நம் நாட்டில் காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை தயாராகும் எல்லா வகை உணவிலும் தவறாமல் இடம் பிடிப்பது கருவேப்பிலை என்று சொன்னால் மிகையல்ல. ஆனாலும் இந்தக் கருவேப்பிலையை எடுத்துக் கீழே போட்டு விட்டு சாப்பிடுவதையே பெரும்பாலானோர் வழக்கமாக கொண்டுள்ளனர். அதே சமயம் தற்போது கருவேப்பிலையில் பல்வேறு மருத்துவ குணங்கள் இருப்பது ஆய்வுகள் மூலம் உறுதியாகி உள்ளது. இதில் வைட்டமின் ஏ,பி,சி, கால்சியம் போன்ற சத்துக்கள் உள்ளன என்றும் கருவேப்பிலை புற்று நோயை ஆரம்ப கட்டத்திலேயே கொல்லும் தன்மையுடையது என்பதைக் கண்டறிந்துள்ளனர். குறிப்பாக, ஆஸ்திரேலியாவின் நியூட்ரிசன் சயின்டிஸ்ட் ஆராய்ச்சி நிறுவனத்தின் தலைமை ஆராய்ச்சியாளர் லனோகோபியாக் கருவேப்பிலை மருத்துவ குணம் நிறைந்த ஆண்டியாக்சிடெண்ட் ஆகத் திகழ்வதாகவும், புற்று நோய் மற்றும் இதய நோய்களை குறைத்து ஞாபக சக்தியை அதிகரிக்கும் அரிய மருந்து என்று கூறியுள்ளார். இதிலிருந்து எண்ணெய் எடுத்து அதை நுரையீரல் , இருதயம், கண் நோய்களை தீர்க்க தலைக்கு தேய்க்கும் எண்ணெயாக பயன்படுத்தலாம் என்று இங்கிலாந்து வேளாண் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்தக் கருவேப்பிலை இந்தியாவில் அதிகமாக விளையக்கூடியது. இது காடுகளிலும், மலைகளிலும், வீட்டுத் தோட்டங்களிலும் பயிராகக்கூடிய ஒரு பெருஞ் செடியின் வகையைச் சார்ந்தது. எனினும் நாம் இதனைப் பொதுவாக சிறுமரம் என்றே அழைக்கிறார்கள். இதனை கருவேப்பிலை என்று அழைக்கப்பட்டாலும் இதன் உண்மையான பெயர் கறிவேப்பிலைதானாம். இது ஒரு சத்து நிறைந்த கீரையாகும். இதில் 63 சதம் நீரும், 6.1 சதவீதம் புரதமும், ஒரு விழுக்காடு கொழுப்பும், 4 விழுக்காடு தாதுப்புகளும், 6.4 சதவீதம் நார்ச்சத்தும், 18.7 சதவீதம் மாவுச்சத்தும் இருக்கின்றன. இந்த கீரை 108 கலோரி சக்தியை கொடுக்கிறது. சுண்ணாம்புச் சத்து. மக்னீசியம். மணிச்சத்து, இரும்பு சத்து, தாமிர சத்து, கந்தக சத்து மற்றும் குளோரின், ஆக்ஸாலிக் ஆஸிட் முதலியவற்றின் சத்தும் இந்த தழையில் உண்டு. உயிர்சத்து மிகுதியாக உள்ள இந்தக் கீரையில் வைட்டமின் A, 12.600 அனைத்துவகை அலகு கொண்டதாகும்.

உடலுக்குப் பலம் உண்டாக்கக்கூடியது. பசியைத் தூண்டும் சக்தி வாய்ந்தது. பித்தத்தைத் தணித்து உடல் சூட்டை ஆற்றும் குணம் உடையது. இந்த கீரை மனதிற்கு உற்சாகத்தைக் கொடுக்கவல்லது. கறிவேப்பிலை வேம்பு இலை போன்ற தோற்றமளிக்கும். ஆனால் கறிவேப்பிலை, வேப்பம் இலையைப் போல் பச்சையாக இல்லாமல் சற்று கரும்பச்சை நிறமாக இருக்கும். மரத்தின் பட்டையும் சிறிது கருப்பாக இருக்கும். இதனாலேயே இதனைக் கருவேம்பு என்பர். இதை ஒட்டியே வடமொழியில் ‘காலசாகம்’ என்ற பெயர் கருவேப்பிலைக்கு ஏற்பட்டுள்ளது. இதனைக் கால்க்ஸ் என்றும் கூறுவர். செம்பு என்னும் பொருள்படக்கூடியது. இந்த மரம் செம்புநிறச் சாயல் உள்ள காரணத்தினால் இப்பெயர் சூட்டப்பட்டிருக்கலாம்.

கறிவேப்பிலையில் இரண்டு வகை உண்டு, அவை நாட்டுக்கறிவேப்பிலை, காட்டுக்கறிவேப்பிலை என்பவையே அவை.. நாட்டுக் கறிவேப்பிலை உணவாகவும், காட்டுக்கறிவேப்பிலை மருந்தாகவும் பயன்படுகிறது. காட்டுக் கறிவேப்பிலையின் இலை சற்றுப் பெரிதாகவும் கசப்பு அதிகம் உள்ளதாகவும் இருக்கும். நாட்டுக் கறிவேப்பிலை இலை அதனைவிடச் சிறிதாகவும், இனிப்பும், துவர்ப்பும் நறுமணமும் உள்ளதாக இருக்கும்.

பூக்கள் கொத்தாக அமைந்திருக்கும், கறிவேப்பிலைப் பழம் உருண்டை வடிவாக கொண்டது. இந்த பழம் சதைப்பற்றாக இருக்கும். காய் பழுத்து சிவப்பாகி பின்னர் கருப்பு நிறமாக மாறிவிடும். கறிவேப்பிலையின் இலை, ஈர்க்கு,பட்டை, வேர் முதலியன உணவாகவும் மருந்தாகவும் பயன்படுகிறது.

கருவேப்பிலை சாப்பிட்டால் கண் பார்வைக்கோளாறு உங்களை அணுகாது. எலும்புகள் பலப்படும் சோகை நோய் வர பயப்படும். புண்கள் விரைவில் ஆற கருவேப்பிலை உதவுகிறது. வாய்ப்புண் உள்ளவர்கள் கருவேப்பிலை சாப்பிட்டால் வாய்ப்புண் ஆறிவிடும். வயிறு சம்பந்தப்பட்ட வியாதிகளைப் போக்கும் குணம் கருவேப்பிலைக்கு உண்டு. மலச்சிக்கலைப் போக்கும், ஜீரணசக்தியைக் கூட்டும், பேதியைக் கட்டுப்படுத்தும். பித்தத்தைக்கட்டுப்படுத்தி வாந்தியைத் தடுத்து வயிற்று இரைச்சலைத் தடுக்கும்.

இது தவிர நீரழிவு நோயாளிகள் காலையில் 10, மாலையில் 10, கருவேப்பிலையை பறித்து வாயில் போட்டு மென்று சாற்றைக் குடித்து வந்தால் இன்சுலின் மருந்து அளவை பாதியாக குறைத்து விடலாம் என்று மருத்துவர்கள் குறிப்பிடுகின்றனர். தினசரி வெறும் வயிற்றில் கருவேப்பிலையை தொடர்ந்து 3 மாதங்கள் சாப்பிட்டு வந்தால் நீரழிவு நோயால் உடல் பருமனாவது தடுக்கப்படும். சிறுநீரில் சர்க்கரை வெளியேறுவதும் கட்டுப்படும். ரத்தத்தில் உள்ள கொழுப்பினை குறைப்பதற்கும், அறிவைப் பெருக்கிடவும், ஞாபக சக்தியை உயர்த்திடவும் கருவேப்பிலை உதவி செய்கிறது. பச்சையாகக் கருவேப்பிலையை மென்று தின்றால் குரல் இனிமையாகும். நீண்ட நாள் சளிக்கட்டு குறையும் என்று கூறப்படுகிறது.

நமது ஹெல்த் நிருபர்


© 2016 Jannal
All Rights Reserved.


Back to Top