும், 13ம் நூற்றாண்டில் சுப்பிரமணியர் தேரோட்டம் நடந்ததாகவும் கல்வெட்டு ஆதாரங்கள் உள்ளன. சுவாமி தேருக்கு இரும்பிலான அச்சானி 1800ம் ஆண்டு லண்டனிலிருந்த கொண்டுவரப்பட்டு அமைக்கப்பட்டது. இதனை தற்போதும் தேரின் அடிப்பகுதியில் காணலாம். திருவாரூர் மற்றும் ஸ்ரீவில்லிபுத்தூர் தேர்கள் புல்டோசர் மூலமே தள்ளப்பட்டு இழுக்கப்படுகின்றன. ஆனால் நெல்லையப்பர் கோயில் தேர் தொடர்ந்து 513வது ஆண்டாக பக்தர்கள் மூலம் மட்டுமே இழுக்கப்பட்டு வருகிறது. சுவாமி தேரை சுற்றிலும் சிவபுராணம், விஷ்ணுபுராணங்களை விளக்கும் வகையில் சிலைகள் அமையப்பெற்றுள்ளன. சமூக ஒற்றுமையை வலியுறுத்தவே ஆண்டு தோறும் கோயில்களில் தேரோட்டம் நடத்தப்படுகிறது.

இத்தகைய சிறப்புகளை உடைய இந்த நெல்லையப்பர் கோயில் ஆனி பெருந்திருவிழா கடந்த 29 ஆம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. விழாவையொட்டி தினமும் சுவாமி, அம்பாளுக்கு காலை மற்றும் மாலையில் சிறப்பு வழிபாடும், இரவு சுவாமி, அம்பாள் ரதவீதி வலமும் நடைபெற்று வந்தது. நேற்று காலை நடராஜர் வெள்ளை சாத்தி உள்பிரகாரம் வலம் வருதலும், பச்சை சாத்தி ரதவீதி உலாவும் நடந்தது. மாலையில் கங்காளநாதர் தங்கசப்பரத்தில் வீதிவலம் நடந்தது.
இதைதொடர்ந்து இரவு 10 மணிக்கு சுவாமி தங்க கைலாச பர்வத வாகனத்திலும், அம்பாள் தங்க கிளி வாகனத்திலும் வீதி உலா நடக்கிறது. இதனை தொடர்ந்து சுவாமி, அம்பாள் திருத்தேர் எழுந்தருளும் வைபவம் நடந்தது. முன்னதாக அதிகாலையில் விநாயகர், சுப்பிரமணியர் தேர்கள் வடம் பிடித்து இழுக்கப்பட்டன. தொடர்ந்து அம்மன் மற்றும் சாமி தேர்கள் புறப்பாடு அரகர மகாதேவா ஓம் நமச்சிவாய என விண்ணை முட்டும் பக்தர்களின் கோஷத்துடன் வெகுவிமரிசையாக நடைபெற்றது..

தேரோட்டத்தை முன்னிட்டு ரதவீதிகளில் திடீர் கடைகள், தோன்றியதால் 4 ரதவீதிகளும் விழாக்கோலம் கண்டது. ஆனித்தேரோட்டத்தை முன்னிட்டு நெல்லையப்பர் கோயிலில் சுவாமி அம்பாளை தரிசிக்க இருவழிப்பாதை அமல்படுத்தப்பட்டுள்ளது. கோயிலுக்கு வரும் பக்தர்கள் சுவாமி, அம்பாள் பிரதான நுழைவு வாயில் வழியாக வரவேண்டும். தரிசனம் முடித்து மேலவாசல் மற்றும் வடக்கு வாசல் வழியாக பக்தர்கள் வெளியே செல்ல வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளனர். விழாவுக்கான ஏற்பாடுகளை செயல் அலுவலர் யக்ஞநாராயணன் மற்றும் கோயில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.மேலும் சில செய்திகள்

இப்போது விற்பனையில்

மாதமிருமுறை 15-ஜூலை-2017

மேலும்

பிற இதழ்கள்© 2016 Jannal
All Rights Reserved.


Back to Top