ஒவ்வொரு பிறந்த குழந்தைக்கும் ஆரோக்கியம் அவசியம். அந்த ஆரோக்கியம் தாய்ப்பாலில் இருந்துதான் தொடங்குகிறது. அதை ஒவ்வொரு தாயும் புரிந்து , அறிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகவே ஆகஸ்ட் முதல் வாரம் உலக தாய்ப்பாலை வாரமாக உலக சுகாதார மையம் அறிவித்துள்ளது. இதையொட்டி தமிழக அரசு 352 புதிய பாலூட்டும் அறைகளும் மற்றும் முக்கிய நகரங்களில் தாய்ப்பால் வங்கிகளும் துவக்கியுள்ளது.

இந்நிலையில் தாய்ப்பால் வாரத்தையொட்டி எடுக்கப்பட்ட கருத்துக்கணிப்பில் வெறும் 41% பெண்கள் மட்டுமே தங்கள் குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்க முன் வருகின்றனர். அதுவும் குழந்தைக்கு இரண்டரை வயதுவரை தொடர்ந்து தாய்ப்பால் கொடுப்பவர்கள் எண்ணிக்கை இன்னும் குறைவு என்கிறது அந்த கருத்துக்கணிப்பு ஆய்வு. அதிலும் தாய்ப்பால் தருவது பற்றியும் தாய்ப்பால் வங்கிகள் பற்றியும் இன்னும் குறைந்த அளவே விழிப்புணர்வு இருக்கிறது.ஆனால் தாய்ப்பால் தருவதால் குழந்தைகளின் ஆரோக்கியம் சார்ந்த பல பிரச்னைகளுக்கு தீர்வு கிடைக்கிறது.

- தொடர்ந்து தாய்ப்பால் தரப்படும் குழந்தைகளுக்கு தொற்று நோய்த் தாக்கம் குறைவாக இருக்கிறது. குறிப்பாக பிறந்த குழந்தைகளுக்கு எளிதில் தொற்ற கூடிய மார்பக நோய்கள் மற்றும் காது சார்ந்த நோய்கள் குறைகின்றன.

- பிறந்தகுழந்தைகள் திடீரெனக் காரணமின்றி தூக்கத்திலேயே இறப்பது(Sudden Infant death syndrome- SIDS) போன்றவையும் தாய்ப்பால் புகட்டுவதால் எண்ணிக்கையில் குறைகிறது.

-தாய்ப்பால் குடிக்கும் குழந்தைகளில் மலச்சிக்கல் குறைவாகக் காணப்படுகிறது.

- பொதுவாக குழந்தைகளுக்கு ஏற்படும் உணவின் மீதான விருப்பமின்மையும் குறைகிறது.

-முக்கியமாக பிறந்த குழந்தைகளில் அதிகம் தென்படும் குடல் நோய் (Necrotizing Enterocolitis) மற்றும் அதனால் ஏற்படும் இறப்பும் தடுக்கப்படுகிறது.

தாய்ப்பால் தருவது குழந்தைகளுக்கு மட்டும் அல்ல தரும் தாய்க்கும் ஒரு வகையில் நல்லது.

- தாய்ப்பால் தருவது பெண்களில் மார்பகப் புற்றுநோய் தாக்கத்தை தடுக்கிறது. மேலும் சினைப்பை புற்று மற்றும் டைப்-2 வகை சர்க்கரை நோய் தாக்கும் வாய்ப்பும் குறைகிறது.

- தொடர்ந்து ஆறுமாதங்கள் தாய்ப்பால் தருவது உயர் ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்துவதாக மருத்துவ ஆய்வுகளும் தெரிவிக்கின்றன.

- "குழந்தை பிறந்ததும் உடல் எடை கூடிடுச்சு!" என்று கவலைப்படும் தாய்மார்களுக்கு தெரியாத தகவல் தாய்ப்பால் தருவது கணிசமாக உடல் எடையையும் குறைக்கும் என்பது.

தாயின் உடல் நலனுக்காக இல்லை என்றாலும் குழந்தையின் நலனுக்காக தாய்ப்பால் தரவேண்டியது அவசியம். தாய்க்கு பால் சுரக்காத நிலையில் தாய்ப்பால் வங்கிகளில் இருந்து பெற்றுத் தரலாம். நாட்டில் 33% சதவிகிதம் குழந்தைகளுக்கு தாயின் உடல் சார்ந்த பிரச்னையால், குறிப்பாக ஊட்டச்சத்து குறைவால் தாய்ப்பால் கிடைப்பதில்லை. இவர்களில் பெரும்பாலானோர் அடித்தட்டு வர்க்கத்தை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அரசு துவங்கியுள்ள \தாய்ப்பால் வங்கிகள் வழியாக அவர்கள் பயன்பெறலாம் என்றாலும் பிள்ளைகளுக்கு போதுமான அளவு தாய்ப்பால் தந்துவிட்டு பெண்கள் தங்கள் தாய்ப்பாலை வங்கிகளுக்கு தானம் தரமுன்வர வேண்டும்.

- தாய்ப்பால் தானம் தருபவர்கள் ரத்த பரிசோதனைக்குப் பின் தானம் தரவேண்டியது அவசியம். அவர்களுக்கு மரபணு சார்ந்த நோய் அல்லது ஹெச் ஐ வி போன்ற பாதிப்புகள் இருந்தால் தாய்ப்பால் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது.

- தாய்ப்பால் தானம் தரும் பெண்கள் தனது மருத்துவரிடம் தானும் சேயும் ஆரோக்கியமாக இருக்கிறோம் என்று சான்றிதழ் பெற்றுக்கொண்ட பின்னரே அவரிடமிருந்து தாய்ப்பால் பெற்றுக்கொள்ளப்பட வேண்டும்.

- பெரும்பாலும் தானம் பெறப்படும் தாய்ப்பால் குறைமாதத்தில் பிறந்த குழந்தைகளுக்குத் தரப்படும் என்பதால் தானம் தருபவர்கள் ஆரோக்கியமான சூழலில் தாய்ப்பாலை எடுத்துத் தர வேண்டியது மிக மிக அவசியம்.

-சிம்பிளாக சொல்வதானால் ஒரு நாட்டின் பொருளாதாரத்தையே நிர்ணயிப்பதால் பெட்ரோலுக்கு 'வெள்ளைத்தங்கம்' என்கிற சொல்லாடல் உண்டு. உண்மையில் ஒரு உயிரின் ஆதாரத்தை நிர்ணயிக்கும் தாய்ப்பாலுக்குதான் அது மிகவும் பொருந்தும்.

ஐஷ்வர்யாமேலும் சில செய்திகள்

இப்போது விற்பனையில்

மாதமிருமுறை 15-ஆகஸ்ட்-2017

மேலும்

பிற இதழ்கள்© 2016 Jannal
All Rights Reserved.


Back to Top