அக்னி நட்சத்திரம் வருவதற்கு முன்பே அனல் கக்கும் வெயிலால் பெரும்பாலான மக்கள் தற்போது நேரடியாகவும், மறைமுகமாகவும் பெரிதும் பாதிப்புக்குள்ளாகி வருகின்றனர். இப்போதே தமிழகமெங்கும் சுமார் 102 முதல் 108 பாரன் ஹீட் உஷ்ணம் உணரப்படுவதால், உடல் சோர்வு, தளர்ச்சி, மயக்கம், உடல் உஷ்ணம், தாது உப்பு சமநிலையின்மை, உணவு செரிமானம் ஆவதில் பிரச்சினை, மயக்க நிலை போன்ற நேரடி தாக்கங்கள் காரணமாக, இறப்பு வரை செல்லும் நிலை ஏற்படுகிறது. அதே போன்று குடிநீர் மாசுபடுவதால், நீர் ஆதாரம் மூலமாகவும், பூச்சிகள் மூலமாகவும், பரவும் நோய்கள் போன்றவை ஏற்படக் கூடிய வாய்ப்பும், கோடை காலங்களில் சின்னம்மை, தட்டம்மை, வயிற்றுப்போக்கு போன்ற நோய்களும் ஏற்பட செய்கிறது. இந்நோய் தாக்கங்கள், பொதுவாக வயது முதிந்தோர், கர்ப்பிணி பெண்கள், நோய் எதிர்ப்பு சக்தி குறைந்தோர், ரத்த அழுத்தம், சர்க்கரை நோய் மற்றும் புற்று நோய் உள்ள நோயாளிகளை அதிக அளவில் தாக்கக்கூடும்.

இந்த வெயிலின் நோய் தாக்கம் அதிக உடல் உஷ்ணம், தோல் சிவப்பாதல், நாடித்துடிப்பு குறைவு, வாந்தி, சோர்வு மற்றும் மயக்க நிலை போன்ற அறிகுறிகள் மூலம் தெரியவரும். எனவே, இதுபோன்ற நோய் பாதிப்பு ஏற்பட்டோருக்கு, உடனடியாக நல்ல காற்றோட்ட வசதி ஏற்படுத்துதல், குளிர்காற்று பரவ செய்தல், திரவ நிலை ஆகாரம் அளித்தல் போன்ற முதலுதவி செய்யப்பட்டு, அருகில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சைகள் அளித்துக் கொள்ள வேண்டும்.

இதனிடையே கோடை வந்து விட்டால் உடனே கையில் கூல் ட்ரிங்ஸ் வைத்துக் கொள்ள வேண்டும் என்று பலரும் நினைக் கிறார்கள். சில்லென்றும் இனிப்பாகவும் இருப்பதனாலேயே அவை கோடைக்கு ஏற்ற அருமருந்தாகிவிடாது. ஆனால் ஒரு விஷயம் தெரியுமா? ஜஸ்ட் நாலைந்து ரூபாய் செலவில் நம் நாட்டில் ஒரு குடும்பமே காலம் காலமாக கோடையை சமாளித்திருக்கிறார்கள்

ஆம்.. இந்த வெயிலினால் ஏற்படும் உடல் உஷ்ணத்தையும், களைப்பையும் முன்னோர்கள் தயாரித்து அருந்திய பானகத்தை நீங்களும் பருகி பயன் அடையுங்கள். பானகம் என்பது இனிப்பு, புளிப்பு, லேசான காரம் என மூன்று சுவைகளும் ஒன்றாகக் கலந்த ஒரு பானம். அதாவது வெல்லம், புளி, ஏலக்காய், சுக்கு, மிளகு சேர்த்து தயாரிக்கப்படும் நீர் ஆகாரம். இதுதான் உடலின் களைப்பை நீக்கி குளிர்ச்சியும், புத்துணர்ச்சியும் தரக்கூடிய பானம். இது அடுப்பில் வைத்து காய்ச்சாமல் அப்படியே கலக்கி பருகக்கூடிய பானவகையைச் சேர்ந்தது.(Raw and Uncooked).

நம்மூர் தேர்த் திருவிழா அன்று ஆயிரக்கணக்கான பக்தர்கள் ஒன்று கூடி தேரை வடம் பிடித்து இழுத்து வருவார்கள். வேர்க்க, விறுவிறுக்க தேர் இழுத்துவரும் பக்தர்களுக்காக இந்த பானாக்கம் எனப்படும் எனெர்ஜி ட்ரிங்கை வீட்டிற்கு வீடு தயாரித்துக் கொடுப்பார்கள். தாகமும், களைப்பும் தீரும் அளவுக்கு வயிறு நிறைய வாங்கி, வாங்கி பருகுவார்கள். இனிப்பும், புளிப்பும் கலந்த இந்த பானாக்கம் உள்ளே சென்றதும் உடலின் மொத்த களைப்பும் நீங்கி புதுத்தெம்புடன் தேரை இழுத்து கோவிலுக்கு கொண்டு சேர்ப்பார்கள்.

இப்படி பலம் கொடுக்கும் பானகத்தை நீங்கள் இதுவரை குடித்திராத நபராக இருந்தால் ஒரு தடவை தயாரித்து டேஸ்ட் பண்ணிப் பாருங்கள். கண்டிப்பாக உங்களுக்கும் பிடித்துவிடும்.

முச்சுவையான இனிப்பும், புளிப்பும்,காரமும் கலந்த இந்த பானத்தின் சுவை களை மீண்டும் மீண்டும் பருகத் தூண்டும்.

இதற்கு தேவையான பொருட்கள்:

புளி – சிறிய எலுமிச்சை அளவிலான உருண்டை
வெல்லம் – 2 டேபிள் ஸ்பூன்
ஏலக்காய் பொடி – 1/4 டீ ஸ்பூன்
சுக்குப்பொடி – 1/4 டீ ஸ்பூன்
மிளகுத்தூள் – 1/4 டீ ஸ்பூன்
தண்ணீர் – 2 கப்

செய்முறை:

வெல்லத்தை தட்டி பொடியாக்கிக் கொள்ளவும். புளி அல்லது எலுமிச்சை சாறை 2 கப் தண்ணீரில் நன்கு கரைக்கவும். கரைத்த புளி (அ) எலுமிச்சை நீரில் வெல்லத்தை சேர்க்கவும். வெல்லம் முழுவதுமாக கரையும்படி ஸ்பூன் கொண்டு கலக்கி விடவும். வெல்லம் முழுமையாக கரைந்த பின் வடி கட்டியால் இறுக்கவும். இதனுடன் ஏலக்காய் பொடி, சுக்குப் பொடி, மிளகுத் தூள் சேர்த்து கலக்கவும். இதை அப்படியே அல்லது சிறிது நேரம் மண் பானையில் வைத்திருந்து பருகவும். மிளகு மற்றும் சுக்கு தொண்டை பிடிப்பை குணமாக்கும் நல்ல மருந்து. சளியையும் குணப்படுத்தும். கோடையில் வெயிலினால் ஏற்படும் உடல் உஷ்ணத்தையும், களைப்பையும் பானாக்கம் பருகி பாதுகாப்பாக இருங்கள்
இப்போது விற்பனையில்

மாதமிருமுறை 15-ஆகஸ்ட்-2017

மேலும்

பிற இதழ்கள்© 2016 Jannal
All Rights Reserved.


Back to Top