நீலகிரி மாவட்டத்தில் உள்ள டாஸ்மாக் கடைகளில் கொரோனா தடுப்பூசி போட்டதற்கான சான்றிதழ் உள்ளவர்களுக்கு மட்டுமே மது வழங்க வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் இன்னசென்ட் திவ்யா அறிவித்துள்ளார்.
மாவட்டத்தில் உள்ள அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தி, 100% தடுப்பூசி செலுத்தப்பட்ட நீலகிரி மாவட்டத்தை உருவாக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். நீலகிரி மாவட்டத்தில் மது அருந்துகிறவர்களில் பெரும்பாலோர் கொரோனா தடுப்பூசி எடுத்துக் கொள்ளவி்ல்லை என்ற ஆய்வுத் தகவலின் அடிப்படையிலும், மாவட்டத்தில் 100 சதவீதம் தடுப்பூசி செலுத்தி முடிக்கவேண்டும் என்பதை இலக்காக வைத்தும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக செய்தியாளர்களிடம் தெரிவித்தார் இன்னசென்ட் திவ்யா. நீலகிரி மாவட்டத்தில் மொத்தம் 76 டாஸ்மாக் கடைகள் இயங்கி வருகின்றன. இவற்றில், தினமும் சுமார் 1 கோடி ரூபாய்க்கு மதுபானங்கள் விற்பனை செய்யப்படுகின்றன.
மாவட்டத்தில் 5 லட்சத்திற்கும் மேற்பட்டோர் முதல் தவணை தடுப்பூசி மட்டும் செலுத்திக்கொண்டுள்ளனர். சுமார் 1.5 லட்சம் பேர் இரண்டு தவணை தடுப்பூசிகளையும் போட்டுக்கொண்டனர் என்கிறார்கள் சுகாதாரத் துறை அதிகாரிகள். மாவட்டத்தில் இன்னும் தடுப்பூசி செலுத்திக்கொள்ளாமல் மீதமுள்ளவர்கள் 3 ஆயிரம் முதல் 4 ஆயிரம் பேர்தான். இவர்களும் தடுப்பூசி செலுத்திக்கொண்டால், தடுப்பூசி செலுத்திக்கொள்ளும் தகுதி வாய்ந்தவர்கள் 100 சதவீதம் தடுப்பூசி செலுத்திக்கொண்ட தமிழ்நாட்டின் முதல் மாவட்டமாக நீலகிரி ஆகும். இந்தக் கணக்கு தெரியவந்தவுடன், தடுப்பூசி செலுத்தாதவர்கள் குறித்த தகவல்களை அதிகாரிகள் திரட்டியுள்ளனர். அதில் தடுப்பூசி செலுத்திக்கொள்ளாதவர்களில் பெரும்பாலானோர் மது அருந்துவோர் என்பது கண்டறியப்பட்டுள்ளது.
தடுப்பூசி செலுத்திக்கொண்டால் குறிப்பிட்ட நாட்களுக்கு மது அருந்தக் கூடாது என்ற கட்டுப்பாட்டின் காரணமாக மது அருந்தும் பலர் தொடர்ந்து தடுப்பூசியை நிராகரித்து வருவது தெரியவந்ததாக மாவட்ட நிர்வாகம் கூறுகிறது. இதன் அடிப்படையில் மாநிலத்தில் முதல்முறையாக, நீலகிரி மாவட்டத்தில் உள்ள டாஸ்மாக் கடைகளில் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டதற்கான சான்று மற்றும் ஆதார் கார்டு இருந்தால் மட்டுமே மதுபானம் விநியோகம் செய்யப்படும் என்ற கட்டுப்பாடு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்ட நிர்வாகத்தின் இந்த அறிவிப்புக்கு மது அருந்துவோர் தரப்பில் கண்டனங்கள் தெரிவிக்கப்பட்டாலும், பொதுமக்கள் வெகுவாக வரவேற்றுள்ளனர்.