ட்ரீம் வாரியர்ஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரிக்கப்பட்ட கூட்டத்தில் ஒருத்தன் வரும் வெள்ளிக்கிழமை ரிலீஸாகிறது. இத் திரைப்படத்தின் அறிமுக விழா திருச்சியில் நடைபெற்றது. அதில் படத்தின் இயக்குநர் ஞானவேல், கதாநாயகன் அசோக் செல்வன், கதாநாயகி ப்ரியா ஆனந்த், இசையமைப்பாளர் நிவாஸ் ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர்.

அப்போது படத்தின் இயக்குநர் ஞானவேல் கூறும்போது.,”நான் பத்திரிக்கையாளராக இருந்தவன். அதன் பிறகு பயணம் படத்தின் மூலம் வசனகர்தாவாகவும், அதன் பின்னர் உதவி இயக்குநராகி தற்போது இயக்குநராகி உள்ளேன். நான் பத்திரிக்கையாளராக இருப்பதையே அதிகம் விரும்புகிறேன். பத்திரிக்கையாளர் பார்வையில்தான் கதை சொல்வேன். அதாவது பத்திரிக்கையாளர்களை போல 360 டிகிரியில் கதை சொல்வேன். இந்த படத்தின் கதை மிடில் பெஞ்ச் காதல் கதை. அதாவது 'பெரும்பான்மையான குடும்பங்களில் மூத்த குழந்தையையோ அல்லது இளைய குழந்தையையோ கொஞ்சுவார்கள். அவர்கள் அப்பா செல்லமாக, அம்மா செல்லமாகவோ இருப்பார்கள். ஆனால், இடையில் பிறந்த குழந்தை மீது பெரிதாக கவனம் இருக்காது. அப்படி இடையில் பிறந்த ஒருத்தன் இந்த உலகத்தை மாற்றி அமைக்கப் புறப்படுகிறான். நடு பெஞ்ச் மாணவர்களின் முக்கியத்துவத்தைக் கூறுவதே 'கூட்டத்தில் ஒருத்தன்' கதை'' என்றார்.

'ரத்த சரித்திரம்', 'பயணம்' உள்ளிட்ட படங்களுக்கு வசனம் எழுதிய ஞானவேலின் முதல் படம் கூட்டத்தில் ஒருத்தன் என்பது குறிப்பிடத்தக்கது. முதலில் 'கூட்டத்தில் ஒருவன்' என்றே படத்துக்கு தலைப்பு வைக்கப்பட்டது. பிறகு 'கூட்டத்தில் ஒருத்தன்' என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது. என்று முன்னரே கூறினார்.

அவரை தொடர்ந்து திரைப்படத்தின் கதாநாயகி ப்ரியா ஆனந்த் செய்தியாளர்களிடம் பேசும் போது.”ஆரம்ப காலத்தில் கிராமப்புற வேடங்களுக்கு, கிராமப்புற பெண்களை தேடினோம். ஆனால், அவர்கள் நடிக்க வர மறுக்கிறார்கள், அதனால்தான் நாங்கள் வட மாநில பெண்களை தேர்தெடுக்கிறோம் என்று இயக்குநர்கள் கூறி வந்தனர். ஆனால், அது உண்மை இல்லை. நான் மாயவரத்தில் பிறந்த பெண். அங்கு பெரும்பாலும் மாநிறமாகதான் இருப்பார்கள். கிராமப்புற வேடங்களில் அழகான வடநாட்டு நடிகைகளை நடிக்க வைப்பது அபத்தம். அது படம் எடுக்கும் இயக்குநர்களின் விருப்பம். நான் தற்போது மலையாளத்தில் நடித்து வருகிறேன். அங்கு எனக்கு பிடித்த விஷயம், மலையாள திரைப்படத்தில் கேரள பெண்கள் நடிப்பதையே இயக்குநர்களும், ரசிகர்களும் விரும்புகிறார்கள். இந்த விஷயம் எனக்கு பயத்தை தந்துள்ளது.

தற்போதுதான் பல தமிழ் இயக்குநர்கள் தமிழக திறமையை நம்ப தொடங்கி உள்ளனர். தொடக்கத்தில் தமிழகத்தில் இருந்து சென்றுதான் வடக்கில் ஹீரோயின்களாக நடித்து பிரபலமானார்கள். ஆனால், துரதிருஷ்டவசமாக அந்த நிலை மாறி வடக்கில் இருந்து பெண்கள் இங்கு வந்து பிரபலமடைகிறார்கள்” என்று தெரிவித்தார்.மேலும் சில செய்திகள்

இப்போது விற்பனையில்

மாதமிருமுறை 15-ஆகஸ்ட்-2017

மேலும்

பிற இதழ்கள்© 2016 Jannal
All Rights Reserved.


Back to Top