நம் முன்னோர்கள் அன்றாடம் செய்து வந்த யோகாவை தினந்தோறும் செய்வதனால் கிடைக்கும் உடல் நலன்களைப் பற்றி பெரியளவில் விழிப்புணர்வு உருவாகியுள்ளது. தகவல்களைச் செயல் முறைப்படுத்த, படைப்பாற்றலையும் செயல் திறனையும் அதிகரிக்க, மன அழுத்தத்தை எதிர்க்கொள்ள, ஆன்மாவின் கவலைகளிலிருந்து மீண்டு வர சக்தி கொடுக்கிறது. யோகா கொடுக்கும் அறிவாற்றல், நரம்பியல் மற்றும் மனநிலை சம்பந்தப்பட்ட பயன்கள் எண்ணற்றவை. இதனிடையே யோகா மற்றும் விளையாட்டுகளை ஊக்குவிக்கும் விதமாக அவற்றை பள்ளி குழந்தைகளுக்கு கட்டாயமாக்கும் பணிகளை மத்திய அரசு மேற்கொண்டு வருவதாக மத்திய இளைஞர் நலம் மற்றும் விளையாட்டு துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதன்படி, ஆறு முதல் பத்தாம் வகுப்பு வரை அனைத்து சிபிஎஸ்இ பள்ளிகளிலும் யோகா, ஜிம்னாஸ்டிக், நீச்சல் உள்ளிட்டவற்றில் ஏதேனும் இரண்டு கட்டாயம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதே போல 1-ஆம் வகுப்பு முதல் 10-ஆம் வகுப்பு வரை அதிகபட்சம் 45 நிமிடம் வரை உடற்தகுதி விளையாட்டுகளை குழந்தைகள் மேற்கொள்வதை பள்ளிகள் உறுதி செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது. மாநில வழி கல்வி அமைப்புகளும் இத்தகைய உடல்திறன் செயல்பாடுகளை ஊக்குவிக்க வேண்டும் என மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

முன்னதாக அஷ்வினி குமார் உபாத்யாய என்ற வழக்கறிஞர் மற்றும் டெல்லி பாஜக செய்தித் தொடர்பாளர் ஜே.சி.சேத் ஆகியோர் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், அனைத்து மக்களுக்கும், குறிப்பாக குழந்தைகளுக்கு அடிப்படை சுகாதார உரிமைகள் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டிய கடமை மத்திய அரசுக்கு உள்ளது. யோகா மற்றும் சுகாதாரக்கல்வியை குழந்தைகளுக்கு அளிக்க வேண்டும் அல்லது தேசிய யோகா கொள்கையை வகுத்து அதை ஊக்குவிக்க வேண்டும் என கேட்டு கொள்ளப்பட்டிருந்தது. இம்மனுவை விசாரித்த நீதிபதி எம்.பி.லோகுர் தலைமையிலான பெஞ்ச், இம்மனுவையே கோரிக்கையாகக் கருதி, இவ்விவகாரம் குறித்து 3 மாதத்துக்குள் மத்திய அரசு முடிவெடுக்க வேண்டும் என கடந்த நவம்பரில் உத்தரவிட்டிருந்தது.

இதனிடையே தற்போது நாடு முழுவதும் பள்ளிகளில் மாணவர்களுக்கு யோகாவை கட்டாயப் பாடமாக்குவது குறித்த மனுவைத் தள்ளுபடி செய்து சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்த மனுவை நீதிபதி எம்.பி.லோகுர் தலைமையிலான அமர்வு விசாரித்த போது நீதிமன்றத்தின் தரப்பில், ''மத்திய அரசே இது குறித்து முடிவெடுக்க வேண்டும். பள்ளிகளில் என்ன கற்பிக்க வேண்டும் என்று சொல்ல எங்களுக்கு உரிமை இல்லை. அது எங்களின் வேலையும் இல்லை. எங்களால் எப்படி வரையறை செய்ய முடியும்?'' என்று கேள்வி எழுப்பியது. அத்துடன், ''பள்ளிகளில் என்ன கற்பிக்கப்பட வேண்டும் என்பது அடிப்படை உரிமை கிடையாது'' என்றும் நீதிபதிகள் கூறி, மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.மேலும் சில செய்திகள்

இப்போது விற்பனையில்

மாதமிருமுறை 15-ஆகஸ்ட்-2017

மேலும்

பிற இதழ்கள்© 2016 Jannal
All Rights Reserved.


Back to Top