1960களில் நடக்கிற கதை. சிகரெட்டுக்கு தமிழக அரசு தடை விதித்திருக்க, அதையே கடத்தல் தொழிலாக்கி காசு பார்க்கிறார் வில்லன். போலீஸ் எவ்வளவோ முயன்றும், கடத்தல்காரர்களைப் பிடிக்க முடியவில்லை. காரணம், போலீஸிலேயே ஒரு கறுப்பு ஆடு எல்லா விவரங்களையும் வில்லனுக்குத் தெரிவித்து விடுகிறது. எனவே, உளவாளி ஒருவரை கடத்தல் கும்பலுக்குள் அனுப்பிவைத்து, விவரங்களைச் சேகரிக்கலாம் என முடிவெடுக்கிறார் போலீஸ் உயரதிகாரி.

வடிவேலும் அவருடைய கூட்டாளிகளும் சின்னச் சின்ன திருட்டுகளில் ஈடுபட்டு வருகிறார்கள். ஓய்வுபெற்ற போலீஸ் உயரதிகாரி வீட்டிலேயே திருடிய வடிவேலின் சாமர்த்தியத்தைப் பார்த்து, அவரையே கடத்தல் கும்பலிடம் உளவாளியாக அனுப்பி வைக்கலாம் என முடிவெடுக்கிறார் போலீஸ் உயரதிகாரி. உளவாளியாகச் சென்றால், போலீஸில் வேலை தருவதாகவும் கூறுகிறார்.

போலீஸ் வேலைக்கு ஆசைப்பட்ட வடிவேலு, கடத்தல் கும்பல் தலைவனின் வலது கையாகச் செயல்படும் மகாநதி சங்கரிடம் நண்பராகிறார். அவர் மூலமாக கடத்தல் கும்பலில் சேரும் வடிவேலு, அங்குள்ள தகவல்களை போலீஸ் உயரதிகாரிக்கு அனுப்புகிறார். ஒருகட்டத்தில், வடிவேலு உளவாளி என்பது கடத்தல் கும்பலுக்குத் தெரிந்துவிடுகிறது. அவர்களிடம் இருந்து வடிவேலு எப்படி தப்பித்தார்? கடத்தல் கும்பலைக் காவல்துறை கைது செய்ததா? என்பது கிளைமாக்ஸ்.

காமெடியனாக மக்கள் மனதில் உயர்ந்த இடத்தில் சிம்மாசனம் போட்டு அமர்ந்திருந்த வடிவேலு, நாயகனாக நடித்து ஒவ்வொரு படியாக கீழே இறங்கிக் கொண்டிருக்கிறார். அவருடைய கெட்டப்பும், முகபாவனைகளும் பார்க்கச் சகிக்கவில்லை. எலி மாதிரி பண்ணுகிறேன் என்று, என்னென்னமோ பண்ணுகிறார். நமக்குத்தான் சிரிப்பு வருவேனா என்கிறது. படம் தொடங்குவதற்கு முன் போடப்படும் ’ஹெல்த் அட்வைஸரி’யில் ’ஜுமோக்கிங் காஜ்ஜஸ் கேன்சர்...’ என்று வடிவேலு குரல் ஒலிக்கும்போது மட்டும் திரையரங்கில் சிரிப்பொலி கேட்கிறது. அதன்பின் மயான அமைதி. ஒருவேளை எல்லோரும் உன்னிப்பாகப் படம் பார்க்கிறார்களோ என்று நினைத்தால், முக்கால்வாசி பேர் தூங்கிக் கொண்டிருக்கிறார்கள் என்பது இடைவேளையில்தான் தெரிந்தது. 

1960களில் கதை நடப்பதாக நாமே அடிக்கடி நினைத்துக் கொண்டால்தான் உண்டு. ஓரிரு காட்சிகளில் மட்டுமே அந்த காலகட்டத்தைக் காட்ட முயற்சி செய்திருக்கிறார்கள். வசனங்கள் அனைத்துமே நிகழ்காலத்தில் பேசுவதாக இருக்கின்றன. வடிவேலுக்கு சதா ஜோடியா என்று பரிதாபப்பட்டால், படத்திலும் அவரை ஊறுகாய் போலப் பயன்படுத்தியிருக்கிறார்கள். பாடல்களும், பின்னணி இசையும் காதைப் பொத்திக் கொள்ளலாம் ரகம். ஒளிப்பதிவு பரவாயில்லை. ஆக மொத்தத்தில், எலியைப் பார்த்தவர்களுக்கு பயங்கர தலைவலி. 
இப்போது விற்பனையில்

மாதமிருமுறை 15-ஆகஸ்ட்-2017

மேலும்

பிற இதழ்கள்© 2016 Jannal
All Rights Reserved.


Back to Top