பெங்களூர் சிறைச்சாலையில் அ.தி.மு.க. பொதுச்செயலலாளர் சசிகலாவை, துணை பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் இன்று சந்தித்து பேசினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், “சிறையில் சசிகலாவை சந்தித்து நலம் விசாரித்தேன். மற்ற கைதிகளுக்கு எப்படி உணவு தரப்படுகிறேதா அதேபோல்தான் சசிகலாவுக்கும் வழங்கப்படுகிறது. சசிகலாவுக்கு எதிரான குற்றச்சாட்டு கூறிய சிறைத்துறை முன்னாள் டிஐஜி ரூபா மீது கண்டிப்பாக வழக்கு தொடரப்படும். நீதிமன்றமும் வழக்கும் எனக்கு பழக்கப்பட்ட விஷயம்தான் என்பதால் பொறுத்திருந்து பாருங்கள். எனக்கு 122 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு உள்ளது. கட்சிப் பணிக்காக அ.தி.மு.க. தலைமைக் கழகத்திற்கு நிச்சயம் செல்வேன். கட்சியின் துணைப் பொதுச்செயலாளரை அலுவலகத்திற்கு வரவிடாமல் தடுக்க யாருக்கும் அதிகாரம் இல்லை. அணிகள் இணைப்புக்கு அவகாசம் அளித்தும் அவர்கள் ஒன்றிணையவில்லை. எனக்கு ஆதரவு அளித்தால் பிரச்சனை வந்துவிடும் என்பதால் சிலர் பயப்படுகின்றனர்.

அரசின் செயல்பாடுகள் குறித்து பொதுக்கூட்டங்களில் பேசுவேன். அதேசமயம், எனக்கும் அரசுக்கும் தொடர்பு இல்லாததால் தற்போது எதுவும் கூற இயலாது. நல்ல சிந்தனையாளரான கமல் அரசியலுக்கு வர விரும்பினால் வரலாம். ஊழல் தொடர்பாக அவர் தகுந்த ஆதாரத்துடன புகார் அளித்தால் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.

முன்னதாக எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவை சிறப்பாக நடத்துவது தொடர்பாக அ.தி.மு.க அம்மா அணியின் ஆலோசனை கூட்டம் சென்னையில் உள்ள அ.தி.மு.க அம்மா அணியின் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு நேற்று மாலை 5.30 மணி்க்கு முதல்வரும், அ.தி.மு.க தலைமைக்கழக செயலாளருமான எடப்பாடி பழனிசாமி தலைமை தாங்கினார். இந்த கூட்டத்தில் அமைச்சர்கள் ஜெயகுமார், திண்டுக்கல் சீனிவாசன், செங்கோட்டையன், கே.பி.அன்பழகன், தங்கமணி, எஸ்.பி.வேலுமணி, பெஞ்சமின், செல்லூர் கே.ராஜூ, ஆர்.பி.உதயகுமார், கடம்பூர் ராஜூ, சி.வி.சண்முகம், தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி தளவாய்சுந்தரம், எம்.ஜி.ஆர் மன்ற செயலாளர் தமிழ்மகன் உசேன், செயலாளர்கள் வி.பி.கலைராஜன், பாலகங்கா, வாலாஜா கணேசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இந்த கூட்டத்திற்கு பின்னர் நிதி அமைச்சர் ஜெயக்குமார் நிருபர்களுக்கு பேட்டி அளித்த போது அவர், “எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு விழாவை சிறப்பாக நடத்த வேண்டும் என்று முன்னாள் முதல்வர் ஜெயலலிதா விரும்பினார். அவரது விருப்பத்தை நிறைவேற்றும் வகையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவை சிறப்பாக நடத்தி வருகிறார். மதுரையில் தொடங்கிய எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா ஒவ்வொரு மாவட்டமாக சிறப்பாக நடத்தப்பட்டு வருகிறது. மேலும் அந்த விழாக்களை சிறப்பாக நடத்தவே ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டது.

இதனிடையே இரு அணிகள் இணைவது குறித்தான பேச்சுவார்த்தை என்பது தொடர்ந்து நடந்து வருகிறது. எங்களை பொறுத்த வரை கூடி வாழ்ந்தால் கோடி நன்மை என்று நினைக்கிறோம். யாரையும் விட வேண்டும் என்ற எண்ணம் எங்களுக்கு கிடையாது. அ.தி.மு.கவில் உள்ள அனைத்து தொண்டர்களும் இணைந்து செயல்படவேண்டும் என்று தான் கருதுகிறார்கள். தெளிவாக இருக்கிறோம்..கீழ்மட்டம் முதல் மேல்மட்டம் வரை அதே நிலை தான் நிலவுகிறது. ஓ.பன்னீர் செல்வம் தரப்பில் அமைக்கப்பட்ட பேச்சுவார்த்தை குழுதான் கலைக்கப்பட்டது. ஆனால் எங்கள் தரப்பில் அமைக்கபட்ட குழு அப்படியேதான் இருக்கிறது. இரு அணிகள் இணைப்பது குறித்த பேச்சுவார்த்தை அனைத்து மட்டத்திலும் நடந்து வருகிறது. அந்த பேச்சுவார்த்தையில் விரைவில் நல்ல முடிவு எட்டப்படும். நாங்கள் தெளிவாக இருக்கிறோம்.

எங்களை பொருத்தவரை அம்மா வழியில் சிறப்பாக செயல்படுகிறோம். எம்.ஜி.ஆர்., அம்மா உருவாக்கிய எஃகு கோட்டையை, அம்மா எப்படி வழி நடத்தினாரோ அப்படியே வழி நடத்த வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறோம். மத்தியில் காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோது அவருகளுக்கு தி.மு.க. கொத்தடிமையாக இருந்து தமிழகத்தின் உரிமைகளை விட்டு கொடுத்து விட்டது.
அம்மா முதல்வர் ஆன பின்னர்தான் தமிழகத்தின் உரிமைகள் மீட்கப்பட்டு மத்திய அரசின் திட்டங்கள் தமிழகத்தில் செயல்படுத்தப்பட்டது. மத்திய நிதி அமைச்சர் இங்கு வந்த போது, தமிழகத்துக்கு தேயைான ரூ.17 ஆயிரத்து 74 கோடிக்கு திட்ட அறிக்கையை கொடுத்தோம். அதை பெற்று தமிழக மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்பதுதான் எங்கள் நோக்கம். மத்திய அரசோடு கூட்டணி வைப்பது எங்கள் நோக்கம் அல்ல. எங்களை பொருத்தவரை கட்சியையும், ஆட்சியையும் முதல்வர் எடப்பாடி
பழனிச்சாமி சிறப்பாக நடத்தி வருகிறார்” என்று தெரிவித்திருந்தார்.

அடிசினல் தகவல் :

டி.டி.வி.தினகரனால் அதுமுகவில் கிளம்பிய கிலி, முதல்வர் எடப்பாடி பழனிசாமியையும் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்தையும் ஒன்றிணைக்க வைத்துவிட்டதாக கோட்டை வட்டாரங்கள் தெரிவித்தன.இதுகுறித்து ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் கூறுகையில், "சசிகலா குடும்பத்தினரின் கட்டுப்பாட்டில் அ.தி.மு.க. இருக்கக்கூடாது என்பதை வலியுறுத்தி தர்மயுத்தத்தில் ஈடுபட்டுவருகிறோம். சசிகலா, டி.டி.வி.தினகரன் ஆகியோரை கட்சியிலிருந்து விலக்க முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் அமைச்சர்கள் முடிவு செய்திருந்தனர். அதே சமயம் இரண்டு அணிகளும் ஒன்றிணைய நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையில், சுமுகத் தீர்வு ஏற்படாதவாறு சிலர் தடுத்தனர்.

ஆனால் தற்போது தினகரன், கட்சி அலுவலகத்துக்கு வருவது தொடர்பாக முதல்வர் எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர்செல்வம் அணியினரும் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டோம். அப்போது முதல்வர் எடப்பாடி பழனிசாமி தரப்பிலிருந்து ஓ.பன்னீர் செல்வத்துக்கு பொதுச் செயலாளர் பதவியை வழங்க சம்மதம் தெரிவித்து, அது தொடர்பாக எங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால், அதுதொடர்பாக இறுதி முடிவு எடுக்கப்படவில்லை. இதன் மூலம் இரட்டை சிலை சின்னமும் மீண்டு விடும் என்பதால் மிக விரைவில் நல்ல செய்தி ஒன்று கட்சித் தலைமையிலிருந்து வெளிவரும்" என்று கரகரத்த குரலில் சொன்னதை கேட்ட போது ’அரசியல்லே இதெல்லாம் சகஜமப்பா’ என்ற டயலாக் நினைவுக்கு வருவதை தவிர்க்க இயலவில்லை!மேலும் சில செய்திகள்

இப்போது விற்பனையில்

மாதமிருமுறை 15-ஆகஸ்ட்-2017

மேலும்

பிற இதழ்கள்© 2016 Jannal
All Rights Reserved.


Back to Top