தற்போதைய நிலவரப்படி ஆயிரம் குழந்தைகளில் 5 குழந்தைகள் பிறவியிலேயே செவித்திறன் குறைபாடுடன் பிறக்கின்றன. இருப்பினும், இக்குறைபாடுள்ள குழந்தைகள் 1 முதல் 3 வயதுக்குள் கண்டறியப்படுவதில்லை. ஆனால், பேச்சு மற்றும் மொழித்திறன் வளர்ச்சிக்கு குழந்தைகளின் இந்த வயது மிக முக்கியமானது. அத்துடன், நான்கில் 3 குழந்தைகளுக்கு நடுக்காதில் ஏற்படும் நோயால் (Otitis medis) பாதிக்கப்படுகின்றனர். காதில் நோய் ஏற்பட்டால் தற்காலிகமாக செவித்திறன் குறைபாடு ஏற்படும். இதனால் பேச்சுத்திறனும் மொழித்திறனும் பாதிக்கப்படும். இந்நோயை குணப்படுத்தாவிடில் இக்குறை நிரந்தரமாகிவிடும். இதன் காரணமாக குழந்தை பிறந்தவுடனேயே செவித்திறன் குறையைக் கண்டறிய பரிசோதனை யும், பின்னர் குழந்தை பருவம் முழுவதும் தொடர்ந்து செவியை பரிசோதித்துக்கொள்வதும் மிக முக்கியமானதாகும்.

ஆனாலும் பெற்றோர்கள் ஆரம்ப கட்டத்திலேயே இந்தக் குறைபாட்டை கண்டறிவதில்லை. குழந்தைகளிடம் பெற்றோர்கள் தொடர்ந்து பேசிக் கொண்டிருக்க வேண்டும். இதன்மூலம், பேச்சு சப்தம் வரும் திசை, நபர்கள், அதன் அர்த்தம் ஆகியவற்றை குழந்தைகள் புரிந்து கொள்ள முற்படுவர். குழந்தைகளின் அசைவுகள், கேட்கும் திறன் ஆகியவற்றை ஆராய்ந்து, இவற்றில் குறைபாடு இருப்பின் ஆடியோ வல்லுநர்களிடம் பரிசோதிக்க வேண்டும். அதேபோல், குழந்தைகளை உறவினர்களுடனும், சக குழந்தைகளுடனும் இயற்கை சூழ்நிலையில் விளையாடவோ, பேசவோ பெற்றோர்கள் அனுமதிக்க வேண்டும். இதன்மூலம், குழந்தைகளின் பார்வை, கேட்கும், பேசும் திறன்கள் மேம்படும்.

இதனிடையே பரம்பரைத் தன்மை, நெருங்கிய உறவினர்களிடையே திருமணம் செய்து கொள்ளுதல், ரத்தப் பிரிவு, கர்ப்ப காலத்தில் தொற்று நோய்கள் பாதிப்பது, கர்ப்பிணி பெண்கள் ஊட்டச்சத்து குன்றியிருப்பது, கர்ப்ப காலத்தில் சில மருந்துகளைச் சாப்பிடுதல், கர்ப்ப காலங்களில் அடிக்கடி நுண்கதிர் வீச்சு படம் எடுத்தல் ஆகியவை குழந்தைக்கு பிறவி செவித் திறன் குறைபாடு ஏற்படுவதற்கான காரணங்களாகும். குழந்தை பிறந்த பிறகு...: குறை மாதத்தில் பிறப்பது மற்றும் ஆயுதம் மூலம் பிறப்பது, குழந்தைக்கு பிறந்தவுடன் மூச்சுத் திணறல் ஏற்படுவது, குழந்தை பிறந்தவுடன் நீண்ட நேரம் அழாமல் இருப்பது, குழந்தையின் எடை 1,200 கிராமுக்கும் குறைவாக இருப்பது ஆகியவை காரணமாக செவித் திறன் குறைபாடு ஏற்படலாம்.

குழந்தை பிறந்தவுடன் மஞ்சள் காமாலை, அதிகமான காய்ச்சல் அல்லது வலிப்பு போன்றவை செவித் திறனைப் பாதிக்க வாய்ப்பு உண்டு. தொற்று நோய்கள், நீண்ட காலமாக ஆன்டிபயாட்டிக் மருந்துகள் சாப்பிடுதல், காதில் அடிபடுதல், தொடர்ந்து அதிக சத்தமான சூழ்நிலையில் இருத்தல், உயர் ரத்த அழுத்த நோய், கட்டுப்பாட்டில் இல்லாத சர்க்கரை நோய், காது நரம்பில் கட்டி இருத்தல், காதில் நீர் வடிதலை அலட்சியம் செய்தல், முதுமை ஆகியவை காரணமாக செவித் திறன் குறைபாடு ஏற்படலாம்.

காது கேட்கும் திறன் குறைபாடு ஏற்படுத்தும் பல காரணங்களை எல்லா சமயங்களிலும் கட்டுப்படுத்த முடியாது. எனினும் காரணத்தை காலதாமதமின்றி அறிந்து கொள்வதன் மூலம் முன்னெச்சரிக்கையாக தடுக்கும் முறைகளைக் கண்டறிந்து செயல்படுவது நல்லது. இதனிடையே காது கேட்புத் திறன் என்பது பல்வேறு நிலைகளைக் கொண்டது. மிகவும் மிதமான நிலையில் இருந்து (MILD) மிகக் கடுமையான நிலைவரை (SEVERE) என்று பல்வேறு நிலைகள் உள்ளன. மிகவும் ஆரம்ப நிலையில் (MILD) மருந்துகளின் மூலமே குணப்படுத்தி விடலாம். மிதமான குறைபாடு( MODERATE) எனில் “ஹியரிங் எய்டு” போன்ற கருவிகள் மூலம் சரி செய்யலாம். ஆனால், மிகவும் கடுமையான நிலை (SEVERE) எனில், “காக்ளியர் இம்ப்ளான்ட்” ஒன்றுதான் வழி. இதற்கு 8 லட்ச ரூபாயிலிருந்து 10 லட்ச ரூபாய் வரை செலவாகும். கவலைப் படாதீர்கள். குழந்தைகளுக்க்கான “காக்ளியர் இம்ப்ளான்ட்” சிகிச்சைக்கான செலவை நமது தமிழக அரசே காப்பீட்டுத் திட்டத்தின் மூலம் செலுத்தி விடுகிறது.
இப்போது விற்பனையில்

மாதமிருமுறை 15-ஆகஸ்ட்-2017

மேலும்

பிற இதழ்கள்© 2016 Jannal
All Rights Reserved.


Back to Top