“இது ஒரு கடினமான நேரம். பலர் இறந்துவிட்டார்கள். அவர்கள் போய்விட்டார்கள். இதைப் பற்றி நாம் எதுவும் செய்ய முடியாது.”
ஆளும் பாஜகவின் வழிகாட்டும் அமைப்பாகப் பார்க்கப்படும் இந்து தேசியவாத அமைப்பான, ராஷ்டிரிய ஸ்வயம் சேவக் சங்கத்தின் (ஆர்.எஸ்.எஸ்) தலைவரான மோகன் பாகவத், சென்றவார இறுதியில் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட ‘பாஸிட்டிவிட்டி அன்லிமிடெட்’ தொடர் சொற்பொழிவின் போது இவ்வாறு கூறினார். அவரது நோக்கம், நூறாயிரக்கணக்கான மக்களின் உயிரை பலிவாங்கியுள்ள கொடூரமான கொரோனா வைரசின் இரண்டாவது அலையில் தத்தளிக்கும் இந்தியர்களின் மன உறுதியை உயர்த்துவதாகும்.
அதிகம் பரவக்கூடிய திரிபுகளால் உந்தப்பட்ட இந்த அலை, நிர்வாகத்தின் அலட்சியம் மற்றும் தற்போதைய நெருக்கடிக்குத் தயாராவதில் தோல்வி காரணமாக மேலும் அதிகரித்ததாக, பிரதமர் நரேந்திர மோதியின் பாஜக அரசை எதிர்க்கும் பல நிபுணர்களும் விமர்சகர்களும் தெரிவிக்கின்றனர். “நம்மை விட்டுச்சென்றவர்கள் ஒரு வகையில் விடுதலை பெற்றுள்ளனர். ஏனென்றால் அவர்கள் இந்த சூழ்நிலையை இனி எதிர்கொள்ள வேண்டியதில்லை. நாம் [தப்பிப் பிழைத்தவர்கள்] இப்போது அதை எதிர்கொள்ள வேண்டும், ஒருவரை ஒருவர் பாதுகாக்க வேண்டும்,”என்று பாகவத் தொடர்ந்து பேசினார். “இது ஒரு கடினமான, துக்ககரமான நேரம். நாம் எதிர்மறையாக மாறக்கூடாது. நாம் நேர்மறையாக இருக்க வேண்டும், நம் உடலை ‘கொரோனா நெகட்டிவாக’ வைத்திருக்க வேண்டும்,” என்றார் அவர்.
இந்த உருவகங்களை ஒரு கணம் மறந்துவிடுங்கள். இந்தியர்கள் எதிர்கொண்டுள்ள பேரழிவு உண்மை நிலையை கவனியுங்கள். இந்தியாவில் இதுவரை 2,50,000 க்கும் அதிகமானோர் கோவிட் -19 காரணமாக இறந்துள்ளதாக அதிகாரப்பூர்வ புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. இந்த இறப்புகளில் சுமார் 40% தற்போதைய இரண்டாவது அலையின் போது ஏற்பட்டுள்ளன. ஏப்ரல் மாதத்தில் ஒவ்வொரு நாளும் சராசரியாக 2,20,000 க்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டனர், சராசரியாக 1,500 பேர் இந்த நோயால் இறந்தனர். (உண்மையான எண்ணிக்கை பல மடங்கு அதிகமாக இருக்கலாம்.) மே மாதத்தில் உயிரிழப்போர் எண்ணிக்கை 1 லட்சத்துக்கும் அதிகமாக இருக்கும் என்று பல கணிப்புகள் சுட்டிக்காட்டுகின்றன. ஆக்சிஜன் பற்றாக்குறையால் மக்கள் தங்கள் வீடுகளிலும், மருத்துவமனைகளிலும், நெரிசலான அவசரகால அறைகளுக்கு வெளியேயும் மூச்சு திணறி இறந்துள்ளனர். மருத்துவமனைகளில் படுக்கைகளை தேடி அலைந்து, ஆக்சிஜன், மருத்துவ சாதனங்கள் மற்றும் மருந்துகளை கறுப்புச் சந்தையில் வாங்கும் கட்டாயத்திற்கு தள்ளப்பட்ட குடும்பங்கள், பொருளாதார ரீதியாகவும் நிலைகுலைந்தன.