பிரியங்கா மீது வழக்கு: லக்னெள விமான நிலையத்தில் சத்தீஸ்கர் முதல்வர் தர்னா

காங்கிரஸ் பொதுச்செயலாலர் பிரியங்கா காந்தி மற்றும் 10 பேர் மீது உத்தர பிரதேச மாநிலத்தில் அமைதிக்கு பங்கம் விளைவிக்க முயன்றதாக அம்மாநில காவல்துறையினர் குற்றம்சாட்டி வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

இந்த நிலையில், போலீஸாரால் காவலில் வைக்கப்பட்டுள்ளவர், அச்சமற்றவர் என்றும் அவர் ஓர் உண்மையான காங்கிரஸ்காரர் என்றும் அக்கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். இதற்கிடையே, சீதாபூரில் காவல்துறையினர் கட்டுப்பாட்டில் உள்ள அறையில் வைக்கப்பட்டுள்ள பிரியங்கா காந்தியை சந்திப்பதற்காக காங்கிரஸ் ஆளும் சத்தீஸ்கர் மாநிலத்தின் முதல்வர் பூபேஷ் பாகெல் லக்னெள வந்தார். ஆனால், அவர் பிரியங்கா காந்தியை சந்திக்க அனுமதிக்க முடியாது என்று கூறி உத்தர பிரதேச காவல்துறையினர் தடையாக இருந்தனர். இதனால், அவர் விமான நிலைய வளாகத்திலேயே தர்னாவில் ஈடுபட்டுள்ளார்.

எவ்வித உத்தரவுகளுமின்றி என்னை காவல்துறையினர் தடுக்கிறார்கள் என்று அவர் தமது ட்விட்டர் பக்கம் வாயிலாக தமக்கு நேர்ந்த அனுபவத்தை பகிர்ந்துள்ளார். உத்தர பிரதேச மாநிலத்தின் லக்கிம்பூர் கேரி மாவட்டத்தில் நான்கு விவசாயிகள் உள்பட 8 பேர் பலியான சம்பவம் தொடர்புடைய கார் மோதல் காட்சிகள் என்று கூறப்படும் காணொளியை காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி வெளியிட்டிருக்கிறார்.

அந்த மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட விவசாயிகளை பார்ப்பதற்காக டெல்லியில் இருந்து புறப்பட்ட பிரியங்கா காந்தியை திங்கட்கிழமை அதிகாலை முதல் உத்தர பிரதேச மாநில காவல்துறையினர் தடுத்து வைத்துள்ளனர். அவர் சீதாபூர் அரசு விருந்தினர் இல்லத்தில் உள்ள அறையில் அவர் தங்க வைக்கப்பட்டிருக்கிறார்.

வன்முறை, கலவரம் ஏற்படலாம் என்று அஞ்சப்படும் பகுதிக்கு செல்ல பிரியங்காவும் சில காங்கிரஸாரும் முற்படுவதால், முன்னெச்சரிக்கையாக அவர்கள் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளதாக உத்தர பிரதேச காவல்துறையினர் கூறுகின்றனர். ஆனால், தாங்கள் அனைவரும் சட்டவிரோதமாக கைது செய்யப்பட்டுள்ளதாக பிரியங்கா காந்தி குற்றம்சாட்டியிருக்கிறார்.

- Advertisment -

Latest