நவீனமயமாகிவிட்ட இன்றைய காலகட்டத்தில் தொலைக்காட்சி இல்லாத வீடுகளே இல்லை என்று சொல்லும் அளவுக்கு உலகம் முழுக்க வியாபித்துவிட்டன. இத் தொலைக்காட்சி மூலம் செய்திகள், உலக நடப்புகள், அறிவுத் திறன் வளர்ச்சி போன்ற பல்வேறு பயன்கள் இருந்தாலும் இதில் கொஞ்சம் ஆபத்துகள் இருப்பதையும் அவ்வப்போது ஆய்வு செய்து நிரூபித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்.

ஏற்கெனவே சின்னஞ்சிறு குழந்தைகள் ஓடி விளையாடாமல், தொலைக்காட்சி முன்பு அமர்ந்து நிகழ்ச்சிகளை கண்கொட்டாமல் பார்த்துக் கொண்டிருந்தால், அவர்களுக்கு அதி விரைவாக ரத்த அழுத்த நோய் தாக்கும் என்று மருத்துவ ஆய்வுகள் தெரிவித்தன.

உடற்பயிற்சி இன்றி ஒரே இடத்தில் அமர்ந்துகொண்டு ஒரு நாளைக்கு இரண்டு மணி நேரத்துக்குமேல் தொலைக்காட்சி பார்க்கும் குழந்தைகளில் 1000 பேருக்கு 110 குழந்தைகள் ரத்த அழுத்த நோயால் பாதிக்கப்பட்டிருப்பதாக ஆய்வுகள் தெரிவித்தன.

இப்பிரச்னையை மேலும் வலுவாக்கும்வகையில், தொலைக்காட்சிகளில் அதிக நேரத்தைச் நேரத்தை செலவிடும் பதின்ம வயதுக் குழந்தைகளின் அறிவுத்திறன் மங்கிவிடும் என்று அதிர்ச்சி ஆய்வுத் தகவல் வெளியாகியுள்ளது.

பெரும்பாலும் தொலைக்காட்சிமுன் பழியாய் கிடக்கும் சிறுவர், சிறுமிகளை பள்ளிப் பாடங்களை படிக்குமாறு பெற்றோர்கள் கட்டாயப்படுத்துவதை எல்லா வீடுகளிலும் காண முடியும். அப்படி பெற்றோர்கள் சொல்வதில் எவ்வளவு நன்மை உள்ளது என்பதை சமீபத்திய ஆய்வு  உறுதிப்படுத்துகிறது.

இங்கிலாந்தில் உள்ள கேம்ப்ரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் எடுக்கப்பட்ட ஆய்வுகளின் முடிவில் இந்தத் தகவல் வெளியாகியுள்ளது. இப்படி தொலைக்காட்சியைப் பார்ப்பது மட்டுமின்றி ஆன்லைனில் கேம்ஸ் விளையாடுவது, கணினிகளில் எதையெதையோ தேடும்பொருட்டு அதிக நேரம் செலவிட்டாலும் அவர்கள் பள்ளித் தேர்வுகளில் எடுக்கும் மதிப்பெண்களில் அது பாதிப்பை ஏற்படுத்தும் என்று கூறுகிறது ஆய்வு.

அதேசமயம் கூடுதலாக ஒரு மணிநேரம் தங்களது வீட்டுப் பாடங்களைச் செய்வது, அவற்றை வாசித்தல் போன்றவற்றை தினமும் கடைப்பிடித்தால் தேர்வுகளில் சக மாணவர்களைவிட ஒரு படி அதிகமான மதிப்பெண்களை இந்த மாணவர்கள் பெறமுடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையொட்டி இங்கிலாந்தில் உள்ள மேல்நிலைப் பள்ளிகளில் பயிலும் சுமார் 847 மாணவர்களிடம் சர்வே எடுக்கப்பட்டதன் அடிப்படையில் முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது. இவர்களில், தொலைக்காட்சிகளில் அதிக நேரம் செலவிடும் மாணவர்களின் கிரேடுகள் குறைவதுதான் ஆய்வில் தெரிய வந்துள்ளது. இந்த ஆய்வு கிர்ஸ்டன் கார்டர் என்பவரால் நடத்தப்பட்டுள்ளது. இதுபற்றி அவர் கூறுகையில், ’’இவ்விஷயத்தில் இன்னும் சில ஆய்வுகள் தேவைப்படுகிறது. எனினும் தங்கள் குழந்தைகளின் மதிப்பெண் குறித்து கவலைப்படும் பெற்றோர்கள், அவர்கள் தொலைக்காட்சி முன் அதிக நேரம் செலவிடுவதைக் கட்டுப்படுத்த வேண்டும்’’ என்று விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

அதேசமயம் உடற்பயிற்சி, விளையாட்டு போன்ற உடற் செயற்பாட்டுக்கும் கல்விச் செயல்திறனுக்கும் இடையே குறிப்பிடத்தக்க தொடர்பு இல்லை எனவும் அந்த ஆய்வு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இப்போது விற்பனையில்

மாதமிருமுறை 15-ஆகஸ்ட்-2017

மேலும்

பிற இதழ்கள்© 2016 Jannal
All Rights Reserved.


Back to Top