மனிதன் தோன்றிய காலத்தில் இருந்தே வெற்றிலையானது பயன்பாட்டில் இருந்து வருகிறது. பல ஆயிரம் ஆண்டுகளாக பயன்படுத்தப்படும் தாவரங்களில் வெற்றிலையும் ஒன்றாகும். வெற்றிலை மலேசியாவில் தோன்றியதாகக் கூறப்படுகிறது. இக்கொடி இந்தியா, இந்தோனேசியா ஆகிய நாடுகளில் மிகுதியாகக் காணப்படுகிறது. பயிரிடப்படும் கொடிதான்; இது தானாக எங்கும் விளைவதில்லை; வெற்றிலை வளரும் இடத்தைக் கொடிக்கால் என்று கூறுவர் . பெரும்பாலும் தமிழ் நாட்டில் அது அகத்திச் செடிகளின் மேல் படர விட்டு வளர்க்கப்படுகிறது .இது செடியைச் சுற்றிப் படர்வதால் நாகவல்லி என்றும் பெயர் பெற்றுள்ளது. தென்னந்தோப்புகளில் இதை ஊடுபயிராகவும் விளைவிப்பதுண்டு.

வெற்றிலை வெறும் இல்லை மட்டுமன்று; மூலிகை மட்டுமன்று. .அது மிகுந்த சமூக மதிப்பு வாய்ந்தது. தமிழர் வாழ்வுடன் பின்னிப் பிணைந்தது அந்தக்காலத்தில் மன்னர்கள் தொடர்ந்து வெற்றிலையைத் தாம்பூலமாகப் பயன்படுத்தினர். எந்த ஒரு செயலுக்கும் அச்சாரம் போடுவதற்கு வெற்றிலை பாக்குக் கொடுத்து விட்டால் போதும்; அதுவே ஒப்பந்தம் ஆன மாதிரிதான். இன்றும் கூட திருமண நிச்சயத்தை வெற்றிலை பாக்கு (தாம்பூலம்) மாற்றிக்கொள்வது என்றுதானே கூறுகிறோம் . நமது சமூக வாழ்வில் அத்தனை மதிப்பு வெற்றிலைக்கு உண்டு .

தமிழர்களிடையே எந்த முக்கியமான வைபவமாக இருந்தாலும் வெற்றிலைக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. வெற்றிலை இல்லாமல் எந்த சுப காரியமும் தமிழர் வாழ்வில் இல்லை; வெற்றிலை இல்லாத கடவுள் வழிபாடும் தமிழர் வாழ்வில் இல்லை . ஏன் என்றே தெரியாமல் தொடர்ந்து வழக்கமாக நாம் வெற்றிலையை நமது வாழ்வின் அத்தனை செயல்களிலும் உபயோகித்து வருகிறோம்.

100 கிராம் வெற்றிலையில் இருக்கும் சத்துக்கள்

ஈரப்பசை – 85.4%, புரதம் – 3.1%, கொழுப்பு – 0.8%, தாதுப்பொருட்கள் – 2.3%, மாவுச்சத்து – 6.1%, நார்ச்சத்து – 2.3% .தவிர வெற்றிலையில் கால்சியம், காரோடின், தியாமின், ரிபோஃப்ளேவின், நியாசின் மற்றும் வைட்டமின் ‘சி’ இவை உள்ளன. 100 கிராம் வெற்றிலையில் 44 கலோரிகள் உள்ளது. எனவே வெற்றிலையைப் பயன்படுத்தி பல நோய்களையும் குணப்படுத்தலாம்.

இதன் இலைகளும், வேர்களும் முழுமையான மருத்துவ பயன் உடையவை. இலைகளில் காணப்படும் எளிதில் ஆவியாகும் எண்ணெய் மூச்சுக்குழல் நோய்களுக்கு மருந்தாகிறது. இலையின் சாறு ஜீரணத்திற்கு உதவுகிறது. வேர்பகுதி பெண்களின் மலட்டுத்தன்மையை போக்குகிறது.

அரை டம்ளர் தேங்காய் எண்ணெயில் 5 வெற்றிலையை போட்டு கொதிக்க விடவும். இலை நன்கு சிவந்ததும் வடிகட்டி பாட்டிலில் அடைத்து வைத்துக் கொண்டு சொரி,சிரங்கு, படைக்கு தடவி வந்தால் நல்ல குணம் கிடைக்கும்.

வெற்றிலையைக் கசக்கிக் சாறு எடுத்து அந்த சாற்றில் சிறிதளவு கற்பூரத்தைச் சேர்த்துக் குழப்பி வலியுள்ள இடத்தில் தடவினால் தலை வலி உடனே குணமாகும்.

இரண்டு வெற்றிலையை எடுத்து அதில் ஒன்பது மிளகை மடித்து வாயில் போட்டு நன்றாக மென்று விழுங்கி தேங்காய் துண்டுகள் சிலவற்றினையும் மென்று தின்றால் தேள் விஷம் உடனே முறியும்.

சர்க்கரை வியாதி உள்ளவர்கள் இரண்டு வெற்றிலையுடன் வேப்பிலை ஒரு கைப் பிடியளவும் அருகம்புல் ஒரு கைப்பிடியளவும் ஒரு சட்டியில் போட்டு 500 மிலி தண்ணீர் விட்டு நன்றாக கொதிக்க விடவும். தண்ணீரின் அளவு 150 மிலி ஆக குறையும் வரை கொதிக்க விட்டு, பின்பு வடிகட்டி ஆற வைத்து வேளைக்கு 50 மிலி வீதம் மூன்று வேளை உணவுக்கு முன்பு சாப்பிடவும்.

அல்சர் உள்ளவர்கள் இரண்டு வெற்றிலையுடன் அத்தி இலை 1 கைப்பிடி வேப்பிலை 5 ஆகியவற்றை மேலே உள்ள முறைப்படி கசாயம் தயாரித்து மூன்று வேளை அருந்தி வரவும்.

முற்றின வெற்றிலையைச் சாறு பிழிந்து அதில் இரண்டு அவுன்ஸ் சாற்றுடன் 3 மிளகு அதே அளவு சுக்கு ஆகியவற்றை ஒரு தேக்கரண்டி தேனுடன் கொடுத்தால் இரைப்பு மூச்சுத் திணறல் குணமாகும்.






© 2016 Jannal
All Rights Reserved.


Back to Top