டி.வி நடிகர், நடிகைகளுக்காக தென்னிந்திய சின்னத்திரை நடிகர் சங்கம் 2003-ம் ஆண்டிலிருந்து செயல்பட்டு வருகிறது. இதில் 1,340 பேர் உறுப்பினர்களாக அங்கம் வகிக்கின்றனர். தலைவர், துணைத்தலைவர், பொதுச்செயலாளர், பொருளாளர், செயற்குழு உறுப்பினர்கள் என மொத்தம் 23 பதவிகள் இருக்கின்றன. இதற்கு மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை தேர்தல் நடத்தப்பட்டு நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்படுவது வழக்கம். கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் நடந்து முடிந்த தேர்தலில் தலைவராக நளினி, பொதுச்செயலாளராக பூவிலங்கு மோகன், பொருளாளராக வி.டி.தினகர் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இவர்களது பதவிக்காலம் 2017-ம் ஆண்டு வரை இருக்கிறது. இருப்பினும் சங்க நிர்வாகிகளுக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் பொருளாளர் வி.டி.தினகர், துணைத் தலைவர் ராஜ்காந்த், இணை செயலாளர்கள் பாபூஸ், கன்யா பாரதி மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் 16 பேர் திடீரென தங்கள் பதவியை ராஜினாமா செய்தனர்.

இதையடுத்து தலைவர் பதவியில் இருந்து நளினியும் விலகினார். இந்தநிலையில் புதிய நிர்வாகிகளை தேர்ந்தெடுக்க சின்னத்திரை நடிகர் சங்கத் தேர்தலை டிசம்பர் மாதம் 25-ந்தேதி (நேற்று) நடத்துவது என்று முடிவு எடுக்கப்பட்டது. அதன்படி சென்னை விருகம்பாக்கம் மார்க்கெட் ரோட்டில் உள்ள ஏ.கே.ஆர் மஹாலில் நேற்று தேர்தல் நடந்தது. இதில் மும்முனை போட்டி நிலவியது. தலைவர் பதவிக்கு சிவன் ஸ்ரீநிவாஸ், பானு பிரகாஷ், ரவி வர்மா ஆகியோர் போட்டியிட்டனர். மேலும் பானு பிரகாஷ் தலைமையிலான அணியில் பொது செயலாளர் பதவிக்கு பாபூஸ், பொருளாளர் பதவிக்கு விஜய் ஆனந்த், துணைத்தலைவர்கள் பதவிக்கு மனோபாலா மற்றும் ஓ.ஏ.கே.சுந்தர், இணை செயலாளர்கள் பதவிக்கு டெல்லி கணேஷ், ராஜசேகர், சதீஷ் மற்றும் சங்கீத் பாலன் ஆகியோர் போட்டியிட்டனர்.

ரவி வர்மா அணியில் கனக பிரியா பொது செயலாளர் பதவிக்கும், ஜெயந்த் பொருளாளர் பதவிக்கும், வின்சென்ட் ராய் மற்றும் லட்சுமி பிரசன்னா துணைத் தலைவர்கள் பதவிக்கும், ஜெயந்த் மாதவ், லட்சுமி பிரியா, மணிகண்டன், ரமா ஆகியோர் இணை செயலாளர்கள் பதவிகளுக்கும் போட்டியிட்டனர். சிவன் ஸ்ரீநிவாஸ் அணியில் போஸ் வெங்கட் (பொது செயலாளர்), பரத் கல்யாண் (பொருளாளர்), கமலேஷ் மற்றும் சோனியா (துணைத்தலைவர்கள்), பரத், காவியா, எம்.டி.மோகன், ஸ்ரீகஜேஷ் (இணை செயலாளர்கள்) ஆகியோரும் போட்டியிட்டனர். மூன்று அணிகளிலும் செயற்குழு உறுப்பினர்கள் பதவிக்கு தலா 14 பேர் போட்டியிட்டனர்.

காலை 8 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. ஆரம்பம் முதலே வாக்குப்பதிவு மந்தமாக நடைபெற்றது. தொலைக்காட்சி நடிகர்-நடிகைகள் திரளாக வந்து வாக்களித்தார்கள். தேர்தல் நடைபெற்ற திருமண மண்டபத்தை சுற்றி போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. வாக்களிக்க வந்த நடிகர்-நடிகைகளை காண ரசிகர்கள் கூட்டமாக குவிந்தனர். அவர்களை போலீசார் அப்புறப்படுத்தினர். மாலை 5 மணி வரை நடைபெற்ற வாக்குப்பதிவு, அசம்பாவிதங்கள் எதுவுமின்றி அமைதியாக முடிவடைந்தது.

ஓட்டு விவரம் :

மொத்த ஓட்டுகள் - 1340
தபால் ஓட்டுகள் - 14
நேரில் பதிவான ஓட்டுகள் - 691
பதிவான மொத்த ஓட்டுகள் - 705

ஓட்டுப்பதிவு முடிவடைந்ததும் தேர்தல் அதிகாரி லியாகத் அலிகான் முன்னிலையில் மாலை 6 மணிக்கு ஓட்டு எண்ணிக்கை தொடங்கியது. முதலில் தபால் ஓட்டுகளும், அதைத்தொடர்ந்து தேர்தலில் பதிவான ஓட்டுகளும் எண்ணப்பட்டன. இதில் சங்க தலைவராக சிவன் ஸ்ரீநிவாஸ் 280 ஓட்டுகள் பெற்று வெற்றி பெற்றார். ரவிவர்மா 207 ஓட்டுகளும், பானு பிரகாஷ் 202 ஓட்டுகளும் பெற்றனர். இதன்மூலம் சிவன் ஸ்ரீநிவாஸ் அடுத்த வேட்பாளரைவிட 73 ஓட்டுகள் கூடுதல் பெற்று வெற்றி பெற்றார்.மேலும் சில செய்திகள்

இப்போது விற்பனையில்

மாதமிருமுறை 15-ஆகஸ்ட்-2017

மேலும்

பிற இதழ்கள்© 2016 Jannal
All Rights Reserved.


Back to Top