கேரளாவில் பெய்து வரும் கனமழை காரணமாக இதுவரை குறைந்தது 24 பேர் உயிரிழந்துள்ளது உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் தலைநகர் திருவனந்தபுரத்தில் உள்ள இந்திய அரசின் வானிலை ஆய்வு மையம் இன்று, அக்டோபர் 18, தொடங்கி அக்டோபர் 22 வரையிலான ஐந்து நாட்களுக்கான வானிலை எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது.
இன்று மதியம் ஒரு மணிக்கு வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட மாவட்ட வாரியான வானிலை முன்னறிவிப்பில் இன்று மற்றும் நாளை ஆகிய இரண்டு நாட்களுக்கு கேரளாவில் 14 மாவட்டங்களிலும் மழை காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்க தேவைத் இல்லை (பச்சை நிறக் குறியீடு) என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
– நாளை மறுநாள், அக்டோபர் 20-ஆம் தேதி, காசர்கோடு, கண்ணூர் மற்றும் ஆழப்புழா ஆகிய மூன்று மாவட்டங்களைத் தவிர 11 மாவட்டங்களில் மழை காரணமாக எச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அறிந்து வைத்திருக்க வேண்டியது அவசியம் (மஞ்சள் நிறக் குறியீடு) என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
– அக்டோபர் 21 ஆம் தேதி காசர்கோடு மற்றும் கண்ணூர் தவிர்த்த பிற 12 மாவட்டங்களுக்கும், அக்டோபர் 22-ஆம் தேதி காசர்கோடு மாவட்டம் தவிர்த்த பிற 13 மாவட்டங்களுக்கும் மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
– இன்று வெளியிடப்பட்டுள்ள ஐந்து நாட்களுக்கான மழை அறிவிப்பில் எந்த ஒரு மாவட்டத்திலும் தயார் நிலையில் இருக்க வேண்டும் (ஆரஞ்சு நிறக் குறியீடு) என்றோ முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் (சிவப்பு நிறக் குறியீடு) என்றோ தெரிவிக்கப்படவில்லை.
– எனினும் ஏற்கனவே மழை காரணமாக உண்டான பாதிப்புகளைச் சரி செய்வதற்கான நடவடிக்கைகளும் மீட்பு பணிகளும் கேரளாவில் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.