உலக கோப்பை கபடி போட்டியின் இறுதி ஆட்டத்தில் இந்திய அணி ஈரானை தோற்கடித்து மூன்றாவது முறையாக (ஹாட்ரிக்) சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது என்பதுடன் இதுவரை நடைபெற்றுள்ள போட்டிகளில் இந்திய அணி 8 முறை சாம்பியன் ஆகியுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

3வது உலககோப்பையின் கபடி இறுதிப் போட்டி குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் நேற்று நடந்தது. இதில், இந்தியா, வங்கதேசம், ஈரான், அமெரிக்கா, தென்கொரியா, தாய்லாந்து உள்பட 12 அணிகள் பங்கேற்றன. இந்த அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டு லீக் போட்டிகள் நடத்தப்பட்டன.

இதில் ஏ பிரிவில் தென்கொரியா, இந்தியா ஆகிய அணிகளும், பி பிரிவில் தாய்லாந்து, ஈரான் ஆகிய அணிகளும் முறையே முதல் இரு இடங்களை பிடித்து அரையிறுதி போட்டிக்கு தகுதி பெற்றன. அரையிறுதி போட்டியில், முதல் போட்டியில் ஏ பிரிவில் முதல் இடம் பிடித்த தென்கொரியா அணி ஈரானை சந்தித்தது. முதல் பாதியில் தென் கொரியா அணி 13-11 என்ற புள்ளி கணக்கில் முன்னிலையில் இருந்தது. இரண்டாவது பாதியில் இரு அணிகளும் மாறிமாறி புள்ளிகளை எடுத்ததால் ஆட்டம் பரபரப்பாக இருந்தது. முடிவில் ஈரான் 28-22 என்ற புள்ளி கணக்கில் வெற்றிபெற்று இறுதிபோட்டிக்கு தகுதி பெற்றது. லீக் போட்டியில் நடப்பு சாம்பியன் இந்தியாவை வீழ்த்தியதுடன் தோல்வியே அடையாத தென்கொரிய அணியால் அரையிறுதியில் ஈரானின் அனுபவ ஆட்டத்திற்கு ஈடுகொடுக்க முடியாமல் பரிதாபமாக தோற்று வெளியேறியது.

இரவு 9 மணிக்கு நடந்த மற்றொரு அரையிறுதியில் நடப்பு சாம்பியன் இந்தியா, பி பிரிவில் முதல் இடம் பிடித்த தாய்லாந்துடன் மோதியது. போனஸ் பாயிண்ட்டுடன், புள்ளி கணக்கை தொடங்கிய இந்திய அணி, சிறப்பாக ஆடி புள்ளிகளை அடுத்தடுத்து குவித்தது. ரெய்டு மற்றும் எதிரணி வீரர்களை மடக்கிப்பிடிப்பதில் கச்சிதமாக செயல்பட்ட இந்திய வீரர்களுக்கு ஈடுகொடுக்க முடியாமல் தாய்லாந்து வீரர்கள் திணறினர். முதல் பாதியில் இந்தியா 36-8 என்று முன்னிலை பெற்றிருந்தது. பிற்பாதியிலும் சிறப்பாக செயல்பட்ட இந்திய அணி 73-20 என்ற புள்ளி கணக்கில் வெற்றிபெற்று 3வது முறையாக பைனலுக்குள் நுழைந்தது. ரெய்டு மூலம் மட்டும் இந்தியா 42 புள்ளிகளை திரட்டியது. சந்திப் நர்வால் மட்டும்ரெய்டில் 14 புள்ளிகளை பெற்றுத்தந்தார்.

இதனையடுத்து நேற்று நடைபெற்ற இறுதி ஆட்டத்தில் இந்தியா-ஈரான் மோதின. நம் நாட்டின் உள்ளூர் ரசிகர்களின் உற்சாகத்தை உள்வாங்கியபடி களம் புகுந்த இந்திய வீரர்கள் தொடக்கத்தில் ஈரானின் ஆக்ரோஷத்தை சமாளிக்க முடியாமல் தடுமாறினர். 7–7 என்று வரை சமநிலை நீடித்தது. அதன் பிறகு ஈரானின் கை கொஞ்சம் ஓங்கியது. இந்திய வீரர்கள் போனஸ் புள்ளிகளை எடுப்பதில் மட்டுமே குறியாக இருந்தனர். ஆனால் ஈரான் அணியினர் தைரியமாக இந்திய எல்லைக்கோட்டுக்குள் புகுந்து மிரட்டியதுடன் ஆல்–அவுட்டும் செய்தனர். முதல் பாதியில் இந்தியா 13–18 என்ற புள்ளி கணக்கில் பின்தங்கியது.

பிற்பாதியில் இந்திய வீரர்கள் வெகுண்டெழுந்தனர். யுக்தியை மாற்றிக்கொண்டு அதிரடி தாக்குதலை தொடுத்தனர். இந்திய வீரர் அஜய் தாக்குர், முக்கியமான நேரத்தில் எதிரணியின் இரண்டு வீரர்களை அவுட் செய்தது திருப்பு முனையாக அமைந்தது. இதில் இருந்து இந்திய வீரர்களின் ‘பிடி’ மேலோங்கி ஆட்டத்தின் போக்கும் தலைகீழாக மாறியது. 12 நிமிடங்கள் இருந்த போது ஆட்டத்தை 20–20 என்று சமநிலைக்கு கொண்டு வந்தனர்.

அதன் பிறகு இந்திய வீரர்கள் ஆதிக்கம் செலுத்த, ஈரான் அணி தளர்ந்தது. இறுதி கட்டத்தில் இந்திய வீரர்களின் ‘உடும்பு பிடிக்கும்’, சூப்பர் ரைடுக்கும் தாக்குப்பிடிக்க முடியாமல் மிரண்ட ஈரான் அணி இரண்டு முறை ஆல்–அவுட் ஆனதையடுத்து இந்திய அணி முடிவில் 38–29 என்ற புள்ளி கணக்கில் ஈரானை சாய்த்து ‘ஹாட்ரிக்’ சாதனையுடன் கோப்பையை தன்வசப்படுத்தியது. இதையடுத்து இந்திய அணிக்கு வாழ்த்துக்கள் குவிந்த வண்ணம் உள்ளன.

பிரதமர் மோடி தனது ட்விட்டரில் ‘‘இந்திய அணி மிகச்சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தியது’’ என்று குறிப்பிட்டுள்ளார். மத்திய இணை மந்திரி வி.கே. சிங் ‘‘இந்திய அணியின் வெற்றியால் பெருமை கொள்கிறோம்’’ என்று குறிப்பிட்டுள்ளார். மேலும், உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மற்றும் மத்திய இணை அமைச்சார் பொன்.ராதாகிருஷ்ணன் உள்பட பலர் வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளனர்.மேலும் சில செய்திகள்

இப்போது விற்பனையில்

மாதமிருமுறை 15-ஆகஸ்ட்-2017

மேலும்

பிற இதழ்கள்© 2016 Jannal
All Rights Reserved.


Back to Top