இராக் கொரோனா மருத்துவமனை தீ விபத்து: ஆக்சிஜன் டேங்க் வெடித்து 82 பேர் பலி

இராக் தலைநகர் பாக்தாதில் கொரோனா வைரஸ் நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்த மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் 82 பேர் கொல்லப்பட்டனர்.

இப்னு காடிப் என்ற அந்த மருத்துவமனையில் சனிக்கிழமை இரவு ஏற்பட்ட இந்த தீ விபத்தில் மேலும் 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். அந்த மருத்துவமனையின் ஆக்சிஜன் டேங்க் வெடித்ததால், தீ பரவியதாக செய்திகள் தெரிவிக்கின்றன. மக்கள் அந்தக் கட்டடத்தில் இருந்து தப்பி வெளியேறுவதையும், தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்க விரைவதையும் காட்டும் காணொளிகள் சமூக ஊடகங்களில் பகிரப்படுகின்றன. இந்த சம்பவம் குறித்து ஞாயிற்றுக்கிழமை விசாரணைக்கு உத்தரவிட்ட இராக் பிரதமர் முஸ்தஃபா அல் காதிமி சுகாதார அமைச்சரை பதவி நீக்கினார்.

அவசர கட்டத்தில் உள்ள நோயாளிகளின் நுரையீரலைப் பிசைந்து மூச்சு முடுக்கும் பணிக்கென வடிவமைக்கப்பட்ட தளத்தில் உள்ள அவசர சிகிச்சைப் பிரிவில் தீ மூண்டதாக இராக் குடிமை பாதுகாப்புப் பிரிவின் தலைவர் ஜெனரல் காதிம் போகன் தெரிவித்தார். மிக மோசமான நிலையில் உள்ள கோவிட்-19 நோயாளிகளுக்கு தீவிர சிகிச்சை அளிப்பதற்கான அப்பிரிவில் 30 நோயாளிகள் இருந்ததாக, ஏ.எஃப்.பி. செய்தி முகமையிடம் மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன. ஞாயிற்றுக்கிழமை அதிகாலை வாக்கில் தீ கட்டுக்குள் வந்ததாக காதிம் போகன் தெரிவித்தார். ஏற்கெனெவே “கோவிட் 19 நோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு எதிரான குற்றம் இது” என்று இராக் அரசின் மனித உரிமை ஆணையம் இந்த விபத்தைப் பற்றி குறிப்பிட்டுள்ளது.

- Advertisment -

Latest