இன்றைய மக்கள் தொகையில் எதிர்பாராத மாற்றங்களை உலகம் சந்தித்துவருகிறது. அதிலும் 2050-ல் ஒட்டுமொத்த இளைஞர்களின் எண்ணிக்கையைவிடவும் 60 வயதுக்கு மேற்பட்ட முதியோரின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும் என்கிறது ஓர் ஆய்வு. தற்போதைய உலகமயமாக்கல் சூழலில் மேலை நாடுகளின் கலாசாரத் தாக்கத்தால் இயந்திர வாழ்க்கையில் சிக்குண்ட மனிதன் தன் பெற்றோருடனும், முதியோருடனும் பேசும் நேரத்தைக்கூட குறைத்துக் கொண்டே வருகிறான். பொருளாதார ரீதியிலான தன்னிறைவுக்கு அவன் தன்னை தயார்படுத்துவதிலேயே தன் ஆயுளை கழிக்கிறான்.

அதே சமயம் கடந்த காலங்களில் உலக அளவில் மாற்றத்தை ஏற்படுத்திய சிந்தனையாளர்கள் சரித்திரப் புகழ் சாதனையாளர்கள் அனைவரும் முதியோரின் வழிகாட்டுதலில், பராமரிப்பில் வளர்ந்தவர்களாகவே இருப்பார்கள். குறிப்பாக, பாட்டி கதை சொல்லுவதற்கு முன்பெல்லாம் ஒவ்வொரு வீட்டிலும் தாத்தா, பாட்டி இருப்பார்கள். அவர்களின், வாழ்க்கை அனுபவத்தை கதைகளாகத் தன் பேரன், பேத்திகளுக்கு சொல்லுவார்கள். சிறுவயது முதலே இதுபோன்று கதைகளைக் கேட்டு வளரும் குழந்தைக்கு சிந்திக்கும் திறனும், ஆக்க திறனும் கூடும். வரலாற்றில் பார்த்தோமேயானால் ஒவ்வொரு சாதனையாளரின் ஆணி வேரில் அவர்கள் வீட்டு தாத்தா, பாட்டிகளுக்கு மாபெரும் பங்குண்டு. அதேபோல ஒரு குடும்ப அளவில் வழிநடத்தும் நல்வழிமுறைகளை தங்கள் அனுபவ ரீதியில் தன் குடும்பத்தாருக்கு போதித்து அந்தத் தலைமுறையை செழிக்க செய்வார்கள்.

ஒவ்வொரு குடும்பத்தின் வளர்ச்சியிலும் தூணாக இருந்த முதியோர்களை தன் பிள்ளைகளே முதியோர் இல்லத்தில் சேர்ப்பது தான் வேதனையான விஷயம். பத்து திங்கள் சுமந்து பாலூட்டி, சீராட்டிய அன்னை, அன்பையும் அறிவையும் ஊட்டி வளர்த்த தந்தையும் முதுமை என்ற பருவ நிலையைக் காரணம் காட்டி தங்கள் வாழ்வில் புறக்கணிப்பது ஒரு வகையில் துரோகமே. அது தங்கள் பிள்ளைகளின் எதிர்கால சாதனை வாழ்வில் வைக்கும் கொள்ளி என்றால் அது மிகையல்ல.

இதனிடையே ஏற்கெனவே உலக அளவில் வாழும் பெருவாரியான முதியோர் உடல் மற்றும் மனரீதியிலான வன்கொடுமைகளுக்கு ஆளாக்கப்படுகின்றனர் என்பதையும் தெரிவிக்கிறது மற்றொரு ஆய்வு. இதனை முன்னிறுத்தி முதியோர் எதிர் கொள்ளும் சவால்களையும் பிரச்சினைகளையும் அவதானிக்கத் தொடங்கியது உலக சுகாதார அமைப்பு. அதன் விளைவாக முதியோர், முதியோரைப் பராமரிப்பவர்கள் மற்றும் அரசாங்கம் ஒன்றுகூடி முதியோருக்கு எதிரான கொடுமைகளை எதிர்க்க வேண்டும் என உலக முதியோர் அவமதிப்பு விழிப்புணர்வு நாளாக ஜூன் 15, 2006-ல் அறிவித்தது ஐ.நா. சபை.

இந்நாளில் உடல், உணர்வு, நிதிநிலையில் முதியோர் சந்திக்கும் வன்கொடுமைகளைக் களைய வேண்டும் என்பதை இலக்காக நிர்ணயித்தது ஐ.நா. அதற்கு மூத்த குடிமக்கள், அவர்களின் பராமரிப்பாளர்கள், கல்வியாளர்கள், அரசாங்கம், மற்றும் தொண்டு நிறுவனங்கள் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். முதலில் முதியோருக்கு எதிரான வன்கொடுமைகள் பதிவு செய்யப்பட வேண்டும். அடுத்து, அவர்களுக்கான சுமூகமான சூழலைச் சமூகத்தில் உருவாக்க வேண்டும் என்றது ஐ.நா. இது அடிப்படை மனித உரிமை எனும் பிரகடனத்தையும் முன்வைத்தது.

இந்தியாவைப் பொறுத்தவரை முதியோர் அதிக அளவில் புறக்கணிக்கப்படும் போக்கு நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. இது குறித்து விசாரித்த போது, “தற்போது இந்தியாவில் 10 கோடி முதியோர்கள் இருக்கிறார்கள். இவர்களில் 23 சதவீதம் பேர் துன்புறுத்தலுக்கு உள்ளாகிறார்கள். முதியோரைத் துன்புறுத்துவதில் முதலிடம் மருமகள்களுக்கு. 39 சதவீத துன்புறுத்தல் களுக்கு மருமகள்களே காரணம். 38 சதவீத துன்புறுத்தல்கள், மகன்களால் அரங்கேறுகின்றன. மகன்களுக்கு இணையாக மகள்களும் பெற்றோரைத் துன்புறுத்துவதும் வெளிச்சத்துக்கு வந்திருக்கிறது.

இதையடுத்து இது போன்று அவமதிப்படையும் முதியவர்களுக்கு உதவுவதற்கு என்றே '1253' ஹெல்ப் லைன் உள்ளது. சென்னை மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் ஆதரவற்ற முதியவர்களுக்கு இந்த ஹெல்ப் லைனில் தொடர்புகொண்டு விவரத்தைச் சொல்லி உதவலாம். தமிழகத்தின் மற்ற பகுதிகளில் உள்ளவர்கள் '1800 180 1253' என்ற எண்களுக்குத் தொடர்புகொள்ளலாம் என்கிறார்கள்.

 

பூங்கொடி

 
இப்போது விற்பனையில்

மாதமிருமுறை 15-ஆகஸ்ட்-2017

மேலும்

பிற இதழ்கள்© 2016 Jannal
All Rights Reserved.


Back to Top