மூன்று மாதத்துக்குள் சந்தானத்துக்குத் திருமணம் செய்துவிட வேண்டும்; இல்லையென்றால், அடுத்த நான்கு ஆண்டுகளுக்கு அவருக்கு கல்யாண யோகமே இல்லை என்று ஜோசியர் சொல்கிறார். இதனால், அவசரம் அவசரமாக சந்தானத்துக்குப் பெண் பார்க்கிறார்கள். ஆனால், எந்தப் பெண்ணையுமே அவருக்குப் பிடிக்கவில்லை. 'அரேஞ்ச்டு மேரேஜ் என்றால், வரதட்சணைக்காக அழகில்லாத பெண்ணைக் கட்டிவைத்து விடுவார்கள். எனவே, லவ் மேரேஜ் தான் பெஸ்ட்' என்கிறார் சந்தானத்தின் நண்பரான விடிவி கணேஷ். இந்தநிலையில், ஷாப்பிங் மாலில் நண்பர்களுடன் நின்று கொண்டிருக்கும் சந்தானத்தை, தவறுதலாக அடித்துவிடுகிறார் ஆஸ்னா ஸவேரி. அவரைப் பார்த்ததுமே காதல்வயப்பட்டு விடுகிறார் சந்தானம். ஆஸ்னாவை அவர் துரத்தி துரத்தி காதலிக்க... அவரோ, சந்தானத்தைப் பிடிக்கவில்லை என்று கூறிவிடுகிறார்.

சந்தானத்தின் தாய்மாமனான தம்பி ராமையா, சந்தானத்திடம் சாமர்த்தியமாகப் பேசி அகிலா கிஷோரைப் பெண் பார்க்க அழைத்துச் சென்றுவிடுகிறார். அகிலா கிஷோருக்கும், அவர் குடும்பத்தினருக்கும் சந்தானத்தைப் பிடித்துவிடுகிறது. ஆனால், சந்தானமோ ஆஸ்னாவின் நினைப்பிலேயே இருக்கிறார். அவரைச் சமாதானப்படுத்தி, அகிலா கிஷோருடன் நிச்சயதார்த்தம் செய்துவிடுகிறார் தம்பி ராமையா. அதற்குப் பிறகுதான், ஆஸ்னாவும் தன்னைக் காதலிப்பது சந்தானத்துக்குத் தெரிய வருகிறது. அதை மறைத்துவிட்ட தம்பி ராமையா மீது கோபப்படும் சந்தானம், கல்யாணத்தை எப்படியாவது நிறுத்தும்படி சொல்கிறார். ஆனால், அவர்கள் போடும் திட்டம் எல்லாமே பணால் ஆகிவிடுகிறது. ஆஸ்னாவுக்கும் அகிலா கிஷோருக்கும் உண்மை தெரிந்துவிடுகிறது. அதன்பிறகு சந்தானம் யாருக்கு தாலி கட்டினார்? என்பது வித்தியாசமான கிளைமாக்ஸ்.

ஹீரோவாக சந்தானம் தூள் கிளப்பியிருக்கிறார். காமெடியன் ஹீரோவானால், காமெடி மட்டுமே செய்யாமல் ஆக்‌ஷன், செண்டிமெண்ட்டும் இருக்க வேண்டும் என்பதில் கவனமாக இருந்திருக்கிறார். அதேசமயம், எந்த அளவுக்கு ஆக்‌ஷன், செண்டிமெண்ட் இருந்தால் எடுபடும் என்பதிலும் கவனமாக இருந்து, எல்லை மீறாமல் ரசிக்க வைத்திருக்கிறார். உடல் எடையைக் குறைத்ததோடு, நடனத்திலும் பின்னி எடுத்திருக்கிறார். பாடல் காட்சியில் வரும் கலர் பூசிய மண்டை மட்டும் நன்றாக இல்லை. 'இனிமே இப்படித்தான்' என்று எதற்கு பெயர் வைத்தார்களோ தெரியவில்லை. ஆனால், இப்படி நடித்தால் இனிமேல் ஹீரோவாகவே சந்தானம் நடிக்கலாம்.

'ஒன்னு தா' என்று கொஞ்சுவதும், 'காலையில ஒன்பது மணிக்கு ரெஜிஸ்டர் ஆபிஸ்க்கு வா' என்று மிரட்டுவதுமாக அசத்துகிறார் ஆஸ்னா ஸவேரி. அகிலா கிஷோருக்கு அதிக வேலையில்லை என்றாலும், தன்னுடைய பாத்திரத்தை அழகாகச் செய்திருக்கிறார். தம்பி ராமையா, விடிவி கணேஷ், கூல் சுரேஷ் என்று சந்தானத்தின் டீம் அனைவரும் வயிறு குலுங்கச் சிரிக்க வைக்கிறார்கள். ஒரு பன்ச்சுக்கு சிரித்து முடிப்பதற்குள், அடுத்தடுத்து பன்ச் பேசி சிரிக்க வைத்துக்கொண்டே இருக்கிறார்கள். சந்தோஷ் தயாநிதி இசையில் 'பார்த்த ஒரு லுக்குல', 'அத்தனை அழகையும் ஒன்னாக்கி' பாடல்கள் தாளம்போட வைக்கின்றன. கோபி ஜெகதீஸ்வரனின் ஒளிப்பதிவு படத்துக்கு அழகு சேர்த்திருக்கிறது. யாரிடமும் உதவி இயக்குநர்களாகப் பணியாற்றாமல், முதல் படத்திலேயே கடின உழைப்பால் கவனம் ஈர்த்திருக்கிறார்கள் இயக்குநர்கள் முருகன் - ஆனந்த்.
இப்போது விற்பனையில்

மாதமிருமுறை 15-ஆகஸ்ட்-2017

மேலும்

பிற இதழ்கள்© 2016 Jannal
All Rights Reserved.


Back to Top