ஜிம் டிரெய்னராக ஜெயம் ரவியும், ஏர் ஹோஸ்டஸாக ஹன்சிகாவும் வேலை பார்க்கின்றனர். ஜெயம் ரவி அடிக்கடி விமானத்தில் பறப்பதையும், ஆடம்பரமான கார்களில் சுற்றுவதையும் பார்க்கும் ஹன்சிகா, அவர் ஜிம் டிரெய்னர் எனத் தெரியாமல், மிகப்பெரிய பணக்காரன் என்று நினைத்து காதலிக்கிறார். ஜெயம் ரவியும் ஹன்சிகாவைக் காதலிக்க... இருவரும் லவ்வோ லவ் என்று லவ்வுகிறார்கள். ஒருகட்டத்தில் ஜெயம் ரவி ஜிம் டிரெய்னர் என்பது தெரியவர, பணக்கார வாழ்க்கையை விரும்பும் ஹன்சிகா, அவரை விட்டு விலகுகிறார். ஆனால், அதை ஏற்றுக்கொள்ள முடியாத ஜெயம் ரவி, ஹன்சிகாவிடம் காதலிக்குமாறு கெஞ்சுகிறார். அவருடைய டார்ச்சர் தாங்காத ஹன்சிகா, 'ஒருநாள் முழுவதும் என்னை சந்தோஷமா வச்சுக்குறியானு பார்க்கலாம்' என்று சவால் விடுகிறார். ஜெயம் ரவியும் சவாலை ஏற்று அவரை வெளியில் கூட்டிச் செல்ல, அவருக்கு எக்கச்சக்க செலவு வைத்து, வார்த்தைகளாலும் வறுத்து எடுக்கிறார் ஹன்சிகா. கடைசியில், 'நம்ம ரெண்டு பேருக்கும் ஒத்துவராது' என்று சொல்லிவிட்டு ஹன்சிகா சென்றுவிடுகிறார். 

சில மாதங்கள் கழித்து பரம்பரைப் பணக்காரரான வம்சி கிருஷ்ணாவுக்கும் ஹன்சிகாவுக்கும் நிச்சயதார்த்தம் ஆகிறது. 'உன்னை மாதிரியே அழகான பெண்ணை எனக்கு செட் பண்ணிக் கொடுத்துட்டு, நீ யாரை வேணும்னாலும் கல்யாணம் பண்ணிக்கோ. இல்லேன்னா, நாம ஒன்னா இருக்குற போட்டோவை காமிச்சு கல்யாணத்தை நிறுத்திடுவேன்' என்று ஹன்சிகாவை மிரட்டுகிறார் ஜெயம் ரவி. ஹன்சிகாவும் தன்னை மாதிரியே பெண் தேட, கடைசியில் பூனம் பஜ்வா செட்டாகிறார். அதேசமயம், வம்சி கிருஷ்ணா வீட்டில் போடப்படும் ரூல்ல்ஸ்களால் ஹன்சிகா கடுப்பாகிறார். அவரால் சுதந்திரமாக இருக்க முடியவில்லை. அவர் என்ன முடிவெடுத்தார்? ஜெயம் ரவி - ஹன்சிகா ஒன்று சேர்ந்தார்களா? என்பது கிளைமாக்ஸ்.

பாடி பில்டராக ஜெயம் ரவி பாத்திரத்துக்குப் பொருந்திப் போகிறார். ஆனால், சில காட்சிகளில் கட்டுமஸ்தான் உடலையும் தாண்டி தொப்பை எட்டிப் பார்க்கிறது. காதலுக்காக ஹன்சிகாவிடம் கெஞ்சும் இடத்தில் அருமையாக ஜொலிக்கிறார். ஹன்சிகாவை இந்தப் படத்தில் எக்கச்சக்கமாகப் பேச வைத்திருக்கிறார்கள். க்ளோசப்பில் அவர் வாய் எதையோ உச்சரிக்க, நம் காதில் வேறேதோ வசனங்கள் வந்து விழும்போது எரிச்சலாக இருக்கிறது. இத்தனைப் படங்களில் நடித்தும், இன்னும் தன்னுடைய ஓவர் ஆக்டிங் நடிப்பை அவர் விடவேயில்லை. விடிவி கணேஷ், பூனம் பஜ்வா இருவரும் ஓகே. வம்சி கிருஷ்ணாவை இன்னும் நன்றாகப் பயன்படுத்தியிருக்கலாம்.

'டண்டணக்கா' பாடலைத் தவிர, டி.இமானா என்று கேட்கும் அளவுக்கு பாடல்கள் எதுவும் சிறப்பாக இல்லை. செளந்தர்ராஜனின் ஒளிப்பதிவு ரசிக்க வைக்கிறது. ஆதிகாலத்துக் கதையை பட்டி, டிங்கிரி பார்த்து படமாகக் கொடுத்திருக்கிறார் இயக்குநர் லட்சுமணன். தன்னுடைய குருநாதரான எஸ்.ஜே.சூர்யாவை சில இடங்களில் நினைவுபடுத்துபவர், அவரிடம் இன்னும் நிறைய பாடம் கற்க வேண்டும். அந்த அளவுக்கு கொலயா கொல்றார். 'ரோமியோ ஜூலியட்'னு காவியப்பேரை தலைப்பா வச்சுட்டு... இப்படிப் பண்றீங்களேம்மா?
இப்போது விற்பனையில்

மாதமிருமுறை 15-ஆகஸ்ட்-2017

மேலும்

பிற இதழ்கள்© 2016 Jannal
All Rights Reserved.


Back to Top