ஐ.டி. கம்பெனியில் வேலை செய்யும் சிம்புக்கு, ஆண்ட்ரியாவைப் பார்த்ததுமே காதல். அடுத்தடுத்த சந்திப்புகளில் ஆண்ட்ரியாவும் காதலிக்க, கல்யாணம் பண்ணிக்கொள்ள முடிவெடுக்கிறார்கள். ஆண்ட்ரியா வீட்டில் காதலிப்பதைச் சொல்லும்போது ஏற்றுக்கொள்வது போல் நடிக்கும் அப்பா, சிம்புவைத் தனியாகச் சந்தித்து கல்யாணத்தில் விருப்பமில்லை என்கிறார். வேறுவழியில்லாமல், ‘தன்னுடைய அப்பாவுக்கு இந்தக் கல்யாணத்தில் இஷ்டமில்லை’ என்று மாற்றிச் சொல்கிறார் சிம்பு. ஆனாலும், ஆண்ட்ரியாவை மறக்க முடியாமல் தாடி வளர்த்து தவிக்கிறார்.

பிறகு நண்பர்கள் வற்புறுத்தலால் வேலைக்குச் செல்கிறார். சில மாதங்களுக்குப் பிறகு, சிம்புவுக்குப் பெண் பார்க்க ஏற்பாடு செய்கிறார் அப்பா ஜெயப்பிரகாஷ். அவருடைய பேச்சைத் தட்ட முடியாமல் செல்லும் சிம்பு, அங்கு நயன்தாராவைப் பார்த்த விநாடியே காதலில் விழுகிறார். ஆனால், ஆண்ட்ரியாவின் நண்பியான நயனுக்கு, அவர்கள் காதலித்த விஷயம் ஏற்கெனவே தெரியும். அதை சிம்புவிடம் கேட்க, அவரும் ஒப்புக் கொள்கிறார். ஆனாலும், கல்யாணத்துக்கு பிடிகொடுக்காமல் போக்கு காட்டுகிறார்.

ஆண்ட்ரியாவைக் கழட்டி விட்ட காரணத்தை ஒருநாள் நயன் கேட்க, ஃப்ளாஷ்பேக்கைச் சொல்கிறார் சிம்பு. அதைக் கேட்டதும், நயனுக்கும் சிம்பு மீது காதல் பிறக்க, கல்யாணத்துக்கு ஓகே சொல்கிறார். ஆனால், இடைப்பட்ட காலத்தில் இருவருக்கும் வழக்கமான முட்டல், மோதல்கள் நடக்க... அவற்றைத் தாண்டி எப்படி கல்யாணம் நடக்கிறது என்பதுதான் கதை.

‘விண்ணைத் தாண்டி வருவாயா’ படத்துக்குப் பிறகு சொல்லிக் கொள்வது போல் சிம்புவுக்கு அருமையான படம் இது. அவருடைய பந்தா எதுவும் இல்லாமல், கதையின் போக்கில் செல்கிறார். சிம்புவின் நல்ல படங்கள் வரிசையில் ‘இது நம்ம ஆளு’க்கு நிச்சயம் இடம் உண்டு. என்ன ஒன்று, சிம்புவின் வாழ்க்கை வரலாற்றை அப்படியே எடுத்தது போல் இருக்கிறது.

அழகுச்சிலையாக நயன்தாரா. அவர் கொஞ்சிக் கொஞ்சி பேசுவதைப் பார்க்கும்போது, கல்லுக்கும் காதல் வரும். அப்படிப்பட்ட எக்ஸ்பிரஷன்ஸ். நயன்தாராவுக்காகவே நாலு தடவை இந்தப் படத்தைப் பார்க்கலாம். தங்கள் வாழ்க்கையும் இதில் இருக்கிறது என்றும் தெரிந்தும், முன்னாள் காதலரான சிம்புவுடன் சேர்ந்து நடித்த நயனின் தில்லுக்கு ஹேட்ஸ் ஆப்!

ஆண்ட்ரியாவும் அழகு தேவதையாகத்தான் தெரிகிறார். படத்தைத் தொய்வடையாமல் கொண்டுபோவது சூரியின் அலப்பறைகள்தான். ஒவ்வொரு கவுண்டருக்கும் கைதட்டிச் சிரிக்கிறார்கள். படத்தின் மிகப்பெரிய பலமும் பலவீனமும் வசனங்கள்தான். சில இடங்களில் ‘ஆஹா... ஓஹோ...’வெனப் பாராட்ட வைக்கும் வசனங்கள், சில இடங்களில் ‘என்னடா பேசிக்கிட்டே இருக்காங்க...’ எனக் கடுப்பேத்துகிறது. பாலசுப்ரமணியெத்தின் ஒளிப்பதிவு கொள்ளை அழகு. இன்றைய இளைஞர்களின் காதலை, சிம்புவின் வாழ்க்கையை முன்வைத்து யதார்த்தமாகப் பதிவு செய்திருக்கிறார் பாண்டிராஜ்.
இப்போது விற்பனையில்

மாதமிருமுறை 15-ஆகஸ்ட்-2017

மேலும்

பிற இதழ்கள்© 2016 Jannal
All Rights Reserved.


Back to Top