மெரினாவில் மீண்டும் சிவாஜி சிலையை அமைக்க வேண்டும் என தமிழ் திரையுலகம் சார்பில் அரசுக்கு கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. மறைந்த நடிகர்திலகம் சிவாஜி கணேசனுக்கு சென்னை மெரினா கடற்கரை காமராஜர் சாலையில் காந்தி சிலைக்கு எதிரே வெண்கல சிலை கடந்த 9 ஆண்டுகளுக்கு முன்பு அப்போதைய திமுக ஆட்சியில் அமைக்கப்பட்டது. பின்னர் போக்குவரத்துக்கு இடையூறாக அந்த சிலையிருப்பதால் அதை அகற்ற வேண்டும் என நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தொடரப்பட்டது. இதனை அடுத்து கடந்த வாரம் மெரினா பீச் ரோட்டிலிருந்து அதிரடியாக நள்ளிரவில் சிவாஜி சிலை அகற்றப்பட்டது. தற்போது அந்த சிலை ராஜா அண்ணாமலைபுரத்தில் கட்டப்பட்டு வரும் சிவாஜி மணி மண்டபத்தில் வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இயக்குனர்கள் சங்க தலைவர் விக்கிரமன், பெப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணி, நடிகர், இயக்குனர் சீமான் ஆகியோர் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தனர். அப்போது ஆர்.கே.செல்வமணி கூறுகையில், எங்கள் கலை உலகின் மூத்த கலைஞன் சிவாஜி கணேசனுக்கு மீண்டும் மெரினாவில் சிலை அமைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.

அதனை தொடர்ந்து பேசிய சீமான் கூறுகையில், ”மெரினாவில் இருந்து சிவாஜி சிலை அகற்றப்பட்டது சிவாஜிக்கு ஏற்பட்ட அவமானமாக கருதவில்லை, ஒட்டுமொத்த தமிழர்களுக்கு ஏற்பட்ட அவமானமாக கருதுகிறோம். யார் யாருக்கோ மெரினாவில் சிலை இருக்கும் போது விபத்து நடைபெற்றதாக எந்த ஒரு புள்ளிவிவரமும் இல்லாத நிலையில் சிவாஜி கணேசனின் சிலை மட்டும் அகற்றப்பட்டது வேதனையளிக்கிறது.

அன்றைக்கு கண்ணகி சிலை என்ன காரணத்திற்காக அகற்றப்பட்டதோ அதே காரணம் தான் இன்றைக்கு சிவாஜி சிலைக்கும் ஏற்பட்டுள்ளது. அந்த மகா கலைஞனுக்கு மீண்டும் மெரினாவில் சிலை அமைக்க அரசு ஆவன செய்ய வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். அதே போல் இயக்குனர் விக்கிரமனும் மெரினாவில் எங்காவது ஒரு இடத்தில் சிவாஜி கணேசனுக்கு சிலை அமைத்து தர வேண்டும்” என கேட்டுக்கொண்டார்.மேலும் சில செய்திகள்

இப்போது விற்பனையில்

மாதமிருமுறை 15-ஆகஸ்ட்-2017

மேலும்

பிற இதழ்கள்© 2016 Jannal
All Rights Reserved.


Back to Top