சிறு திருட்டுகளில் ஈடுபடும் சூர்யாவுக்கு, விபத்து மூலமாக இறந்தவர்களின் ஆவியைப் பார்க்கும், அவற்றுடன் பேசும் சக்தி கிடைக்கிறது. தங்களின் ஆசையை நிறைவேற்றிக் கொள்வதற்காக சூர்யாவை சில ஆவிகள் துரத்த, அவற்றை வைத்துப் பணம் சம்பாதிக்கத் தொடங்குகிறார் சூர்யா. ஒருகட்டத்தில் சூர்யாவைப் போலவே இருக்கும் ஒரு ஆவி, நிறைய பணம் இருப்பதாக ஆசை காட்டி, எதிர்பாராத விதமாக சூர்யாவை ஒரு கொலைசெய்ய வைத்து விடுகிறது.

இதனால், அந்த ஆவியை வெறுக்கும் சூர்யா, தன் கண் முன்னால் அந்த ஆவி வரவே கூடாது என்று எச்சரிக்கிறார். இதனால் வில்லன்களிடம் சூர்யாவை மாட்டிவிடுகிறது சூர்யா ஆவி. அங்கு நடக்கும் சண்டையில், சூர்யாவால் மறுபடியும் இன்னொருவர் கொல்லப்படுகிறார். இதனால் சூர்யா இன்னும் எரிச்சலாக, அந்த ஆவி சூர்யாவின் அப்பா என்பது தெரிய வருகிறது. வில்லன்களால் தன் குடும்பம் கொல்லப்பட்டதை அறிந்துகொண்ட சூர்யா, அவர்களைப் பழிவாங்கத் துடிக்கிறார். அவர் பழிவாங்கினாரா என்பது படத்தின் மிச்ச சொச்சம்.

எல்லா படத்திலுமே தன் கேரக்டருக்காக மெனக்கெடும் சூர்யா, இந்தப் படத்திலும் அதே கடின உழைப்பைக் கொடுத்திருக்கிறார். ஆனால், கதை சரியில்லாத படத்தில், அவருடைய உழைப்பு ‘விழலுக்கு இறைத்த நீர் போல’ வீணாகியிருக்கிறது. கதாநாயகிகளான நயன்தாரா, பிரணிதா இருவரும் வந்து போகிறார்கள். தன் தம்பியான பிரேம்ஜியை எல்லா படத்திலும் தூக்கிப் பிடிக்கும் வெங்கட் பிரபு, இந்தப் படத்தில் அளவுக்கு அதிகமாகவே தூக்கிப் பிடித்திருக்கிறார். ஆனால், சூர்யாவின் நண்பனாக அவரைப் படம் முழுவதும் பார்க்கும் பொறுமை பார்வையாளனுக்கு இல்லை. சில காட்சிகளே வந்தாலும், ‘நான் கடவுள்’ ராஜேந்திரனைப் பார்த்ததும் தியேட்டர் குலுங்கிச் சிரிக்கிறது.

தன்னுடைய எந்தப் படத்திலுமே கதையை வைத்திருக்காத வெங்கட் பிரபு, இந்தப் படத்தில் கொஞ்சம் கதை இருப்பதாகச் சொன்னார். படம் ஆரம்பிக்கும்போது ராஜூ முருகனில் தொடங்கி கிட்டத்தட்ட 10 இயக்குநர்களுக்கு நன்றி சொல்லும்போதுதான், கதையை அவர்கள் உருவாக்கிக் கொடுத்திருக்கிறார்கள் என்பது புரிந்தது. ஆனால், அதைத் திரைக்கதையாக்கிய விதத்தில் பயங்கரமாக சொதப்பியிருக்கிறார். இதுதான் எனக் குறிப்பிட்டுச் சொல்ல முடியாதபடி படம் முழுவதும் எக்கச்சக்கமான லாஜிக் சொதப்பல்கள்.

தொடர்ச்சியாக வரும் பேய்ப் படங்களுக்கு மத்தியில், புதுசாக ட்ரை பண்ணுகிறேன் பேர்வழி என்று காமெடி செய்திருக்கிறார்கள். இரண்டு மணி நேர படத்தை, அரை நாள் முழுவதும் பார்த்த உணர்வு ஏற்படுவதைத் தவிர்க்க முடிவதில்லை. யுவன் ஷங்கர் ராஜாவின் இசையில், ‘பூ... பூ... பூச்சாண்டி’ பாடல் மட்டும் ஓகே ரகம், பின்னணி இசையும் அப்படித்தான். ஆர்.டி.ராஜசேகரின் கேமரா, கலர் புல்லாக படம் பிடித்திருக்கிறது. இந்தப் படத்துக்கு ‘வெங்கட்பிரபு சிக்ஸர்’ எனக் குறிப்பிட்டுள்ளார்கள். ஆனால், அவர் டக் அவுட் ஆனதாக படம் பார்த்தவர்கள் சொல்கிறார்கள்.

விமர்சனக் குழு
இப்போது விற்பனையில்

மாதமிருமுறை 15-ஜூன்-2017

மேலும்

பிற இதழ்கள்© 2016 Jannal
All Rights Reserved.


Back to Top