திமுக-வின் அதிகாரப்பூர்வ நாளிதழான முரசொலி பவளவிழாவையொட்டி சென்னை கலைவாணர் அரங்கில் வாழ்த்தரங்கம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் நடிகர் ரஜினிகாந்த், கமலஹாசன், மற்றும் முன்னணி பத்திரிகை நிறுவனங்களின் ஆசிரியர்கள், எழுத்தாளர்கள், அரசியல் தலைவர்கள், முக்கிய பிரமுகர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினர்.

முன்னதாக முரசொலி நா‌ளிதழின் பவள விழாவை முன்னிட்டு, சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள முரசொலி அலுவலகத்தில் காட்சி அரங்கம் தொடங்கி வைக்கப்பட்டது. இந்த காட்சி அரங்கத்தை இந்து நாளிதழின் தலைவர் இந்து என்.ராம் திறந்து வைத்தார். திராவிட கழகத் தலைவர் கி.வீரமணி தலைமை வகித்தார். அவர்கள் இருவருக்கும் காட்சி அரங்கத்தில் வைக்கப்பட்டிருந்த அரிய புகைப்படங்கள் குறித்து திமுக செயல் தலைவர் ஸ்டாலின் விளக்கினார்.

இந்த காட்சி அரங்கத்தில் திராவிட இயக்கம் கடந்து வந்த பாதை தொடர்பான அரிய புகைப்படங்களும், உடன்பிறப்புகளுக்கு திமுக தலைவர் கருணாநிதி எழுதிய கடிதங்களும் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. இந்தி எதிர்ப்பு போராட்டத்தின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்களும், அறிஞர் அண்ணாவின் கடிதங்களும் கண்காட்சியில்‌ இடம்பெற்றுள்ளன.

இந்நிலையில் திமுக தொண்டர்களுக்கு திமுக தலைவர் கருணாநிதி எழுதிய கடிதத்தில், “முரசொலி பவள விழாவைக் கண்டு விழிகள் மட்டும் விரிந்திடவில்லை. சுவாசப் பைகளும் விரிந்திடுகின்றன. தமக்கு அன்பெனும் அமுதம் ஊட்டி ஆதரவு கரம் நீட்டிய தமிழ் பெருமக்களுக்கு நன்றி. என் கடன் பணி செய்து கிடப்பதே. அரசியலுக்கு அப்பாற்பட்டு முரசொலி பவளவிழாவிற்கு வாழ்த்து தெரிவித்த தலைவர்களுக்கு நன்றி” என்று கூறப்பட்டிருந்தது.

பின்னர் மாலையில் நடந்த விழாவில் கமல் பேசியபோது, ''ரஜினி இந்த விழாவிற்கு வருகிறாரா என்று ஒரு கேள்வி கேட்டேன். ஆமாம் வருகிறார் என்றார் ஸ்டாலின். அவரும் பேசுகிறாரா என்றேன். இல்லை, மேடைக்கு கீழே அமர்ந்து பார்வையாளராக இருப்பதாக சொல்லி விட்டார் என்றார். அப்படியானால் நானும் கீழேயே அமர்ந்து கொள்கிறேன் என்றேன். எதுவும் சொல்ல வந்தால் கையை பிடித்து இழுத்துக்கொள்வார் ரஜினி என்ற தைரியம் இருந்தது. விழாவுக்கு அழைத்துவிட்டு ஸ்டாலின் சென்ற பிறகு கண்ணாடியில் என்னை பார்த்துக்கொண்டேன். அடேய் முட்டாள் எவ்வளவு பெரிய வாய்ப்பை இழக்கிறாய். இந்த விழா எப்படிப்பட்டது என்பதை முதலில் புரிந்துகொள் என்றது. தற்காப்பு முக்கியம் அல்ல; தன்மானம்தான் முக்கியம். ஏன் அப்படி சொல்கிறேன் என்றால் இந்த மேடையில் அமர்ந்திருக்கும் ஒரு அரிய வாய்ப்பு எனக்கு கிடைத்திருக்கிறது.

அந்த மேடையில் அமர்ந்து கழகத்தில் சேரப் போகிறீர்களா என்று ட்விட்டரில் கேள்வி கேட்கிறார்கள். சேருவதாக இருந்தால் 1983ல் கலைஞர் டெலிகிராம் மூலம் அழைப்பு விடுத்தபோதே சேர்ந்திருப்பேன். கலைஞரின் பெருந்தன்மை என்னவென்றால் அதன் பிறகு இதுவரையிலும் அது பற்றி கேட்கவில்லை. அந்த மரியாதை இந்த மேடையிலும் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் வந்திருக்கிறேன். விகடன் பா.சீனிவாசன் பேசும்போது பூணூல் பத்திரிகை என்று கலைஞர் விமர்சனம் செய்ததை சொன்னார். அவரே இந்த விழாவுக்கு மகிழ்வோடு வந்திருக்கும்போது பூணூலே இல்லாத கலைஞானி இந்த விழாவுக்கு வருவதில் என்ன ஆச்சரியம்? ஏன் இப்படி பதறுகிறீர்கள்? அரசியல் பற்று விமர்சனம் செய்வீர்களா என்றால் அதற்கு இதுவா மேடை. அந்த அறிவு எனக்காவது இருக்க வேண்டாமா? ''என்றார்.

விழாவில் பங்பேற்றுப் பேசிய, கவிஞர் வைரத்து , 18 வயதில் முரசொலி பத்திரிகையை நடத்த கருணாநிதி பொறுப்பு எடுத்துக்கொண்டார். அது காதலியை தேடும் வயது என்றும், திருமண பத்திரிகை அடிக்கும் வயதில், கொள்கைக்காக பத்திரிகையை நிறுவியவர் கருணாநிதி என்றும் பாராட்டிப் பேசினார். பணம், செல்வாக்கு என்ற எந்த ஒரு பின்புலமும் இல்லாமல், ஒரு பத்திரிகையை நிறுவி அதை 75 வருட காலம் நீடித்து வளர செய்வது என்பது கருணாநிதி ஒருவரால் மட்டுமே முடியும் என்றும் அவர் தெரிவித்தார்.

பொதுவாக ஆளும் கட்சியாக இருந்தால் மட்டுமே, அரசு அரங்கங்களில் விழா நடத்த முடியும், ஆனால் எதிர்கட்சியாக இருந்து கொண்டு முரசொலி பவள விழாவிற்காக அரசாங்க அரங்கத்தை எப்படி பிடித்தீர்கள் என ஸ்டாலினிடம் கேள்வி எழுப்பிய வைரமுத்து, அரசு அரங்கைப் பிடித்த உங்களால் அரசை பிடிக்க முடியாதா?”என கேட்டு அரங்கை அதிர வைத்தார்.மேலும் சில செய்திகள்

இப்போது விற்பனையில்

மாதமிருமுறை 15-ஆகஸ்ட்-2017

மேலும்

பிற இதழ்கள்© 2016 Jannal
All Rights Reserved.


Back to Top