கிராமத்தில் இருந்து ஒலிம்பிக் வரை: 2021இல் தடம் பதித்த தமிழக வீராங்கனைகள்

கிராமப்புற, எளிய பின்னணியில் இருந்து தடைகளைத் தாண்டி ஒலிம்பிக் வரை சென்ற தமிழ்நாட்டு வீராங்கனைகள் தனலட்சுமி, சுபா, ரேவதி ஆகிய மூவரும் 2021ஆம் ஆண்டில் பலரின் கவனத்தை ஈர்த்தனர்.

ஜப்பான் தலைநகர் டோக்யோவில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் இந்திய தடகள அணியில் தமிழ்நாட்டைச் சேர்ந்த ஆரோக்கிய ராஜீவ், நாகநாதர் பாண்டி, ரேவதி, சுபா, தனலட்சுமி அகிய 5 பேர் இடம்பெற்றனர். இவர்கள் அனைவருமே கிராமப்புற பின்னணியைக் கொண்டவர்கள்.

ஏழ்மை எதற்கும் தடையில்லை, திறமை, விடா முயற்சியால் உள்ளூர் களத்தில் தொடங்கி உலக விளையாட்டு அரங்கமான ஒலிம்பிக் வரை ஓடலாம் என்று நிருபித்துள்ளவர்கள். குறிப்பாக, 2021ஆம் ஆண்டு ஒலிம்பிக்கில் பங்கேற்ற தனலட்சுமி, சுபா, ரேவதி ஆகிய மூவரும், 2022ஆம் ஆண்டில் அடுத்தடுத்து நடைபெறவுள்ள உலக தடகள சாம்பியன்ஷிப், ஆசிய விளையாட்டுப் போட்டிகள் மற்றும் காமன்வெல்த் போட்டிகளுக்காக தயாராகி வருகிறார்கள். இதற்காக மூவரும் தற்போது திருவனந்தபுரத்தில் தொடர் பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர். பயிற்சிக்கிடையே பிபிசி தமிழிடம் மூவரும் உற்சாகமாக பேசினர்.

தடகளத்தில் இந்தியாவிற்காக, உலக அளவில் மீண்டும் களம் இறங்கும் இவர்களில் திருச்சி திருவெறும்ப்பூர் பகவதிபுரத்திச் சேர்ந்த சுபா, “என்னுடைய அப்பா வெங்கடேசன் கட்டுமான சென்ட்ரிங் பணி செய்கிறார். அம்மா இல்லத்தரசி. சாதாரண குடும்பத்தில் இருந்தாலும், பெற்றோரின் தொடர் ஊக்கத்தால்தான் நான் ஒலிம்பிக் வரை செல்ல முடிந்தது.

இப்போது உலக சாம்பியன்ஷிப் உள்ளிட்ட சர்வதேச போட்டிகளுக்கு தயாராகி வருகிறோம். காயம், பின்னடைவுகளால் சோர்ந்து விடக் கூடாது. தொடர்ந்து பயிற்சி எடுத்து, முயற்சி செய்தால் எல்லாரும் சாதிக்க முடியும். அதற்கேற்ப வாய்ப்புகளும் வசதிகளும் இங்குள்ளன. அவற்றைப் நாம் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.” என்கிறார்.

திருச்சி மாவட்டம் குண்டூர் கிராமத்தைச் சேர்ந்த தனலட்சுமி, “சின்ன வயதில் ஊக்கப்படுத்திய தந்தை சேகர் இறந்து விட்டார். ஆனால், தாய் உஷா கூலி வேலைக்கு சென்று என்னை போட்டிகளுக்கு அனுப்பினார். பின்னர் பயிற்சியாளர் மூலம் கிடைத்த ஸ்பான்சர்களின் உதவியால் தேசிய போட்டிகளுக்கு சென்றேன்.

2021ல் தேசிய தடகளப் போட்டியில் டூட்டிச் சந்தை பின்னுக்கு தள்ளி, தங்கப் பதக்கம் வென்றது பெரிய நம்பிக்கைகை கொடுத்தது. ஒலிம்பிக் வரை சென்றாலும், அடுத்தடுத்து தயாராக பொருளாதார வசதியில்லாமல் இருந்தேன். அண்மையில்,தமிழ்நாடு அரசு மின் வாரியத்தில் பணி நியமனம் பெற்றது பெரும் துணையாக இருக்கிறது. நிச்சயம் 2022ல் முத்திரை பதிப்போம்.” என்கிறார்.

- Advertisment -

Latest