மத்திய தர வர்க்கத்தினரைப் பொறுத்தவரை பங்குச் சந்தைகளில் நேரடியாக முதலீடு செய்வதைவிட, மியூச்சுவல் ஃபண்ட் எனப்படும் பரஸ்பர நிதி திட்டங்களில் முதலீடு செய்வதையே பாதுகாப்பானதாக கருதுகின்றனர். ஒருவர், சரியான மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களைத் தேர்வுசெய்வது எப்படி?
பொருளியல் வல்லுநர் ஆனந்த் ஸ்ரீநிவாசன் தரும் ஆலோசனைகள்: மியூச்சுவல் ஃபண்ட் என்றால் என்ன என்பதை முதலில் பார்க்கலாம். இந்தியப் பங்கு மற்றும் பரிவர்த்தனை வாரியமான ‘செபி’ மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில் முதலீடு செய்ய நிறுவனங்களுக்கு அனுமதி அளிக்கும். இந்த நிறுவனங்கள் Asset management company என்று அழைக்கப்படும். சுருக்கமாக ஏஎம்சி.
இந்த ஏஎம்சிகள் முதலீட்டாளர்களிடம் பணத்தை வசூலித்து, பங்குச் சந்தையிலோ, bond மார்க்கெட்களிலோ அல்லது இரண்டிலுமோ முதலீடு செய்வார்கள். அதற்கு ஒரு கட்டணம் எடுத்துக்கொள்வார்கள். இந்த நிறுவனங்கள் ஒரு நிதி நிர்வாகியை வைத்து இதனை நடத்துவார்கள். இந்த நிதி நிர்வாகிகள்தான் எங்கு முதலீடு செய்வது என்பதை முடிவுசெய்வார்கள். ஆனால், உலகமெங்கும் உள்ள மியூச்சுவல் ஃபண்ட் சந்தைகளைக் கவனித்தபோது ஒரு விஷயம் தெளிவாகியுள்ளது. அதாவது ஒரு நிதி நிர்வாகியால் தனக்கான கட்டணங்களை எடுத்த பிறகு, பங்குச் சந்தையில் முதலீடு செய்யும்போது கிடைக்கும் லாபமானது, Index பங்குகளில் முதலீடு செய்யும்போது கிடைக்கும் லாபத்தைவிட அதிகமாக இருக்காது.
அதாவது பங்குச் சந்தை குறியீட்டு எண் இந்த ஆண்டுத் துவக்கத்தில் 13,000 புள்ளிகளாக இருந்தது என்று வைத்துக் கொள்வோம். வருட முடிவில் அது 18,000மாகிவிடும். அதாவது 5,000 புள்ளி அதிகரிப்பு. சாதாரண நிதி நிர்வாகியால் இதைத் தாண்டி லாபம் ஈட்டித்தர முடியாது. இதனால், இப்போது Index Fund திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளார்கள். இதற்கு நிதி நிர்வாகி தேவையில்லை. இந்தப் பங்குகளைப் பொறுத்தவரை Niftyல் முதல் 50 பங்குகளில் முதலீடு செய்வார்கள். பிறகு அடுத்த ஐம்பதில் முதலீடு செய்வார்கள். இதற்கு நிர்வாகி தேவையில்லை. கம்ப்யூட்டரே இதனைச் செய்யும். இதில் நீண்ட கால லாபம் இருக்கும்.